May 05, 2024

ஜபம்-பதிவு-968 மரணமற்ற அஸ்வத்தாமன்-100 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-968

மரணமற்ற அஸ்வத்தாமன்-100

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


சாதாரண குடும்பமும், அரச குடும்பமும் இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறது. இன்று வேறு ஒரு வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு நாளை நம் அரச குடும்பத்திலும் நடக்கும் என்பதை அறியாமல் இருந்தீர்கள். இப்போது நடந்து விட்டது. சத்தம் போடுகிறீர்கள்

வீட்டை திருத்த முயற்சி செய்கிறீர்கள். 


நாட்டை திருத்தினால் வீடு திருந்தும் என்பது தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள்.

பாதிப்பு யாருக்கோ ஏற்படுகிறது என்று கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்தீர்கள். உங்களுக்கு ஏற்படும் போது சத்தம் போடுகிறீர்கள்

தவறை துரியோதனன் செய்யவில்லை. 


நீங்கள் அனைவரும் செய்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு இனிமேலாவது சமுதாயத்தை திருத்த முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். 


சமுதாயம் திருந்தவில்லையா, சமுதாயம் மாறவில்லையா சட்டம் கொண்டு வாருங்கள்.

இந்த செயல் தொடர்கதையாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்


விதுரர் : நீ சொல்வது அவ்வளவு எளிதானது கிடையாது சமுதாயத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. நீ சொன்னதை செய்தால் அரசாங்கத்திற்கே ஆபத்து ஏற்படும். 


ஆட்சிக்கே பாதிப்பு ஏற்படும். சமுதாயத்தில் குழப்பம் தான் மிஞ்சும்.


அஸ்வத்தாமன் : அப்படி என்றால் இங்கே நடப்பதை தவறு என்று சொல்லாமல், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல், வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்ளாமல், கோபப்படாமல், சத்தம் போடாமல், அமைதியாக இருங்கள் நடந்து கொண்டிருக்கும் செயலைப் பார்த்துக் கொண்டிருங்கள். 


வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

துரியோதனன் : அற்புதம், அபாரம் அஸ்வத்தாமா! உண்மையை அனைவருடைய மனதிலும் ஏறும்படி அடித்துக் கூறி இருக்கிறாய். உரக்கச் சொல்லி இருக்கிறாய். 


இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்படி கூறியிருக்கிறாய். இனியும் இவர்கள் நான் செய்தது தவறு என்று சொல்வார்களேயானால், அவர்கள் பாண்டவர்கள் மேல் உள்ள அன்பினால் அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்பவன் தான் நண்பன் என்பதை நிரூபித்து விட்டாய் அஸ்வத்தாமா! நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும் இந்த சமுதாயத்திற்கு சொன்ன சொற்கள்.


 உண்மையைக் கொண்ட சொற்கள். என் மேல் உள்ள களங்கத்தை நீக்கும் சொற்கள். என்னை கெட்டவனாக நினைக்க வைக்க சில சதிகார்களின் வார்த்தைகளை பொய்யாக்கும் சொற்கள். நான் குற்றவாளி இல்லை நல்லவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தும் சொற்கள். நான் செய்த செயல் சரியானது தான் என்பதை நிரூபிக்கும் சொற்கள்.


இந்தத் துரியோதனன் கெட்டவன் இல்லை நல்லவன் என்பதை நிரூபிக்கும் சொற்கள். உலக நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்தச் செயல்களைச் செய்தான் இந்த துரியோதனன் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிக்கும் சொற்கள்.


நண்பா அஸ்வத்தாமா! என் மேல் உள்ள களங்கத்தை நீக்கி விட்டாய். என்மேல் சாட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை நீக்கி விட்டாய். நான் நல்லவன் களங்கமில்லாதவன். நீதி நெறி தவறாதவன், சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவன், உலக நடைமுறைகளைத் தான் பிற்பற்றுபவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தி விட்டாய்.


