August 24, 2018

திருக்குறள்-பதிவு-5


                            திருக்குறள்-பதிவு-5
                                                   
“”””எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”””””

நன்றி மறப்பது
என்ற சொல்லுக்கும்,
நன்றி கொல்லுதல்
என்ற சொல்லுக்கும்,
சிறிதளவு வேறுபாடு
மட்டுமே உண்டு.


நன்றி மறப்பது
என்றால்,
ஒருவர் நமக்கு
செய்த உதவியை
மறந்து விடுவது
என்று பொருள்.

நன்றி கொல்லுதல்
என்றால்,
நமக்கு உதவி
செய்த ஒருவருக்கு
நாம் தீமையான
செயலைச் செய்வது
என்று பொருள்

பெற்றோர்கள்
ஒரு மகனை பெற்று
வளர்த்து,
படிக்க வைத்து,
வீடு கட்டி கொடுத்து,
கல்யாணம்
செய்து வைத்து,
நல்ல நிலையில்
மகன் வாழ்வதற்கு
தேவையான
நன்மையான செயல்கள்
பலவற்றை செய்து
கொடுத்து,
மகன் வாழ்வதற்காக
தங்கள் வாழ்க்கையையே
அர்ப்பணித்த பெற்றோர்கள்
செய்த உதவியை மகன்
மனதில் கொள்ளாமல்,
பெற்றோர்களுக்கு
முடியாத காலத்தில்
தன்னுடன் தங்க
வைத்து பெற்றோர்களுக்கு
தேவையான உதவிகளைச்
செய்யாமல் இருந்தால்
அது “”நன்றி மறத்தல்””
எனப்படும்.

வாழ்க்கை முழுவதும்
மகனுக்காகவே வாழ்ந்து,
மகனுக்காகவே உழைத்து,
மகனை வாழ வைப்பதற்காக,
கஷ்டப்பட்டு உழைத்த
பெற்றோர்கள் செய்த
உதவியை நினைக்காமல்,
அவர்களை கொண்டு போய்
வயதாகி விட்டது என்ற
காரணத்தினால்
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விடுகிறான் மகன்

வயதான காலத்தில்
தன்னுடைய மகனுடனும்,
மருகளுடனும்,
பேரன், பேத்திகளுடனும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும் என்று
நினைத்த பெற்றோர்களின்
மனம் என்ன
வருத்தங்களை அடையும்

மகனிடமிருந்து பிரிந்து,
மருமகளிடமிருந்து
பிரிந்து,
பேரப்பிள்ளைகளிடமிருந்து
பிரிந்து,
தனிமையில்
உறவுகள் இல்லாத
ஓரிடத்தில்
வாழ்வது என்பது
நினைத்து கூடப் பார்க்க
முடியாத செயல்
இத்தகைய தீமையான
செயலை பெற்றோர்களுக்கு
செய்கிறான் மகன்

இது தான்
பெற்றோர்கள் செய்த
நன்மையான செயலுக்கு
மகன் செய்த
தீமையான செயல்
இது தான்
“””நன்றியைக் கொல்லுதல் “””
எனப்படும்.

சிலர் சொல்வார்கள்
பெற்றோர்கள்
பெற்றார்கள்
நம்மை வளர்க்க
வேண்டியது
அவர்களது கடமை
அதனை உதவி என்று
வைத்துக் கொண்டு
நாம் ஏன் உதவி
செய்ய வேண்டும்
என்று சொல்வார்கள்
அது தவறான வார்த்தை

உலகில் மனிதனால்
அடைக்க முடியாத
கடனை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

 ஒன்று  : பெற்ற கடன்
 இரண்டு : வளர்த்த கடன்

நாம் இந்த உலகத்தில்
மனிதனாக
பிறந்து வருவதற்கும்,
நாம் சுயமாக
சிந்தித்து நம்மை நாமே
காப்பாற்றிக் கொள்ளும்
நிலை வரும் வரைக்கும்
நமக்கு உதவியாக
இருந்தவர்கள் பெற்றோர்கள்.


