November 24, 2011

ஐயப்பன்- திருமூலர்-பதிவு-3

             

                 ஐயப்பன்- பதிவு-3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

 ஐயப்பன்-திருமூலர்:
ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் பஞ்சதன் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி திருமூலர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் குறிப்பிடுகிறார்

“”””””உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
           வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்
              தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்
           கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே””””””””””
                                                ------------திருமூலர்---------------

“”””””உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்””””””
முதலில் கோயிலுக்கும் ஆலயத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்வோம்
கோ +  இல் ---------கோயில்
கோ என்றால் அரசன் இறைவன் தலைவன் என்று பொருள்.
இல் என்றால் உறைவிடம் என்று பொருள்.
கோயில் என்றால் இறைவன் உறைவிடம் (அல்லது) இறைவன் இருக்குமிடம் என்று பொருள்.

ஆ +  லயம்-------ஆலயம்
ஆ என்றால் ஆன்மா என்று பொருள்.
ஆலயம் என்றால் ஆன்ம லயத்திற்கு ஏற்ற வழி கண்டறிந்து பின்பற்றி உயர்வடைதலே ஆலயம் என்பதற்குப் பொருள் .

ஊன் என்றால் சதை என்று பொருள் சதையால் செய்யப்பட்ட அல்லது சதையால் ஆக்கப்பட்ட இந்த உடம்பு ஆலயம் ஆகும் .
இந்த உடலுக்குள் உள்ளம் என்ற பெருங்கோயிலுக்குள் இறைவன் இருக்கிறான்.
இந்த உடலாகிய ஆலயத்தின் கர்ப்பகிரகம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானமே கோயில் அது நமது உள்ளே சிரசில் பிரம்மரந்திரத்தில் உள்ளது          ”- வும்     ,     -வும்       உள்ளே சேரும் இடமே உள்ளம் ஆகும் அங்கே இருக்கிறது நம் உயிர்  ஜீவன்
உயிர் (அல்லது) ஆன்மாவே இறைவன் என்றும் அந்த இறைவன் தங்கும் இந்த உடல் ஓர் ஆலயம் என்றும் கூறுகிறார்  திருமூலர்

சிரசில் பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்குமிடத்தை பெருங்கோயில் என்கிறார்  திருமூலர்  பெருங்கோயில் என்றால் பெருமைப் படக்கூடிய கோயில் என்று பொருள் இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது பெருங்கோயில் என்றால் பெரிய கோயில் என்றும் பொருள் படும்
சிரசில் பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்கும் இடம் பெருங்கோயில் என்றால் இந்த உலகத்தில் உள்ள மற்ற கோயில்கள் அனைத்தையும் இதனுடன் ஒப்பிட்டு காட்ட முடியாது என்று பொருள்
புறவழிபாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட கோயில்கள் அனைத்திலும் மட்டுமே மனதை செலுத்திக் கொண்டே இருந்தால் அகத்தே சொல்லப்பட்ட இந்த கோயிலின் ரகசியங்கள் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிறார் திருமூலர்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றால் ஊன் என்று சொல்லப்படக்கூடிய சதையால் ஆக்கப்பட்ட இந்த உடலுக்குள் சிரசில் பெருங்கோயில் என்று சொல்லப்படக் கூடிய பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது


“”””””வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்””””
பிராணன் என்றால் சீவன் என்று பொருள்.
வள்ளல் என்றால் வாரி வாரி வழங்கக் கூடியவர் என்று பொருள் .
வள்ளல் பிராணன் என்றால் அனைத்து விதமான சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும் வாரி வழங்கக் கூடிய சீவன் என்று பொருள்.
பிராணன் எப்பொழுது வள்ளல் பிராணனாக மாறும் என்றால் சீவன் சிவனுடன் சேரும் போது தான் உண்டாகிறது.
சீவன் எப்படி சிவனுடன் சேரும் என்றால் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி விழிப்பெற்றெழுந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேரும் பொழுது சீவன் சிவனாக மாறுகிறது.
சீவன் சிவனுடன் சேருவதற்கான நுழைவு வாயில் பிரம்மரந்திரத்தில் உள்ளது பிரம்மரந்திரததில் உள்ள வாயிலைத் தான் கோபுர வாசல் என்கிறோம்.

வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல் என்றால்,
அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக சீவன் மாற வேண்டுனெறால் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர பிரம்மரந்திரத்தில் உள்ள வாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று பொருள்.