துரியோதனன் செய்த செயல் தவறானது என்று 

நாளைய உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும், 


இந்தத் துரியோதனன் செய்த செயல் சரியானது தான் என்று 

நாளைய உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 


யாரைக் கண்டும் பயப்படாமல், 

எதனைக் கண்டும் பயப்படாமல், 

அதிகாரவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், 

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், 

ஆதிக்கவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்டாமல், 

துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசினால் 

எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், 


உன்னைப் பற்றிக் கவலைப்படாமல், 

உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், 


உன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், 

நீ பேசிய பேச்சுக்கள் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் 

என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.


இந்த உலகம் உள்ளவரை, நட்புக்கு இலக்கணமாக உன்னுடைய பெயரே இருக்கும். அப்படி இல்லை என்றால் தேவைப்படுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக வேறு ஒருவர் பெயரை நட்புக்கு இலக்கணமாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.


அஸ்வத்தாமன் : நீ என்னை உன்னுடைய உண்மையான நண்பனாக 

ஏற்றுக் கொண்டாயோ இல்லையோ எனக்குத் தெரியாது. 

ஆனால் நான் உன்னை என்னுடைய 

உண்மையான நண்பனாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். 

அதனால் பேசினேன். 


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-967 மரணமற்ற அஸ்வத்தாமன்-99 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-967

மரணமற்ற அஸ்வத்தாமன்-99

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டால் அது பாதிப்பு கிடையாது 

ஆனால், அரச குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டும் அது பாதிப்பா?


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் கஷ்டப்பட்டால் அது கஷ்டம் கிடையாது 

ஆனால்,அரச குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டும் அது கஷ்டமா?


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் 

அவமானப்படுத்தப்பட்டால் மட்டும் அது அவமானம் கிடையாது

ஆனால், அரச குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டும் அது அவமானமா?


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் அசிங்கப்பட்டால் மட்டும் அது அசிங்கம் கிடையாது 

ஆனால், அரச குடும்பம் அசிங்கப்பட்டால் மட்டும் அது அசிங்கமா?


அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரு நீதி?

அரச குடும்பத்துக்கு மட்டும் ஒரு நீதியா?


நன்றாக இருக்கிறது உங்கள் நீதி, நியாயம்


இந்த உலகத்தில் இந்த செயல் யாருக்கும் நடக்காதது போலவும்,

உலகத்திலேயே இந்த செயல் 

எந்தப் பெண்ணுக்கும் நடக்காதது போலவும்,

உலகத்திலேயே இந்த செயல் 

முதன் முதலாக பாஞ்சாலிக்குத் தான் நடந்தது போலவும்,

பாஞ்சாலிக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டது போலவும், 

உலகத்திலேயே பாஞ்சாலிக்கு நடந்தது 

வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்காதது போலவும்,

கத்தி, ஆர்ப்பாட்டம் போட்டுக் கொண்டு, கதறி அழுது கொண்டு இருக்கிறீர்கள்


பாஞ்சாலிக்கு நடந்தது இந்த உலகத்தில் பெண்களுக்கு

காலம் காலமாக நடந்து கொண்டு தானே இருக்கிறது.


ஆதிக்கவர்க்கத்தினாரால் இந்த செயல் தொடர்ந்து

நடந்து கொண்டுதானே இருக்கிறது.


ஆதிக்கவாதிகள் அடிமைகளான பெண்களை 

இவ்வாறு நடத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்.


இப்போதும் பாஞ்சாலிக்கு நடந்தது 

அடிமைப் பெண்களுக்கு நடந்து கொண்டு தானே இருக்கிறது.


அப்போது எல்லாம் அதை தடுக்க முன்வராதவர்கள்,

அப்போது எல்லாம் அதை நிறுத்த முன்வராதவர்கள்,

அப்போது எல்லாம் அதை தவறு என்று சொல்ல முன்வராதவர்கள்,

இப்போது எதற்காக தவறு என்கிறீர்கள்.