நாம் பிறந்து வருவதற்கும்,
நாம் வளர்வதற்கும்,
பெற்றோர்கள் நமக்கு
உதவியாகத் தான்
இருந்தார்களே ஒழிய
அது அவர்களது
கடமை இல்லை.

மனிதனால் இந்த
பெற்ற கடன்
வளர்த்த கடன்
என்ற இந்த இரண்டு
கடன்களையும்
அடைக்க முடியாது
எனவே, மனிதன்
பெற்றோர்கள்
செய்த உதவியை
மனதில் கொள்ளாமல்
நன்றியை மறந்து
உதவி செய்யாமல்
இருந்தாலும் பரவாயில்லை
நன்மை செய்த அவர்களுக்கு
தீமை செய்து நன்றியைக்
கொல்லக்கூடாது

எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் என்றால்,
உலகில் செய்யப்படும்
எந்த பாவத்திற்கும்
பிராயச்சித்தம் உண்டு
என்று பொருள்.

உய்வில்லை செய்ந்நன்றி
கொன்ற மகற்கு என்றால்,
நன்றி கொன்ற
பாவத்திற்கு மட்டும்
பிராயச்சித்தம் என்பது
கிடையவே கிடையாது
என்று பொருள்.

உலகில் செய்யப்படும்
எந்த பாவத்திற்கும்
பிராயச்சித்தம்
என்ற ஒன்று உண்டு
ஆனால்
நன்றி கொன்ற
பாவத்திற்கு மட்டும்
பிராயச்சித்தம் என்பது
கிடையவே கிடையாது
என்பதைத் தான்

“”””எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”””””

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரிவிக்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  24-08-2018
///////////////////////////////////////////////////////////


August 22, 2018

திருக்குறள்-பதிவு-4



                       திருக்குறள்-பதிவு-4


“”””நன்றி மறப்பது

நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது

நன்று””””””              

மனிதன் தன் வாழ்வில்
முக்கியமாக இரண்டு
விஷயங்களைத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்

ஒன்று : ஒருவர் நமக்குச்
         செய்த நன்மையான
         செயல்களை மறப்பது
         நல்லது கிடையாது
         என்பதைத் தெரிந்து
         வைத்திருக்க
         வேண்டும்.
        
இரண்டு :ஒருவர் நமக்குச்
         செய்த தீமையான
         செயல்களை
         உடனே மறந்து
         விட வேண்டும்
         என்பதைத் தெரிந்து
         வைத்திருக்க
         வேண்டும்
         

ஒருவர் நமக்குச்
செய்த நன்மையான
செயல்களை மறப்பது
நல்லது கிடையாது
என்றால்,
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
மறந்து விட்டு
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்று பொருள்.

ஒருவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
உடனே மறந்து விட
வேண்டும் என்றால்,
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
மறந்து விட்டு
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டும் நினைக்க
வேண்டும் என்று பொருள்

நன்றாக உற்றுக்
கவனித்தால்
இரண்டுமே ஒரே ஒரு
பொருளைத் தான்
சொல்ல வருகிறது என்பதை
நம்மால் புரிந்து
கொள்ள முடியும்
அதாவது ஒருவர்
நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்பது
தெளிவாகும்.

எதற்காக ஒருவர்
நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்பதை
நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்

நமக்கு குடும்பத்தில்     
தீர்க்க முடியாத கஷ்டம்
ஏற்பட்ட போதெல்லாம்
ஒருவர் நமக்கு
ஓடோடி வந்து
உதவிகள் செய்து
இருக்கிறார்
இக்கட்டான சூழ்நிலையில்
நாம் மாட்டிக் கொண்டு
மன வேதனைப் பட்ட
சமயத்தில் எல்லாம்
நம்முடைய
வேதனையை நீக்கி
துணை புரிந்து
இருக்கிறார்
இழப்புகள் ஏற்பட்டு
வருத்தத்தில்
துவண்ட போதெல்லாம்
நம்முடைய வருத்தத்தில்
பங்கு கொண்டு நம்மை
அந்த வருத்தத்தில்
இருந்து மீட்டு கொண்டு
வந்து இருக்கிறார்
நாம் கஷ்டப்பட்ட
போதெல்லாம்
பல உதவிகள் நமக்காக
செய்து இருக்கிறார்,