சீவனை சிவனாக மாற்ற பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்க எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும் என்பதை கீழ்க்கண்ட அடிகளில் கூறுகிறார்  திருமூலர்
“”””””தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்”””””
நமது உடலில் சீவன் என்று சொல்லப் படக் கூடிய உயிராகிய ஜீவாத்மா இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமாத்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதுடன் நமது உடலில் சிரசில் பிரம்மரந்திரத்தில் சிவனாக இருக்கிறது
இதனை எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்றால் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைக் கடக்கச் செய்து பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்கும் பொழுது சீவன் சிவனாக  மாறுகிறது
மேற்கண்ட முறையில் சீவன் சிவனாக மாறும் பொழுது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவனே நம் உடலில் சீவனாக இருக்கிறது என்பதை உணர முடியும்



சீவன் சிவனாக மாறவிடாமல் தடுப்பவை கள்ளப்புலன்கள் இந்த கள்ளப்புலன்கள் பற்றிய விளக்கத்தை திருமூலர்  கீழ்க்கண்ட அடிகளில் கூறுகிறார்

“”””””கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே””””
பஞ்சதன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாகச் செயல்பட்டு மனிதனுக்கு ஆறு குணங்களை உண்டாக்கி பஞ்சமா பாதகங்களைச் செய்ய வைப்பதால் மனிதன்  இரு வினையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் நீந்துகிறான்
பஞ்ச தன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக புறத்தே செயல்பட்டு கர்மவினைகளைத் தேடிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் மாட்டிக் கொள்வதால் வினைவழி புறத்தே செயல்படும் ஐம்புலன்களை கள்ளப் புலன்கள் என்கிறார்  திருமூலர்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைத் துளைத்து பிரம்மரந்திரத்தில் உள்ள இறைவனுடன் சேரும் போது ஒளி தெரிகிறது இந்த ஒளியைத் தான் மணி விளக்கு என்கிறார் திருமூலர்
இந்த மணிவிளக்கைத் தெரியாமல் செய்வது தான் கள்ளப்புலன்கள்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றால்
ஐந்து புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகள் புறத்தே செயல்பட்டு கர்மவினைகளைத் தேடிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்பதால் கள்ளப் புலன்களாகி மணி விளக்கைத் தெரியாமல் செய்து விடுகிறது
ஆனால் ஐந்து புலன்கள் வழியாக பஞ்ச தன் மாத்திரைகள் அகத்தே செயல்படும் பொழுது மணிவிளக்கு தெரியும் என்று பொருள்

முதல் அடியில் கடவுள் இருக்கும் இடத்தையும் ,
இரண்டாம் அடியில் கடவுளை அடையும் வழியையும் ,
மூன்றாம் அடியில் கடவுளை எப்படி அடைவது என்ற முறையையும் ,
நான்காம் அடியில் கடவுளை அடைவதற்கு தடையாக உள்ளவைகளையும்
விளக்குகிறார்  திருமூலர்.


திருமூலர்  சொன்னபடி பஞ்ச தன் மாத்திரைகளை புறத்தே விடாமல் அகத்தே அனுப்ப வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கியது தான் ஐயப்பனுக்காக மேற் கொள்ளப் படும் விரத முறைகள்


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”




November 22, 2011

ஐயப்பன்- பிறப்பு- பதிவு-2

              

             ஐயப்பன்- பதிவு-2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
      ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - பிறப்பு :
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன்  
அரி அர புத்திரன் ஐயப்பன் என்பது சமுதாயத்தில் உள்ள ஒரு வழக்கு
அரி என்றால் திருமால் என்று பொருள் 
அரன் என்றால் சிவன் என்று பொருள்
அரிக்கும் அரனுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்று பொருள்
இதில் உள்ள சூட்சும ரகசியத்தை புரிந்து கொண்டால் நமக்கு சில விளக்கங்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சிவம் - சக்தி
பரம் பொருளாகிய மெய்ப் பொருளாகிய சிவம் பின்ன நிலையடைந்த நிலையிலே எப்பொழுது வேகங் கொண்டு இயங்குகிறதோ விரைவு கொள்ளுகிறதோ  அதற்குச் சக்தி என்று பெயர்.
சிவம் என்ற சொல்லை மாற்றிச் சக்தி என்ற சொல்லால் பயன்படுத்துவது மனிதன் புரிந்து கொள்வதற்காகத் தான்.
சக்தி என்று சொன்னாலும் அதனுடைய அர்த்தம் மாறுபடவில்லை .
நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு வைத்த பெயர்  தான் இது.
இருப்பு நிலையை சிவம் என்றும் சிவத்தின் இயக்க நிலையை சக்தி என்றும் இரு வேறு பெயரிட்டு இருப்பு நிலையை அழைப்பது மக்கள் இருப்பு நிலைக்கும் இயக்க நிலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

சிவம் என்பது பூரணம் சக்தி என்பது அதிலேயிருந்து பின்னம் ஆனது அதாவது சிவமே இயக்கநிலையில் சக்தி ஆனது.
சக்தி உட்புறமாகத் தானே இருக்க வேண்டும் சிவத்துக்குள் அடக்கம் பெற்றுத் தானே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பெட்டு என்று சொல்லலாம்.
அதனைச் சுற்றி ஆண்டு கொண்டிருப்பதை ஆண் என்றும் பெட்டு என்பதைப்  பெண் என்றும் வைத்துக் கொண்டு சிவனை ஆணாகவும் சக்தியை பெண்ணாகவும் உருவம் கற்பித்தனர்.