ஏனென்றால், பாதிக்கப்பட்டது 

அதிகார வர்க்கத்து பெண் ,

அரச குடும்பத்து பெண்,

அடிமைப்பெண் கிடையாது


இது பாஞ்சாலிக்கு மட்டும் நேர்ந்த கொடுமைகளின் உச்சம் என்பவர்கள்

முன்னர் அடிமைகள் தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆகிய அனைவருக்கும் 

நடந்த கொடுமைகளின் உச்சத்தை என்ன என்று சொல்வார்கள்.


அவர்கள் சந்தித்த கொடுமைகளின் சிறு துளி கூட பாஞ்சாலி அனுபவிக்கவில்லை.


சாதாரண வீட்டில் இந்த விஷயம் நடந்து இருந்தால் இது பெரியதாகத் தெரிந்து இருக்காது.


அரச குடும்பத்தில் அல்லவா நடந்து இருக்கிறது. அதனால் தான் இந்த விஷயம் பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. 

நடந்த விஷயத்திற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.


இந்த விஷயத்தில் எந்த ஒரு தவறும் நடக்கவுமில்லை,

யாரும் எந்த ஒரு தவறும் செய்யவுமில்லை, 

துரியோதனன் செய்த செயலில் எந்த தவறும் இருக்கவுமில்லை.


விதுரர் : தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே ஆண் பெண் பேதமின்றி மேலாடை அணியும் உரிமை இந்த சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது. 

பெண்களின் மேலாடை அணியும் உரிமை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளின் கைகளில் தான் இருந்தது. 


அவர்கள் தான் மேலாடை அணிவதை ஆதிக்கத்தின் பெயரால் தடை செய்தார்கள்.


அஸ்வத்தாமன் : தவறான ஒன்று நடைமுறையில் இருக்கும் போது அதை நீக்க சட்டம் கொண்டு வர வேண்டியது தானே. 


அலட்சியமாக இருந்தீர்கள். 

பக்கத்து வீடு தீப்பற்றி எரியும் போது அதை அணைக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள். 


இப்போது உங்கள் வீடு தீப்பற்றி எரியும் போது மட்டும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறீர்கள்

இந்த சமுதாயத்தில் உள்ளதை கண்டும் காணாமல் இருந்தீர்கள் இப்போது உங்கள் வீட்டில் நடக்கும் போது சத்தம் போடுகிறீர்கள்


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-966 மரணமற்ற அஸ்வத்தாமன்-98 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-966

மரணமற்ற அஸ்வத்தாமன்-98

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


துரியோதனனின் அடிமைகள் இந்த பாண்டவர்கள் என்பதை இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை முட்டி போட்டு இருக்க சொல்லி இருக்கிறான்.


பாண்டவர்களைப் பொறுத்தவரை துரியோதனன் செய்தது சரி தான். ஒரு முதலாளி அடிமைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ? அப்படித் தான் துரியோதனன் நடந்து கொண்டிருக்கிறான்.


இதில் தவறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. துரியோதனன் செய்த செயல் தவறு என்று சொல்ல முடியாது.

துரியோதனன் முதலாளி என்ற நிலையில் அடிமைகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நட்த்தியிருக்கிறான்

இதில் ஒன்றும் தப்பு இல்லை. அடிமைகளை இந்த சமுதாயம் எப்படி நடத்திக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே துரியோதனன் தனக்கு அடிமையான பாண்டவர்களை நடத்தினான்.


பாஞ்சாலியும் தருமனால் சூதில் பணயமாக வைத்து தோற்கப்படுகிறாள். அதனால் அவளும் கௌரவர்களுக்கு அடிமை ஆகிறாள். துரியோதனனுக்கு அடிமையாகிறாள். அடிமையானதாலேயே அவளது மேலாடை நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது 

மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் அடிமைக்கில்லை என்பதை துரியோதனன் அறிந்து வைத்திருந்த காரணத்தினால் துச்சாதனன் மூலம் பாஞ்சாலியை அழைத்து வரச்செய்து அவளுடைய மார்புத் துணியை நீக்கச் சொன்னான்.


மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் அடிமைக்கில்லை என்பதை இந்த அவையில் இருக்கும் பீஷ்மர், விதுரர், என்னுடைய தந்தை துரோணர், கிருபர், அரசப் பிரநிதிகள்,  அறிஞர்கள், மேதைகள், மக்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். 


இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்து இருந்த காரணத்தினால், 

துரியோதனன் செய்யச் சொன்ன செயல் சரியான செயல் என்ற காரணத்தினாலும், 

துச்சாதனன் செய்த செயல் சரியானது என்ற காரணத்தினாலும் தான், 

துச்சாதனன் பாஞ்சாலியின் மேலாடையை நீக்கும் போது 

அனைவரும் தயவு செய்து நிறுத்து என்று கெஞ்சினார்களே தவிர

அவர்கள் நிறுத்தவுமில்லை,

அவர்களால் நிறுத்தவும் முடியாது.. 


அடிமைகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட ஒன்றாக இந்த சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பது இங்கே அமர்ந்திருக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்கும், அதிகாரம் கொண்டவர்களுக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் தெரியாதது போல் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


துரியோதனன் கட்டளையின் படி துச்சாதனன் அரசவையில் வைத்து பாஞ்சாலியின்  சேலையை உரியக் காரணம் பாஞ்சாலியை அவமானப்படுத்துவதற்காகக் கிடையாது. பாஞ்சாலியை அடிமைப்படுத்துவதற்காகத் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.


ஏனென்றால், அன்று முதல் இன்று வரை மேலாடை அணியும் உரிமை என்பது சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமான உரிமையாக இருந்து கொண்டிருக்கிறது. மேலாடை அணியும் உரிமை அடிமைகளுக்கு கிடையாது.


இந்த உண்மை துரியோதனனுக்கும் தெரியும். இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் 

மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் 

இந்த சமுதாயம் இருக்கிறது 

இந்த கொடுமையான நிலை நீக்கப்பட வேண்டும். 

இந்த இழிநிலைவான நிலை மாற்றப்பட வேண்டும் 

அதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும்.


சட்டம் கொண்டு வந்து 

இந்த கொடுமையான நிலையை மாற்ற வேண்டும் 

என்று துரியோதனன் பலமுறை சொன்ன போது 

வாய் மூடி மௌனமாக இருந்தவர்கள் 

இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் 

அரச குடும்பத்து பெண் பாதிக்கப்பட்டாள் என்பதற்காகவா?


அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 

இவ்வளவு நாள் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள் 

அவர்கள் கண்ணில் படவில்லையா? 

அல்லது 

இந்தக் கொடுமை நிலை அவர்களுக்கு தெரிந்தும் 

தெரியாதது போல் இருந்து விட்டார்களா? 

அல்லது

கண்டும் காணாதது போல் நடந்து கொண்டார்களா? 

அல்லது 

இந்தக் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு 

கல் நெஞ்சம் கொண்டு இருந்தார்களா ?


அரச குடும்பத்து பெண்ணின் மேலாடையை கழட்டும் போது சண்டைக்கு வரும் அவர்கள் அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மேலாடை இல்லாமல் இருக்கும் போது எங்கே சென்றார்கள்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-965 மரணமற்ற அஸ்வத்தாமன்-97 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-965

மரணமற்ற அஸ்வத்தாமன்-97

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


விதுரர்  : எந்த நடைமுறையைச் சொல்கிறாய்?


அஸ்வத்தாமன் : அனைத்தும் தெரிந்தவர் தாங்கள். உங்களுக்குத் தெரியாத உலக நடைமுறை என்று என்ன இருக்கிறது. நான் சொல்லித் தான் அதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 


அனைத்தும் தங்களுக்கே தெரியும்.