நாம் துன்பப்
பட்ட போதெல்லாம்
நமக்காக உதவிகள்
செய்து இருக்கிறார்.
ஆனால் ஒரு சமயம்
அவர் நமக்கு
தெரிந்தோ தெரியாமலோ
நன்மை செய்ய
முடியாமல் போய் இருக்கும்
அவருடைய சூழ்நிலை
எப்படி இருந்ததோ
நமக்கு தெரியாது
தீமையான செயலை
செய்து விட்டார்

அதன் விளைவால்
அவர் நமக்குச் செய்த
பல ஆயிரக்கணக்கான
உதவிகள்
நம் கண்ணுக்கு தெரியாது
அவர் செய்த
அந்த தீமையான
செயல் மட்டும் தான்
நம் நினைவில் நிற்கும்.



அவர் நமக்கு செய்த
ஆயிரக் கணக்கான
நன்மையான செயல்களை
மறந்து விடுவோம்
ஆனால் அவர் நமக்கு
செய்த அந்த
தீமையான செயலை
மட்டுமே நினைத்துக்
கொண்டு இருப்போம்

ஒருவர் நமக்கு
செய்த தீமையான செயலை
மட்டுமே நினைத்துக்
கொண்டிருந்தால்
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்கள்
எதுவும் நமக்கு தெரியாது
அவர் நமக்கு செய்த
தீமையை மட்டுமே
நினைத்துக் கொண்டிருப்போம்

ஒருவர் நமக்கு செய்த
தீமையான செயலை
மறப்பதன் மூலமே
ஒருவர் நமக்கு
செய்த நன்மையான செயலை
நினைவில் வைத்துக்
கொள்ள முடியும்

ஒருவர் நமக்கு
செய்த நன்மையான
செயல்களை மறப்பது
நல்லது கிடையாது


ஒருவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மறக்காமல் இருக்க
வேண்டுமானால்
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
உடனே மறந்து
விட வேண்டும்

ஒருவர் நமக்குச்
செய்த தீமையான
செயல்களை
உடனே மறந்து
விடுவதன் மூலமே
அவர் நமக்குச்
செய்த நன்மையான
செயலை நினைவில்
வைத்துக் கொள்ள
முடியும் என்ற
காரணத்தினால் தான்

நன்றி மறப்பது

நன்றன்று

நன்றல்லது அன்றே

மறப்பது நன்று

என்றார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  21-08-2018
/////////////////////////////////////////////////


August 17, 2018

திருக்குறள்-பதிவு-3


                திருக்குறள்-பதிவு-3

“””ஏதிலார் குற்றம்போல்
தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும்
உயிர்க்கு””””

உலகில் வாழும்
மனிதர்களை மூன்று
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று : போட்டியில் கலந்து
         கொண்டு வெற்றி
         பெறுபவர்கள்

இரண்டு: போட்டியில் கலந்து
         கொண்டு தோல்வி
         அடைபவர்கள்

மூன்று : போட்டியில் கலந்து
         கொள்ளாமல்
         விமர்சிப்பவர்கள்

கிரிக்கெட் போட்டி
ஒன்றை எடுத்துக்
கொண்டால்
அந்த போட்டியில்
கலந்து கொண்டவர்களில்
ஒரு பிரிவினர்
போட்டியிட்டு போராடி
வெற்றி பெறுகிறார்கள்;
மற்றொரு பிரிவினர்
போட்டியில் கலந்து
கொண்டு போட்டியிட்டு
போராடி தோல்வி
அடைகிறார்கள்;
ஆனால் இதில்
கலந்து கொள்ளாமல்
வெளியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
அனைவரும் விமர்சனம்
செய்கிறார்கள்.