விநாயகர்  
சிவம் என்று சொல்லப் படக்கூடிய சுத்தவெளியும் சக்தி என்று சொல்லப் படக்கூடிய விண்ணின் எண்ணிக்கையும் ஒரு குறிப்பிட்ட பருமன் அளவில் அமையும் தன்மைக் கேற்ப அதாவது இணையும் தன்மைக் கேற்ப விண் என்னும் ஆகாசமே தனது திண்மைக் கேற்ப வேறுபாடுகளைக் கொண்டு பஞ்ச பூதங்களாக வேறுபட்டுக் காணப் படுகிறது.
பஞ்ச பூதங்கள் எனப்படுபவை நிலம் ,நீர் , நெருப்பு. காற்று. விண் ஆகியவை ஆகும் .
சிவனும் சக்தியும் இணைந்து பஞ்ச பூதங்கள் உருவானதால் இதனை விநாயகராக உருவகப் படுத்தி ஐங்கரத்தான் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு சிவனுக்கும் ,சக்திக்கும் பிறந்தவன் விநாயகர்  என்ற பெயரிட்டு அழைக்கிறோம் .

ஆறுமுகன்
சுத்த வெளி என்று சொல்லப் படக் கூடிய சிவனை விண்  என்று சொல்லப் படக்கூடிய சக்தி உரசுவதால் காந்தம் தோன்றுகிறது இந்த காந்தமே அழுத்தம் ,ஒலி ,ஒளி , சுவை ,மணம் என்று பஞ்ச தன் மாத்திரைகளாக மாற்றம் அடைகிறது
சிவத்திற்கும் சக்திக்கும் பிறந்தவன் காந்தன் என்றும் அந்தக் காந்தத்தின் தன்மாற்றம் தான் பஞ்ச தன் மாத்திரைகள் என்றும் அதை உணரும் மனதையும் சேர்த்து ஆறாக்கி காந்தனை கந்தனாக்கி கந்தனை ஆறுமுகனாக்கி விட்டார்கள்

இது தொடர்ச்சியாக ஒன்றன் ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமின்றி ஒன்றுக்குள் ஒன்றாக நடைபெறுவதால் ஒரு குடும்பமாக உருவகப்படுத்தி ஒரே குடும்பமாக கூறுகின்றனர்

ஐயப்பன்
இதில் ஐயப்பன் எங்கிருந்து வந்தார்  என்று பார்ப்போம்

சுத்தவெளி என்று சொல்லப் படக்கூடிய சிவனிலிருந்து பிரிந்த விண் என்று சொல்லப்படக்கூடிய சக்தி சுத்த வெளியுடன் உரசும் போது அதிக சத்தமும் ஒளியும் உருவாகிறது
அதனால் தான் விஷ்ணு கையில் சத்தத்திற்கு காரணமான சங்கையும் ஒளிக்கு காரணமாக சங்கு சக்கரத்தையும் கொடுத்தார்கள்
சிவத்தில் சக்தி உரசும் போது உருவாகும் விஷ்ணு எனனும் அலையானது சிவத்தில் கரையும் போது பஞ்ச தன் மாத்திரைகள் உருவாகிறது அதனை உயிரிகள் ஐம்புலன்கள் வழியாக உணருகிறது

எனவே தான் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்று சொல்லி ஐம்புலன்களின் தலைவனாக ஐயப்பனை வைத்திருக்கிறார்கள்
அதனால் தான் ஐயப்பனை ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றும் அரி அர புத்திரன் ஐயப்பன் என்று சொல்லப் படக் காரணம்

ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் பஞ்சதன் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி திருமூலர்  என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்

       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                        போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”

November 21, 2011

ஐயப்பன்- ஐம்புலன்கள்-பதிவு-1

                                        

                                   ஐயப்பன் - பதிவு-1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன்-ஐம்புலன்கள் :
  +    அப்பன் ----------ஐயப்பன்
ஐ என்றால் ஐந்து என்று பொருள்
அப்பன் என்றால் தலைவன் என்று பொருள்
ஐயப்பன் என்றால் ஐந்து புலன்களின் தலைவன் என்று பொருள்

ஐந்து புலன்கள் எனப்படுபவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஆகும் ஐந்து புலன்கள் வழியாகச் செயல்படுவது பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படும் பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படுபவை அழுத்தம் ,ஒலி, ஒளி ,சுவை ,மணம் ஆகியவை ஆகும்
பஞ்சதன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக வெளியே செயல்படும் பொழுது மனிதனுக்கு ஆறு விதமான குணங்கள் ஏற்படுகிறது ஆறுவிதமான குணங்கள் எனப்படுபவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம். மாச்சரியம் எனப்படும்
தமிழில் இதை பேராசை, சினம் ,கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் என்கின்றனர்

இந்த ஆறு வகை குணங்கள் ஒரு மனிதனுக்கு உருவாகி விட்டால் மனிதன் பஞ்சமா பாதகங்களைச் செய்கிறான் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய், சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்
பஞ்சமா பாதகங்களை ஒரு மனிதன் செய்யும் பொழுது அவன் இருவிதமான கர்ம வினைகளில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் மாட்டிக் கொள்கிறான்