பீஷ்மர் :  நீ சொல்வது புதியதாக இருக்கிறது. என்ன நடைமுறையைச் சொல்ல வருகிறாய். எந்த நடைமுறையை துரியோதனன் பின்பற்றி செய்தான் என்கிறாய். புரியும்படிச் சொல்.


அஸ்வத்தாமன் : புரியும் படி விவரமாகச் சொல்வதற்கு நான் ஒன்றும் விதுரர் அளவிற்கு பெரிய அறிவாளி இல்லை. அனைத்தும் அறிந்தவன் இல்லை. எனக்கு தெரிந்த உலக நடைமுறையைச் சொன்னேன். விதுரருக்கே தெரியாத நடைமுறை இந்த உலகத்தில் என்ன இருக்கிறது 


கிருபர் : நீ ஏதோ தவறாக சொல்கிறாய். ஒருவருக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 


அஸ்வத்தாமன் : விதுரருக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாது போல் இருக்கலாம். உலக நடைமுறையைச் சொன்னால் துரியோதனன் செய்தது சரியானது என்று ஆகி விடும். என்ற காரணத்தினால் தனக்கு தெரிந்ததை சொல்லாமலும் இருக்கலாம். உண்மையை மறைத்தும் இருக்கலாம்.


பீஷ்மர் : என்ன சொல்ல வருகிறாய் அஸ்வத்தாமா?


அஸ்வத்தாமன் : உலகத்தில் உள்ள நடைமுறையைச் சொல்கிறேன். உண்மையைச் சொல்கிறேன்.


பீஷ்மர் : விதுரரே அஸ்வத்தாமன் சொல்லும் உலக நடைமுறை பற்றி உங்களுக்கு தெரியுமா?


விதுரர் : அஸ்வத்தாமன் முதலில் சொல்லட்டும். அவன் சொல்வது உலக நடைமுறையில் இருக்கிறதா என்பதையும், அவன் சொல்வது சரியானது தானா என்பதையும், பின்பு ஆராய்வோம். 


அஸ்வத்தாமா நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதை முதலில் சொல்.


 அஸ்வத்தாமன் : எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எல்லாம் அறிந்த மேதை விதுரருக்கே தெரியவில்லை என்பது வேடிக்கையான விஷயம். இதை நான் நம்ப வேண்டும் என்று சொல்கிறார். 


இருந்தாலும் நான் சொல்கிறேன். இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். விஷயம் தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல் நடிப்பவர்களுக்காகச் சொல்கிறேன்.


சூதாட்டத்தில் தன்னையும் தம்பிகளையும் பணயமாக வைத்துத் தோற்ற தருமனும், அவனுடைய தம்பிகளும் உடனே கௌரவர்களுக்கு அடிமையாகிறார்கள். 


துரியோதனனுக்கு அடிமையாகிறார்கள்.

துரியோதனன் முதலாளியாகிறான், பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையாகிறார்கள்.


முதலாளிகளுக்கு அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்த உரிமையுண்டு.

இடம், நேரம், காலம், சூழ்நிலை பொறுத்து அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமையை முதலாளிகள் பெற்று உள்ளனர்.


அடிமைகள் மேல் சட்டையைப் போடுவதில்லை. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

அடிமைகள் மேல் சட்டையைப் போடக் கூடாது. மேல் சட்டை போடாமல் இருந்தால் தான் அவர்கள் அடிமைகள். அடிமைகள் மேல் சட்டை போடாமல் இருப்பது தான் அவர்கள் அடிமை என்பதற்கு அடையாளம்.


முதலாளிகள் என்ன செயலைச் செய்யச் சொல்கிறார்களோ? அந்த செயலைச் செய்ய வேண்டியது அடிமைகளின் கடமை. 


செய்யவில்லை என்றால் செய்ய வைக்க வேண்டியது முதலாளியின் கடமை. செய்யவில்லை என்றால் தண்டனை கூட கொடுக்கலாம் முதலாளிகள்.