போட்டியில்
வெற்றி பெற்றவர்கள்
சரியாக ஆடவில்லை
இருந்தாலும் வெற்றி
பெற்றார்கள் என்று
வெற்றியை விமர்சிப்பார்கள்
தோல்வியடைந்தவர்கள்
பணத்தை
வாங்கிக் கொண்டு
விட்டுக் கொடுத்தார்கள்
அதனால்
தோல்வி அடைந்தார்கள்
என்று தோல்வி
அடைந்தவர்களைப் பற்றி
விமர்சிப்பார்கள்
விமர்சனம் செய்பவர்கள்

விமர்சனம் செய்பவர்கள்
விமர்சனம் செய்து
கொண்டு தான் இருப்பார்கள்
ஆனால் எதிலும் கலந்து
கொள்ள மாட்டார்கள்

அரசியல் என்று
எடுத்துக் கொண்டால்
தேர்தலில் போட்டியிட்டு
ஒரு கட்சி
ஆளுங்கட்சியாகவும்
மற்றொரு கட்சி
எதிர்க்கட்சியாகவும்
இருக்கும்
ஆனால் போட்டியிடாதவர்கள்
விமர்சகர்களாக இருந்து
கொண்டு விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்

வெற்றி பெற்றவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருக்கிறது இருந்தாலும்
வெற்றி பெற்றார்கள்
தோல்வி அடைந்தவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருந்தது அதை
சரி செய்து கொள்ளாத
காரணத்தினால் தான்
தோல்வி அடைந்தார்கள்
என்று பேசுவார்கள்
அவர்களைப் பற்றி
விமர்சனம் செய்வார்கள்

விமர்சனம் செய்பவர்கள்
அனைவரும் களத்தில்
இறங்கி வேலை
செய்ய மாட்டார்கள்.

களத்தில் இறங்கி
வேலை செய்பவர்கள்
ஒன்று வெற்றி
பெறுவார்கள்
அல்லது தோல்வி
அடைவார்கள்
வெற்றி பெற்றவர்கள்
மேலும் உயர் நிலை
அடைவதற்கு தேவையான
முயற்சிகளை செய்து
கொண்டு இருப்பார்கள்
தோல்வி அடைந்தவர்கள்
ஏன் தோல்வி  அடைந்தோம்
என்று யோசித்து
தோல்விக்கான
காரணங்களை அலசி
ஆராய்ந்து அதை
சரி செய்து
வெற்றியை நோக்கி
பயணித்துக் கொண்டிருப்பார்கள்

ஆனால் விமர்சனம்
செய்பவர்கள்
தொடர்ந்து விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்
அவர்கள் வாழ்க்கையில்
எந்த முன்னேற்றமும்
இருக்காது
எந்த நிலையில்
இருக்கிறார்களோ அதே
நிலையில் தான்
இருப்பார்கள்

பிறருடைய குற்றங்களை
கண்டுபிடித்து
விமர்சனம் செய்து
கொண்டிருப்பதால்
இச்சமுதாயத்திற்கு
ஒரு பயனும் இல்லை

எனக்கு ஏன்
படிப்பு வரவில்லை;
எனக்கு ஏன்
நல்ல வேலை
கிடைக்கவில்லை;
எனக்கு ஏன்
அதிக சம்பளத்தில்
வேலை கிடைக்கவில்லை;
என்னுடைய குடும்பம்
ஏன் கஷ்டப்படுகிறது;
என்பதை
யோசித்துப் பார்த்து
தன்னிடம் உள்ள
குற்றங்களை
ஆராய்ந்து பார்த்து
அதை தீர்க்க என்ன
செய்ய வேண்டுமோ
அதை செய்ய வேண்டும்

அப்படி செய்தால்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக அமையும்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக
அமைந்து விட்டால்
சமுதாயம் நல்ல
சமுதாயமாக அமையும்

எனவே,
இச்சமுதாயத்தில்
வாழும் ஒவ்வொரு
தனி மனிதனும்
பிறரிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
விமர்சிப்பதை விட்டு விட்டு
தன்னிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
சரி செய்து கொண்டால்
சமுதாயம் மனிதர்கள்
வாழக்கூடிய
சமுதாயமாக இருக்கும்
இல்லையென்றால்
இச்சமுதாயம்
மனிதர்கள் வாழ இயலாத
சமுதாயமாகத் தான்
இருக்கும்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  17-08-2018
///////////////////////////////////////////////////////////