வட எழுத்தாளர்கள்  வினைகளை மூன்றாகப் பிரித்தார்கள் அவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ,ஆகாம்ய கர்மம் ஆகியவை ஆகும்
தமிழில் வினைகளை இரண்டாகப் பிரித்தார்கள் அவை பழவினை ,புகுவினை  ஆகியவை ஆகும்
வட எழுத்தாளர்கள் சொல்லும் மூன்று வினைகளும் தமிழில் சொல்லப்படும் இரு வினைகளும் ஒரு பொருளைத் தான் குறிக்கிறது வார்த்தை தான் வேறுபடுகிறதே தவிர அதில் சொல்லப் படும் கருத்து ஒன்றைத் தான் அவை குறிப்பதும் ஒரே பொருளைத் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பழவினை :
தமிழ்ச் சான்றோர்கள் சஞ்சித கர்மம் ,பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளைச் சேர்த்து பழவினை என்று குறிப்பிடுகின்றனர்
சஞ்சித கர்மம்
சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர்  முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள் சஞ்சித கர்மம் என்று அழைக்கப் படுகிறது

பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் பிராரப்த கர்மம் என்று அழைக்கப் படுகிறது
நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும் செயல்களின் விளைவுப் பதிவு தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம்

புகுவினை :
தமிழ்ச் சான்றோர்கள் ஆகாம்ய கர்மத்தை புகுவினை என்று குறிப்பிடுகின்றனர்
ஆகாம்ய கர்மம்
ஆ என்றால் ஆன்மா காம்யம் என்றால் இச்சை ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது ஆகாம்ய கர்மம் எனப்படும்
சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய செயல்களின் பதிவுகளால் இனி என்ன செய்ய வேண்டும் என்று துhண்டப்படும் எண்ணங்களும் செயல்களும் ஆகாம்ய கர்மம் எனப்படும்

மனிதன் மேலே கூறப் பட்ட இருவினைகளில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் அவதிப் பட்டு துன்பப் படுவதற்குக் காரணம் ஐம்புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகளை வெளியே விட்டது தான் காரணம்

ஐம்புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகளை வெளியே விடாமல் உள்ளே திருப்பினால் அதாவது அகத்தில் திருப்பினால் ஜோதிரூபமாக இருக்கும் இறைவனை தரிசிக்கலாம் என்பதை விளக்குவதே ஐயப்பனை  வழிபடும் முறையில் உள்ள சடங்குகள் மற்றும் விரதங்கள் ஆகும்

ஐயப்பனை பற்றி நடைமுறையில் உள்ள சொற்கள் விரத முறைகள் சடங்குகள் ஆகியவற்றில் உள்ள ரகசியங்கள் மற்றும் அதில் உள்ள தத்துவங்கள ஆகியவற்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்

                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”



November 20, 2011

சூக்குமப் பயணம் - பதிவு - 2

                              


                               சூக்குமப் பயணம் - பதிவு - 2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சூக்குமப் பயணம் செய்யும் முறை:
1 எந்த தினத்தில் நாம் சூக்குமப் பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு முந்தைய தினம் இரவு 10 நிமிடம் (அல்லது) 20 நிமிடம் மணிபூரகத் தவம் செய்ய வேண்டும் படுத்துக் கொண்டே  செய்ய வேண்டும்.
2 அதன் மூலம் கிடைத்த சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.
3 காலை விடியும் முன் பல் துலக்குவதற்கு, முகம் அலம்புவதற்கு, முன் பருவ நிலைக்கு ஏற்ற விதத்தில் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
4 தரையில் பாய் அல்லது போர்வை விரித்து மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்  இடது கால் மீது வலது கால் வைத்து படுத்துக் கொள்ள வேண்டும்
5 உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும் காப்பு மந்திரம் தெரியாதவர்கள் கட்டு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
7 மணிபூரகத் தவம் செய்ய வேண்டும் தவத்தின் போது வலது கையை தொப்புள் மேல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வைக்க வேண்டும் பிறகு கையை எடுத்து உடலின் பக்கத்தில் வைக்க வேண்டும்  தவத்தினை தொடர்ந்து செய்து சூட்சும உடலில் நிலைக்க வேண்டும் பூத உடலிலிருந்து சூட்சும உடலுக்கு சக்தியை பரவச் செய்ய வேண்டும்
8 தவத்தினால் கிடைத்த சக்தியை உடல் முழுவதும் பரப்பிக் கொண்டு உடலை    கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே வர வேண்டும் பிறகு நமது சூட்சும உடலை பூத  உடலிலிருந்து பிரித்து உடலுக்கு ஒரு முழம் (ஒரு அடி) மேல் கொண்டு வந்து கவனிக்க வேண்டும் நம்மால் சூட்சும உடலை உணர முடியும் கவனிக்க முடியும்

9 சூட்சும உடலை பூத உடலுக்கு மேலே நிறுத்தி பூத உடலுக்கு காப்பு மந்திரம் கொடுக்க வேண்டும்

பூத உடலிலிருந்து சூட்சும உடலைப் பிரித்தப் பின் இரண்டு முறைகளில் செய்ய வேண்டும்
A  ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை
B  தவத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை
என்ற இரண்டு நிலைகளில் நின்று சூட்சும பயணத்தைச் செய்ய வேண்டும்