அடிமைகளின் மேல் முதலாளிக்கு முழு அதிகாரம் உண்டு.


அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்த முழு உரிமை உண்டு.

அந்த அடிப்படையில் தான் துரியோதனன் தனக்கு அடிமைகளாக பாண்டவர்கள் கிடைத்தவுடன் முதல் காரியமாக அவர்களுடைய சட்டையை கழட்ட சொன்னான்.


பாண்டவர்கள் துரியோதனனுடைய அடிமைகள் என்று இந்த உலகத்திற்குக் காட்ட வேண்டும் என்றால் பாண்டவர்கள் மேல் சட்டை போடக் கூடாது.


துரியோதனின் அடிமைகள் பாண்டவர்கள் என்று 

இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காவும், 


பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்று 

இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 


பாண்டவர்களுக்கு இனி துரியோதனன் தான் முதலாளி 

பாண்டவர்கள் அவனுக்கு அடிமைகள் என்று 

இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,  


துரியோதனன் சொற்படி தான் பாண்டவர்கள் கேட்க வேண்டும் என்று 

இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் 


அவர்களுடைய மேல் சட்டையை முதலில் கழட்ட வைத்தான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-964 மரணமற்ற அஸ்வத்தாமன்-96 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-964

மரணமற்ற அஸ்வத்தாமன்-96

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


(அஸ்தினாபுரத்தின் அவையில் பாஞ்சாலியின் சேலை அவிழ்ப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில்)


பீஷ்மர் : துரியோதனா போதும் நிறுத்து !


துரியோதனன் : நான் தவறா செய்து கொண்டிருக்கிறேன் நிறுத்துவதற்கு? 


பீஷ்மர் : தவறு செய்பவர்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்றும் தெரியாது. செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


துரியோதனன் : யாராவது தவறு செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் போய் சொல்லுங்கள், தவறு செய்யாதீர்கள் என்று.


பீஷ்மர் : தவறுக்கு மேலான தவறை செய்து கொண்டிருப்பதால் தான் உன்னிடம் சொல்கிறேன். செய்த தவறு போதும் . இதற்கு மேல் செய்யாதே என்று. 


துரியோதனன் : அப்படி என்ன தவறை செய்து கொண்டிருக்கிறேன். நிறுத்துவதற்கு?


பீஷ்மர் : பாண்டவர்களுக்கு நீ நடத்தும் கொடுமைகளைச் சொல்கிறேன்.


துரியோதனன் : அறிவு நிறைந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள், சட்டம் தெரிந்தவர்கள் நான் செய்வதை தவறு என்று சொல்ல மாட்டார்கள். 


அடிமைகளை எப்படி நடத்த வேண்டுமோ? அப்படித் தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.


பீஷ்மர் : பொறுமைக்கும் எல்லை உண்டு, பொறுமை எல்லை கடந்தால் என்ன  நடக்கும் தெரியுமா?


துரியோதனன் : நான் தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை. ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் 

பொறுமைக்கு எல்லை என்பதே கிடையாது. 


எல்லை என்ற ஒன்று உண்டு என்றால் அது பொறுமையாக இருக்கவே முடியாது. 

நான் வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவர்களை எப்படி நடத்த வேண்டுமோ? அப்படி தானே நடத்திக் கொண்டிருக்கிறேன். 


நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? என்னுடைய செயலில் என்ன தவறைக் கண்டீர்கள்? 


விதுரர்  : நீ அவமானப்படுத்திக் கொண்டிருப்பது உன் உடன் பிறந்தவர்களை!


துரியோதனன் : எங்களை எப்போது பாண்டவர்கள் உடன்பிறந்தவர்களாக நினைத்து இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை உடன்பிறந்தவர்களாக நினைப்பதற்கு?


விதுரர்  : பாண்டவர்கள் யாரையும் விரோதிகளாக நினைப்பதில்லை.


