January 09, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-காரணங்கள்-பதிவு-6




             உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-காரணங்கள்-பதிவு-6

                              “”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
                                                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் - காரணங்கள் :
உலகில் உள்ள உயர்ந்த கலைகளில் , மிக உயர்ந்த கலைகளில் ஒன்றான கலையாக மதிக்கப் படுவதும் ,
கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிக உயர்ந்த சக்திகளைத் தரவல்லதும் ,
அரிய பொக்கிஷங்களை சூட்சும ரகசியங்களாக மாற்றி தன்னுள் அடக்கி வைத்திருப்பதும் ,
ஆகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
உலக மக்களில் பெரும்பாலானவர்களால் அறியப் படாமல் இருப்பதற்கு ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ,


சில முக்கியமான காரணங்கள் உண்டு அவையாவன ,

1 பஞ்ச பட்சி சாஸ்திரம் காலம் காலமாக குரு – சீடர்  பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது .
2 பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தும் யாருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும்   வகையில் எழுதி வைக்கப் படாமல் மறைபொருளாக எழுதி வைக்கப் பட்டிருக்கிறது  .
3 பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆன்மீகத்தில்  உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே உணர்ந்து ,  பின்பற்றி உயர்வு அடையும் வகையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது .
4 பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல எண்ணம் உடையவர்கள் ,
 உயர்ந்த சிந்தனை உடையவர்கள் ,
சுயநலமற்ற  பொதுநலம் உடையவர்கள் ,
ஆகியவற்றைக் கொண்ட குணநலன்களைக் கொண்டவர்கள் மட்டுமே  அறிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது

மேலே சொல்லப் பட்டவைகள் தான் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள் ஆகும் .



மேலும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாமைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன அவையாவன :

1 மௌனவித்தை எனப்படும் பேசாமந்திரத்தின் சூட்சுமம் தெரிந்து இருக்க வேண்டும் .
2 சரம் பார்த்தலின் ரகசியம் அறிந்து அதை நேரம் பார்த்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
3 பஞ்ச பட்சிகளுக்குரிய மூலிகைகள் வேறுபடுத்தி அறிந்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
4 பஞ்ச பட்சிகளுக்குரிய மந்திரங்கள் அறிந்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
5 பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் மறைத்து வைக்கப்பட்ட மூல ரகசியங்கள் எவை என்பதைத் தெரிந்து  இருக்க அதைப் பயன்படுத்தும் முறை அறிந்து இருக்க வேண்டும் .

மேலே சொல்லப் பட்டவைகள் தான்  பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று இருந்தும் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற முடியாமைக்குக் காரணங்கள் ஆகும் .



பஞ்ச பட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் உள்ள மக்கள் அறிந்து பயன்படுத்தி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணங்களாக உரோமரிஷி கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார் .

         “”””””தோணுமே உலகிலுள்ள அசஷரத்துக்கெல்லாம்
                                      தோணாத பஞ்சபட்சி சூட்சந்தானும்
                  காணுமே கருக்கருவும் காணாதுபாரு
                                       கடினமடா ஆசானும் காட்டவேணும்
                 பேணுமேமன துருத்தியாக வேணும்
                                      பிசகினால் பட்சிவித்தை பிசகிப்போகும்
                ஆணுமே அசஷரங்கள் அறியவேணும்
                                     அறிவதுதான் வெகுநினைவாய் செலுத்துவாயே””””

                                             -------உரோமரிஷி------பஞ்சபட்சி சாஸ்திரம்---


”””தோணுமே உலகிலுள்ள அசஷரத்துக்கெல்லாம்
                           தோணாத பஞ்சபட்சி சூட்சந்தானும்””””
51 - அட்சரங்களை அடிப்படையாக வைத்தே அனைத்து மந்திரங்களும் எழுதப்பட்டிருக்கின்றன  என்பதும் ,
அவைகளை அடிப்படையாக வைத்தே அனைத்து மந்திரங்களும் இயங்குகின்றன என்பதும் ,
அதில் உள்ள இரகசியங்கள் அனைத்தும் உலகில் உள்ள மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதும் ,
மந்திரங்கள் என்றால் என்ன என்றும் , அதைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்றும் , மந்திரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும் .

ஆனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் சூட்சும ரகசியங்கள் பலவற்றை தன்னுள் அடக்கி வைத்திருப்பதும் ஆகிய
பஞ்சபட்சி சாஸ்திரத்தை இயக்குவதற்கு தேவையான  மையக்கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள்  எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய காலங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய மந்திரங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய மூலிகைகள் எவை என்பதும் ,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது .



   ””””””காணுமே கருக்கருவும் காணாதுபாரு
                                   கடினமடா ஆசானும் காட்டவேணும்”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள மையக் கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் யாரும்  எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது .

அத்தகைய மையக்கருவாக உள்ள  சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களால் மட்டுமே ,
 பயன்படுத்தி வெற்றி கண்டவர்களால் மட்டுமே  , தான் உணர்ந்தவற்றை அதனுடைய சூட்சும ரகசியங்களை அவிழ்த்து விளக்க முடியும் .
அவரால் தான் ஆசானாக இருந்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொல்லிக் கொடுக்க முடியும் .



  ”””””””பேணுமேமன துருத்தியாக வேணும்
                                  பிசகினால் பட்சிவித்தை பிசகிப்போகும்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை பயின்று பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்றால் ,
எதனையும் எதிர்த்து சமாளிக்கக் கூடிய மனோதிடத்துடன் கூடிய தைரியம் , தெளிவான மனம்,  நிதானம் , அமைதி இருக்க வேண்டும் .
இத்தகைய குணநலன்களைப் பெற்றவர்களால் மட்டுமே தான் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை தெளிவாகப்  பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி காண முடியும் .

மேலே சொல்லப்பட்ட குணநலன்கள் இல்லாதவர்கள் , மையக்கருவான சூட்சும ரகசியங்களை அறியாதவர்கள் பஞ்சி பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் ,

ஓவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு தவறாகவே இருக்கும்  .
ஓவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு சரியாக இருக்காது .



 “”””””ஆணுமே அசஷரங்கள் அறியவேணும்
                            அறிவதுதான் வெகுநினைவாய் செலுத்துவாயே””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள சூட்சும ரகசியங்கள் எவை என்பதையும் ,
பஞ்சபட்சி சாஸ்திரத்தை செயல் படுத்தும் விதத்தில் உள்ள ரகசியங்கள் எவை என்பதையும் ,
பஞ்சபட்சி சாஸ்திரத்தை  செயல்படுத்த பயன் படுத்த பயன்படும் பொருள் எவை என்பதையும் அறிந்து சரியாக பயன் படுத்தினால் ,
ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு சரியாக இருக்கும்,
இல்லையென்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவும் தவறாகவே இருக்கும் என்கிறார்  உரோமரிஷி .


அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்களை அடுத்து பார்ப்போம் .


             “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                    போற்றினேன் பதிவுஆறு ந்தான்முற்றே “”

January 07, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்- யாருக்கு சொல்லக் கூடாது - பதிவு-5




உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்லக் கூடாது -                                                        பதிவு-5

                         “”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் -யாருக்கு சொலலக் கூடாது:

பாடல்-1
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  எத்தகைய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு மட்டும்  உபதேசிக்க வேண்டும் என்று சொன்ன உரோமரிஷி .
யாருக்கு , எத்தகைய தன்மைகள் கொண்டவர்களுக்கு , பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லக் கூடாது .
யாருக்கு எத்தகைய குணநலன்கள் கொண்டவர்களுக்கு வெளி விடக் கூடாது,
சொன்னால் என்ன நடக்கும் ,
என்பதைக் கீழ்க்கண்ட பாடல்களில் உரோமரிஷி விளக்குகிறார் .

    “””””””””செப்பினதோர் சாஸ்திரத்தை உலகமீதில்
                                          ஜெகமறியா மாந்தருக்கு சொன்னாயானால்
                   தப்பில்லை பதினெண்பேர்  சாபந்தானும்
                                          தன்குலத்தை நாசமது செய்யும்பாரு
                  கொப்புகளின் சரித்துவிளையாடும் சென்மம்
                                        குரங்கதுபோல் ஆகுமப்பா சொன்னேன்யானும்
                  இப்புவியில் வாலையுட சாபம்அப்பா
                                         ஈடாவேதொரு போதும் இல்லைத்தானே”””””””””
     
                                                 -------உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரதம்---

     “”””””””செப்பினதோர்  சாஸ்திரத்தை உலகமீதில்
                                        ஜெகமறியா மாந்தருக்கு சொன்னாயானால்
                 தப்பில்லை பதினெண்பேர்  சாபந்தானும்
                                        தன்குலத்தை நாசமது செய்யும்பாரு””””””””
பாவத்தின் விளைவுகளை உணர்ந்து செயல்படும் ,
தன்னலம் இல்லா உள்ளம் கொண்டு இயங்கிடும் ,
மற்றவர்  துன்பம் கண்டு வருந்திடும் ,
வறுமையின் தாக்கம் கண்டு இளகிடும் ,
அறியாமையின் நிலை கண்டு கலங்கிடும் ,
தனக்கு மற்றவர்கள் எத்தகைய கெடுதலான செயல்களைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதை மற்றவர்களுக்கு செய்யாமல் இருந்திடும் ,
இளகிய மனம் கொண்ட தன்னலம் இல்லா உள்ளங்களுக்கு மட்டுமே பஞ்ச பட்சி சாஸ்திரத்தைச் சொல்ல வேண்டும் .