A.  ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை
1 முதலில் குருவை நினைத்து குருவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும்
2 முதலில் ஒரு ஆலயம் சென்று வணங்க வேண்டும் பின்பு தன் பெற்றோரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க வேண்டும்
3 பின்பு தன் குடும்பத்தின் மனைவி மக்களைக் கண்டு ஆசிர்வாதிக்க வேண்டும்
4 பின்பு தன் நெருங்கிய நண்பர்  வீட்டிற்குச் சென்று அவரைக் காண வேண்டும் தனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தொடர அவரை வாழ்த்த வேண்டும்
5 பின்பு அதே ஆலயத்திற்கு வந்து அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்
6 தான் இருக்கும் இடம் வந்து சேர்ந்து சூட்சும உடலை பூத உடலுக்கு அருகே தலைக்கு அருகே கொண்டு வர வேண்டும்
7 ஆக்கினையில் நின்று உடல் முழுவதும் உயிரால் நிரம்பி முடிந்ததும் தவத்தை முடித்துக் கொண்டு அப்படியே உடலைத் தளர்த்தி கை கால்களை அசைவு கொடுத்து இடது வலமாக புரண்டு பின்பு ஓய்வு கொள்ள வேண்டும்
8 உடலை அமைதி பெறச் செய்து பாதத்திலிருந்து தலை வரை ஒவ்வொரு பாகமாக நினைத்து அமைதி  பெற வேண்டும்
9 உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்



B .  தவத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை
1 முதலில் குருவை நினைத்து குருவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும்
2 முதலில் ஒரு ஆலயம் சென்று வணங்க வேண்டும் பின்பு தன் பெற்றோரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க வேண்டும்
3 பின்பு தன் குடும்பத்தின் மனைவி மக்களைக் கண்டு ஆசிர்வாதிக்க வேண்டும்
4 பின்பு தன் நெருங்கிய நண்பர்  வீட்டிற்குச் சென்று அவரைக் காண வேண்டும் தனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தொடர அவரை வாழ்த்த வேண்டும்
5 பின்பு சூட்சுமப் பயணம் சந்திர மண்டலத்தை நோக்கிச் சென்று இரண்டற கலந்து விட்டு அங்கு இருந்து சூரிய மண்டலத்திற்குச் சென்று நமது தவ வலிமையை விரிவடையச் செய்ய வேண்டும்
6 சூரிய மண்டலத்திலிருந்து சந்திர மண்டலத்திற்கு வர வேண்டும் பின்பு சந்திர மண்டலத்திலிருந்து அதே ஆலயத்திற்கு வர வேண்டும்
7 பின்பு அதே ஆலயத்திற்கு வந்து அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்
8 தான் இருக்கும் இடம் வந்து சேர்ந்து சூட்சும உடலை பூத உடலுக்கு அருகே தலைக்கு அருகே கொண்டு வர வேண்டும்
9 ஆக்கினையில் நின்று உடல் முழுவதும் உயிரால் நிரம்பி முடிந்ததும் தவத்தை முடித்துக் கொண்டு அப்படியே உடலைத் தளர்த்தி கை கால்களை அசைவு கொடுத்து இடது வலமாக புரண்டு பின்பு ஓய்வு கொள்ள வேண்டும்
10 உடலை அமைதி பெறச் செய்து பாதத்திலிருந்து தலை வரை ஒவ்வொரு பாகமாக நினைத்து அமைதி பெற வேண்டும்
11 உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்

மேலே சொன்னவாறு சூக்கும பயணம் தொடர்ந்து செய்து கொண்டு வர ஆன்மா உடலிலிருந்து பிரிந்து தனித்து இயங்கக் கூடிய தன்மையைப் பெறுகிறது
பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்து கொண்டு ஞானத்திற்கான திறவுகோலைப் பெறுகிறது
 

சூட்சும ரகசியம்
சூக்குமப் பயணம் நம் வசமாக குறைந்தது எத்தனை வருடங்கள் ஆகும் என்று காலத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது ஆனால் சூக்குமப் பயணத்தை நம் வசமாக்க சூட்சும ரகசியம் ஒன்று உள்ளது

அதாவது ஆன்மாவை  உடலிலிருந்து எளிதாகப் பிரித்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உலா வந்து நமக்கு விருப்பப் பட்ட இடங்களுக்குச் சென்று நமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு சூட்சும ரகசியம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் ஏற்கெனவே உயிரை உடலிலிருந்து பிரித்து தவம் செய்தவர்கள் நம்முடைய உயிரை ஒரு முறை பிரித்து நமக்கு காட்ட வேண்டும்

உடலிலிருந்து பிரித்த நமது உயிரை நாம் ஒரு முறை பார்த்து விட்டால் நாம் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் எளிதாக நம்முடைய உயிரை உடலிலிருந்து பிரித்து விடலாம் என்ற சூட்சும ரகசியத்தை மட்டும் தெரிந்து கொள்வோம் பயன் பெறுவோம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் சூக்குமப்பயண  ந்தான்முற்றதாமே “”