துரியோதனன் : என்னிடம் நண்பனாக இருப்பதற்குத் தகுதி தேவையில்லை. ஆனால், விரோதியாக இருப்பதற்குத் தகுதி வேண்டும். எந்தத் தகுதியும் இல்லாத பாண்டவர்களை நான் எப்படி விரோதியாக நினைக்க முடியும்.


பாண்டவர்கள் வெற்றி பெற்று கௌரவர்கள் தோற்றால் இப்படி பேசுவீர்களா?

 பாண்டவர்கள் என்பதால் பாசம் ஓடி வருகிறதா?


கிருபர் : யாராக இருந்தாலும் தவறு செய்தால் தவறை தவறு என்று தான் சொல்வோம்! இத்துடன் நிறுத்திக் கொள்.


அஸ்வத்தாமன் : துரியோதனன் எந்தத் தவறும் செய்யவில்லை. பிறகு எதற்கு நிறுத்த வேண்டும். நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


விதுரர்  : அஸ்வத்தாமா!  நீயா இவ்வாறு சொல்கிறாய்?


அஸ்வத்தாமன் : ஆமாம் நான் தான் சொல்கிறேன். இந்த அஸ்வத்தாமன் தான் சொல்கிறேன். துரியோதனன் செய்தது தவறு இல்லை என்று சொல்கிறேன்.


கிருபர் : துரியோதனன் செய்ததை சரி என்கிறாயா?


அஸ்வத்தாமன் : ஆமாம்! துரியோதனன் செய்தது சரி தான். அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. துரியோதனன் செய்த செயல் சரியாக இருக்கும் போது அதில் தவறு எப்படி இருக்கும்.


பீஷ்மர் : துரியோதனன், அக்கிரமமான வேலை செய்து கொண்டிருக்கிறான். அதை சரியானது என்கிறாய்.


அஸ்வத்தாமன் : அவன் அக்கிரமமான செயல் எதுவும் செய்யவில்லை. 

என்ன செய்ய வேண்டுமோ? அதைச் செய்திருக்கிறான். 

எப்படி செய்ய வேண்டுமோ? அதை சரியாகச் செய்திருக்கிறான்.


விதுரர்  : எதை வைத்து துரியோதனன் செய்வதை சரியானது என்கிறாய்.


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்த செயலை வைத்துத் தான்.


கிருபர் : அவன் இரக்கமற்ற செயலை அல்லவா செய்திருக்கிறான்.


அஸ்வத்தாமன் : இந்த சமுதாயத்தில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதைத் தானே செய்திருக்கிறான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

May 03, 2024

தென்காசி சரித்திரம்(18)-அரியூர் மலையடிவாரத்தில் அகத்தியர் சிலை கூறும் அகத்தியர் பற்றிய உண்மைகள்-03-05-2024

 

தென்காசி சரித்திரம்(18)-அரியூர் மலையடிவாரத்தில் அகத்தியர் சிலை கூறும் அகத்தியர் பற்றிய உண்மைகள்-03-05-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோயில் தாலூகா

அரியூர்

மலையடிவாரத்தில்

எழுந்தருளியிருக்கும்

அகத்தியர் சிலை

மற்றும்

கல்வெட்டின்

மூலம்

பல்வேறு வரலாற்று

உண்மைகளையும்,

அகத்தியர் பற்றிய

உண்மைகளையும்,

அகத்தியரைப்

பற்றி அறியாத

பல செய்திகளையும்

வரலாற்று

ஆய்வாளர்கள்,

கல்வெட்டு

ஆய்வாளர்கள்,

கள ஆய்வாளர்கள்

ஆகியோரின்

மூலம்

தெரிந்து கொள்ளலாம்.