November 19, 2011

சூக்குமப் பயணம் - பதிவு - 1


சூக்குமப் பயணம் - பதிவு - 1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சூக்குமப் பயணம் தவத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே செய்யக் கூடிய ஒரு பயிற்சி முறையாக இருந்து வருகிறது.
தவத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே செய்யக் கூடிய ஒரு பயிற்சி முறையாக சூக்குமப் பயணம் இருக்கின்ற காரணத்தினால் இன்றைய உலகில் சூக்குமப் பயணம் விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

சூக்குமப் பயணத்தின் முறைகள் சரியாக தெரியாத காரணத்தினாலும் அதைச் செய்பவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காத காரணத்தினாலும் சூக்குமப் பயணம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது அழிந்து கொண்டு வருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூக்குமப் பயணம் அழிவதற்கு முக்கிய காரணம் சூக்குமப் பயணத்தின் மதிப்புகள் மகிமைகள் மனிதர்கள் உணர்ந்து கொள்ளாததும் புரிந்து கொள்ளாததும் தான்.
சூக்குமப் பயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் மகிமைகளையும் மதிப்புகளையும் வார்த்தைகளில் எழுதிட முடியாது அதன் பலன்களைக் கணக்கிட முடியாது இருந்தாலும் ஒரு சில முக்கியமான மகிமைகளை மட்டும் நாம் தெரிந்து கொள்வோம்.

சூக்குமப் பயணத்தின் மகிமைகள் :
1 ஆன்மா பிற ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் தன்மையைப் பெறுகிறது
2 உலகியலில் தனக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு ஆயுதமாக இருக்கிறது
3 அருளியலில் உயர்வான நிலைகளை அடையும் ஒரு திறவு கோலாக இருக்கிறது
4 பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்ளும் நிலையினை பெற முடிகிறது
5 எங்கும் எந்த இடத்திற்கும் சென்று வரும் தன்மையினைப் பெறுகிறது
6 சூட்சும உலகத்துடன் தொடர்பு கொள்ளும் நிலையினை அடைகிறது
7 ஞானத்தின் திறவுகோல்கள் அனைத்தையும் பெற முடிகிறது

சூக்குமப்  பயணம் உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களால் பல்வேறு முறைகளில் செய்யப் படுகிறது இருந்தாலும்,
உலகின் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை ,
சூக்குமப் பயணம் செய்து அதன் பலனைக் கண்டவர்கள் பயன்படுத்திய முறை,
சூக்குமப் பயணம் பயிற்சியில் ஈடுபட்டு இந்த முறை தான் அருமையானது, எளிமையானது என்று அதன் பலனைச் சுவைத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு சான்றளிக்கப் பட்ட முறை,
என்பதின் அடிப்படையில் கீழ்க்கண்ட முறை கொடுக்கப் பட்டுள்ளது

சூக்குமப் பயணம் செய்ய தெரிந்து இருக்க வேண்டியவை :
சூக்கும பயணம் தெளிவாக செய்ய வேண்டுமென்றால் சூக்கும பயணத்தின் பலன் நமக்கு நிறைவாக கிடைக்க வேண்டுமென்றால் கண்ணாடிப் பயிற்சியை குறைந்தது மூன்று வருடங்களாவது செய்து இருக்க வேண்டும்.
கண்ணாடிப் பயிற்சியை தொடர்ந்து செய்து வரும் பொழுது உயிருக்கு ஒரு அதிர்வு உண்டாகி உயிரானது உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கக் கூடிய தன்மையைப் பெறுகிறது.
உயிரானது உடலிலிருந்து பிரிந்து தனித்து இயங்கக் கூடிய தன்மையைப் பெற்றாலும் உயிரானது உடலிலிருந்து தனியாகப் பிரிந்து வெளியே செல்ல முடியாது.

உயிரை உடலிலிருந்து பிரித்து வெளியே செல்ல வைக்க பயன்படுவது தான் மணிப்பூரகத் தவம் ஆகும் மணிப்பூரகத் தவம் என்பது ஆறாதாரத் தவத்தில் ஒரு பிரிவு ஆகும் ஆறாதாரத் தவம் செய்தால் மட்டுமே மணிப்பூரகத்தின் பலனை நாம் பெற முடியும்
ஆறு ஆதாரங்கள் எனப்படுபவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி ,ஆக்கினை ஆகியவை ஆகும்
சூக்குமப் பயணம் செய்வது என்று முடிவெடுத்தால் ஆறு ஆதாரத் தவத்தில் மணிபூரகத்தில் கூடுதலாக நேரம் ஒதுக்கிச் செய்து பழக வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியும் ஆறு ஆதாரத் தவமும் தொடர்ந்து செய்து வருபவர்களால் மட்டுமே சூக்கும பயணம் எளிதாக செய்ய முடியும் சரியாக செய்ய முடியும் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்