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----03-05-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




May 01, 2024

ஜபம்-பதிவு-963 மரணமற்ற அஸ்வத்தாமன்-95 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-963

மரணமற்ற அஸ்வத்தாமன்-95

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

நீ உண்மையான வீரன்.அதை உன் செயலில் இருந்தே தெரிந்து கொண்டேன் நான் சொன்ன வார்த்தைகள் தவறு என்று எப்போது தைரியமாக சொன்னாயோ அப்போதே நீ வீரன் என்பது நிரூபணமாகி விட்டது

ஆகவே உன்னை சோதிப்பதற்கு தனிப்பட்ட முறையில் சோதனை வைத்து நீ வீரனா என்று சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நான் வைத்த அனைத்து சோதனைகளிலும் நீ வெற்றி பெற்று விட்டாய். அறிவில் சிறந்தவன் என்பதைக் காட்டி விட்டாய். வீரத்தில் உயர்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டாய்.

பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு முழு தகுதி உடையவனாக இருக்கிறாய். உனக்கு பாசுபதாஸ்திரம் அளிக்கிறேன். அஸ்வத்தாமா பெற்றுக் கொள்.

அஸ்வத்தாமன் பாசுபதாஸ்திரம் சிவனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன்.சிவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறான்

சிவன்: எல்லா நலமும் பெற்று வாழ்க

(சிவன் மறைந்து விடுகிறார்.)

பாசுபதாஸ்திரத்தை தன்னால் உருவாக்கப்பட்ட அதர்வண வேதத்தின் சக்தியைக் கொண்டும்,எல்லாம் வல்ல ஈசனையும், சக்தியையும் முதற்கடவுளாக உருவேற்றி பாசுபதாஸ்திரம்  என்று சொல்லப்படும் சிவபாணத்தை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு அஸ்திரமாக அஸ்வத்தாமன் மாற்றுகிறார்.

மரணமற்ற அஸ்வத்தாமன் தயாராகி விட்டான்

 

(இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்         

 

விஷ்ணுவுக்குரிய அஸ்திரம் நாராயண அஸ்திரம்,

பிரம்மாவிற்குரிய அஸ்திரம் பிரம்மாஸ்திரம்,

சிவனுக்குரிய அஸ்திரம் பாசுபதாஸ்திரம்,

மும்மூர்த்திகளுக்குரிய அஸ்திரங்களை வைத்திருந்தவன்

துவபாரயுகத்தில் அஸ்வத்தாமன் மட்டுமே

 

பிரம்மாஸ்திரம் கற்றவன் மனிதரில் சிறந்தவன்,

நாராயண அஸ்திரம் தெரிந்தவன் தேவர்களுக்கு சமமானவன்,

பாசுபதம் கற்றவன் தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவன்.

துவாபர யுகத்தில்

நாராயணாஸ்திரம்,

பிரம்மாஸ்திரம்,

பாசுபதாஸ்திரம்

பெற்ற ஒரே ஒரு வீரன்

அஸ்வத்தாமன்

மட்டுமே.!

 

மகாபாரதக் கதையில்

இந்த மூன்று அஸ்திரங்களையும் வைத்திருந்தவன்

அஸ்வத்தாமன்

மட்டுமே!

 

இந்த விஷயத்தை சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால்

மகாபாரதக் கதையில் அஸ்வத்தாமன்

எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன் என்பதையும்,

வீரத்தில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும்,

அவனுடைய வாழ்க்கை வரலாறு யாருக்கும் தெரியக் கூடாது

என்பதற்காக மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும்,

தெரிந்து கொள்ளலாம்.

 

இராமாயணத்தில்

நாராயணாஸ்திரம்,

பிரம்மாஸ்திரம்,

பாசுபதாஸ்திரம்

ஆகிய மூன்று அஸ்திரங்களையும்

இராவணன் மகன்

இந்திரஜித் மட்டுமே

வைத்திருந்தான் என்பதை

நினைவில் கொள்ளுங்கள்)

 

------K.பாலகங்காதரன்

 

------01-05-2024

-----புதன் கிழமை

 

////////////////////////////////////////////////////