சூக்குமப் பயணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை:
1 சூக்குமப் பயணத்தை அதிகாலை 04.00 மணி முதல் அதிகாலை 06.00 மணிக்குள் செய்ய வேண்டும
2 சூக்குமப் பயணத்தை கண்டிப்பாக அதிகாலை 06.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது
3 அதாவது சூக்குமப் பயணத்தை சூரிய உதயத்திறகு முன்பே செய்து விடுவது நல்லது
4 சூக்குமப் பயணத்தை செய்வதற்கு முந்திய தினம் இரவு குறைவாக சாப்பாடு சாப்பிட வேண்டும்
5 சூக்குமப் பயணத்தை செய்வதற்கு முந்திய தினம் இரவு உடல் உறவு கொள்ளக் கூடாது
6 சூக்குமப் பயணம் செய்த அன்றைய தினம் அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது   .  அலைச்சல்கள் கூடாது பிரயாணங்கள் செய்யக் கூடாது.
7 இந்த பயிற்சியை அடிக்கடி செய்யக் கூடாது. வாரத்திற்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும் .
8 சூக்குமப் பயணம் செய்பவர்கள் காப்பு மந்திரம் தெரிந்தால் காப்பு மந்திரம் கண்டிப்பாக போட்டுக்  கொள்ள வேண்டும்.
9 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு ,திக்கு கட்டு மந்திரங்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.
10 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு, திக்கு கட்டு மந்திரங்கள் தெரியாதவர்கள் இந்த பயிற்சியைக் கண்டிப்பாக செய்யக் கூடாது தயவு செய்து செய்ய வேண்டாம் 

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”

November 18, 2011

கடவுளின் பல்வேறு பெயர்கள் -- அர்த்தங்கள்

       கடவுளின் பல்வேறு பெயர்கள் -- அர்த்தங்கள்

இந்த உலகத்தில் பல்வேறு சொற்கள் பல்வேறு உருவங்களில் பல்வேறு நிலைகளில் உலவிக் கொண்டு வருகிறது
இவ்வாறு உலவிக் கொண்டு வரும் ஒவ்வொரு சொல்லும் பல்வேறு விதமான அர்த்தங்களை வெளிக் காட்டிக் கொண்டும் சூட்சுமமான ரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டும் இந்த உலகத்தில் உலவிக் கொண்டு வருகிறது
இந்த உலகத்தில் உலவிக் கொண்டு வரும் பல்வேறு சொற்களின் அர்த்தங்களை மனிதன் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தி வருகிறான்
சாதாரண சொற்களுக்கே இந்த நிலை என்றால் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவு அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கும்

இந்த உலகத்தில் உலவி வரும் சாதாரண சொல் இரண்டை எடுத்து அதில் உள்ள ரகசியம் என்ன என்று பார்ப்போம்
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழம் ஏன் எலுமிச்சை பழம் என்று அழைக்கப் படுகிறது என்று தெரியுமா?
எலி எல்லாவிதமான பொருள்களையும் கடித்து விடும் ஆனால் அது கடிக்காத பழம் என்று ஒன்று உண்டு அது தான் எலுமிச்சை பழம் அதாவது எலுமிச்சை பழத்தின் மேல் எலியின் எச்சம் படவில்லை என்று பொருள்
எலியின் எச்சம் படாத பழம் அதனால் அப்பழம் எலுமிச்சை பழம் என்று அழைக்கப் படுகிறது

ஆரஞ்சுப் பழம்
ஆரஞ்சுப் பழம் ஏன் ஆரஞ்சுப் பழம் என்று அழைக்கப்படுகிறது என்று தெரியுமா?
ஆரஞ்சுப் பழம் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் இது ஆரஞ்சுப் பழம் என்று அழைக்கப் படுகிறது என்று சிலர்  பொருள் தருகின்றனர்  நாம் இதற்கான பொருள் என்னவென்று பார்ப்போம்
ஆரஞ்சுப் பழத்தை இரு சமபாகமாகப் பிரித்தால் அதாவது அதை இரண்டு சம கூறுகளாக்கினால் அதற்குள் ஆறு சுளை மற்றும் அஞ்சு சுளை ஆக மொத்தம் பதினொன்று சுளை தான் இருக்கும்
ஆரஞ்சுப் பழத்தில் சிறிய பழம் முதல் பெரிய பழம் வரை இரு சமபாகமாகப் பிரித்தால் அதாவது இரண்டு  சம கூறுகளாக்கினால் ஆறு சுளை மற்றும் அஞ்சு சுளை ஆக மொத்தம் பதினொன்று சுளை தான் இருக்கும்  ஆரஞ்சு பழத்தை இத்தகைய காரணத்தினால் தான் நாம் ஆரஞ்சு பழம் என்று அழைக்கிறோம்
எலுமிச்சை பழம் ஆரஞ்சு பழம் என்ற இரு சொற்களுக்கே இவ்வளவு அர்த்தங்கள் மறைந்திருக்கிறது என்றால் கடவுள் என்ற சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தங்கள் மறைந்து இருக்கும்

கடவுளின் பல்வேறு பெயர்கள்
இந்த உலகத்தில் கடவுள் என்ற சொல் எந்த எந்த பெயர்களில் குறிப்பிடப் படுகிறது என்றும் அந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் நம்மால் முடிந்த அளவு பார்ப்போம்

ஆதி
ஆதி என்றால் முதல் நிலை,  மூல நிலை,  இருப்பு நிலை என்று பொருள்
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை ஆதலால் முதல் நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் மூல நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் இருப்பு நிலை என்றும்,
இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் ஆதி என்றும் அழைக்கப் படுகிறது

அநாதி
அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்
புத்தகம் மேசை மீது இருக்கிறது மேசை பூமி மீது இருக்கிறது பூமி வெட்டவெளியில் இருக்கிறது
புத்தகத்திற்கு மேசை ஆதாரம் மேசைக்கு பூமி ஆதாரம் பூமிக்கு வெட்டவெளி ஆதாரம் வெட்டவெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் அது அநாதி ஆயிற்று
அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது
அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர்  யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்
கடவுளை யார்  உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய் தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்

பிரம்மம்
பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற பொருள்  அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்
கடவுள் அழிவில்லாதவர்  என்றால் கடவுளைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் அழியக் கூடியது என்று அர்த்தம்

அதனால் இந்த உலகையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மாயை என்று சொல்லால் குறிப்பிடுகின்றனர்  மாயை என்றால் அழியக் கூடியது என்று அர்த்தம்

கடவுள்
உயிரின் படர்க்கை நிலையான மனம் உயிராக ஒடுங்கி உயிரே பரமாக கடவுளாக மாறுவதைத் தான்  கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது  
கட + வுள்------- கடவுள்  அதாவது கடந்து கொண்டே உள்ளே செல் மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள்-------- கடவுள் என்பதாகும்

ஆண்டவன்
ஆண்டு + அவன் -------ஆண்டவன்
ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்
ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்
ஆண்டவன் என்றால் விரிந்தவன் எல்லையில்லாதவன் என்று பொருள்
அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன் ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன்  என்று பொருள்

பகவன்
இலகு பகு என்று இரண்டும்  வடமொழிச் சொற்கள் உள்ளன
இலகு என்றால் சிறிய எளிய என்று பொருள்
பகு என்றால் பெரிய மதிப்புமிக்க என்று பொருள்
பகு + அவன்--------- பகவன் அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள்

பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்
உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன் மூலநிலை என்று பொருள்
அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்

பூரணம்
இவைகள் என்று சொற்களில் எடுத்துக் கூற முடியாத இவைகள் என்று வார்த்தைகளில் எழுதிக் காட்ட முடியாத அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலம் வரும் பொழுது தானாகவே பரிணமித்து வெளிப்படும்
அதாவது இன்னதென்று தெரியாமல் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் காலம் வரும் பொழுது வெளிப்படும் அதுவே பூரணம் எனப்படும்

பரம்
பரம் என்றால் நேர்  இல்லாதது  உவமை இல்லாதது  அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது
அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது என்று பொருள்

இந்து மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றமடைகிறது
பரம் + சிவன்  -------------- பரமசிவன்
பரம் + சக்தி ----------------- பராசக்தி
சிவன் என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலைக்கு மேல் வேறு ஒன்றும் (கடவுள)  இல்லாத காரணத்தினால் பரம் + சிவன்  ------ பரமசிவன்  அதாவது பரமசிவனுக்கு மேல் வேறு இருப்பு நிலை (கடவுள்)  இல்லை என்று பொருள்
சக்தி என்றால் இயக்க நிலை என்று பொருள் அதாவது இருப்பு நிலை அசைந்து இயக்க நிலை உருவாகிய அந்த நிலையே முதல் இயக்கநிலை அதற்கு முன்பு இயக்க நிலை கிடையாது என்பதைக் குறிப்பதே  பரம்  + சக்தி ---- பராசக்தி என்பதாகும்

கிறிஸ்தவ மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றம் அடைகிறது
பரம்  + பிதா --------------------பரம பிதா
பரம் +  மண்டலம்---------------பர மண்டலம்
பரம்  + லோகம்  + ராஜ்யம்---------பரலோக ராஜ்யம்

பிதா என்றால் தந்தை என்று பொருள்
குடும்ப அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும்  தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வருபவர்  என்று பொருள்
உலக அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வரும் பரம பிதாவுக்கு  மேல் வேறு யாரும் கிடையாது என்பதைக் குறிப்பதே பரம்  + பிதா ---- பரம பிதா என்பதாகும்

தெய்வம்
உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது ஒன்று நிகழ்ச்சி நிலை இரண்டு பொருள் நிலை
1 எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ  அது நிகழ்ச்சி நிலை எனப்படும்
2 அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை
உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது சாம்பல் அணுவாகிப் போகிறது அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது
தேய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று

இறைவன்
இறைவன் என்றால் அரசன்  தலைவன்  அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள்
அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து இயக்க நிலை மாறாமல் இயக்க ஒழுங்கு மாறாமல் இயக்க விதிப்படி ஆண்டு கொண்டிருப்பவன் என்று பொருள்

பல்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படும் கடவுள் என்ற சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்றால்
கடவுள் என்றால் என்ன? கடவுளை அடையக் கூடிய வழிகள் எவை? என்பன போன்ற அதி சூட்சும கேள்விகளுக்குள் எவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கும் என்பதைப் பற்றி சிந்திப்போம் தெளிவு பெறுவோம்