இத்தகைய தன்மை இல்லாத ,உலகத்தில் உள்ள மக்களுக்கு பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொன்னால் 18 சித்தர்களுடைய சாபம் அவர்களுக்கு உண்டு.


18 சித்தர்களுடைய சாபமானது அவர்களுடைய பரம்பரையை வம்சத்தை இல்லாமல் அழித்து விடும் .
வம்சமானது வேரோடு அழிந்து விட்ட காரணத்தால் மீண்டும் தழைக்கவே முடியாது என்கிறார்  உரோமரிஷி .



 ””””கொப்புகளின் சரித்துவிளையாடும் சென்மம்
                     குரங்கதுபோல் ஆகுமப்பா சொன்னேன்யானும்”””
தனது வாழ்க்கையை ஓட்டுவதற்கும் ,
தனது பசியை தீர்த்துக் கொள்வதற்கும்,
இரை தேடுவதற்கும் ,
ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரம் தாவி குதித்து ஓடும் குரங்கின் வாழ்க்கையைப் போல ,

பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான மனிதர்களிடம் சொல்பவர்களின் வாழ்க்கையானது ,
அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டு , நிலையில்லாத ஒரு வாழ்க்கையாக அலைக்கழிந்து , துன்பத்துடனும் ,துயரத்துடனும் கவலையுடனும் இருக்கும் .

இத்தகைய நிலையானது ஒவ்வொரு ஜென்மத்திலும் இருக்கும்.
ஜென்மம் ஜென்மமான இத்தகைய துன்ப நிலையே தொடரும் என்கிறார் உரோமரிஷி .



       “””””””””இப்புவியில் வாலையுட சாபம்அப்பா
                                           ஈடாவேதொரு போதும் இல்லைத்தானே”””””””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுக்கு வாலைத்தாயின் சாபம் அவர்களுக்கு உண்டு .
அதாவது வாலைத்தாயின் சாபமானது அவர்களை வந்து சேரும் .
வாலைத்தாயின் சாபத்திற்கு ஈடான சாபம் என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை என்கிறார் உரோமரிஷி .

வாலைத்தாய்
வாலைத்தாய் என்றால் என்ன , யார் என்பதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் , இந்த தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள் .

இருப்பு நிலை , அசைந்து இயக்க நிலை தோன்றுவதற்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படுகிறது . அந்த அழுத்தத்தைத் தான் வாலைத்தாய் என்கின்றனர். அந்த அழுத்தத்தைத் தான் வாலைத்தாயாக உருவகம் செய்கின்றனர்.

இருப்பு நிலையே அசைவதற்கு காரணமாக இருப்பதால் ,
இருப்பு நிலை இயக்க நிலையாக மாற்றமடைவதற்கு அடிப்படையாக இருப்பதால் ,
இருப்பு நிலை பரிணமித்து இயக்க நிலையாக தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பதால் ,

வாலைத்தாய் உயர்ந்த , ஒரு சக்தி வாய்ந்த , தெய்வமாக கருதப்படுகிறது .
இத்தகைய வாலைத்தாயின் சாபத்தைத் தான்  நீக்க முடியாத சாபம் என்கிறார்  உரோமரிஷி .



பாடல் -2

           “””””””சூழுமே இருபத்தோர்  தலைமுறைக்கும்
                                            சூழுவது ஒருவரால் திருப்பொண்ணாது
                     மாளுமே அவன்குலமும் அற்றுப்போகும்
                                          மக்களே சிவசிந்தை மறக்கொண்ணாது
                   நாளுமே பஷிகளின் கருவரிந்து
                                         நலந்தீதும் அவரவர்கள் பேரும்கண்டு
                  வாழுமே அஷரம்சொல்வேன் பிரித்துத்தானே
                                        மக்களே ஜெகத்தோர்க்கு காட்டொண்ணாது”””””””
                             
                                                     -----உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரம்---

        “””””””சூழுமே இருபத்தோர் தலைமுறைக்கும்
                                       சூழுவது ஒருவரால் திருப்பொண்ணாது
                   மாளுமே அவன்குலமும் அற்றுப்போகும்”””””””

பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுக்கு பாவமானது 21 தலைமுறை வரைக்கும் தொடரும் .
பாவத்தின் பலனானது 21 தலைமுறைகளை துன்பக் கடலில் ஆழ்த்தி, சோகத்தில் மிதக்க விட்டு , நிலையில்லாத வாழ்க்கையைக் கொடுத்து, அலைக்கழிக்கும் .

இந்த பாவத்தை ,
நிவர்த்தி செய்ய பரிகாரங்களோ ,
நிவர்த்தி செய்ய சக்தி கொண்டவர்களோ ,
நிவர்த்தி செய்வதற்கு உரிய முறைகளோ எதுவும் கிடையாது .
பாவத்தின் பலனை 21 தலைமுறைகள் அனுபவித்துத் தான் தீர வேண்டும் .

பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுடைய குலம் அழிந்து, ஒன்றுமில்லாமல் போகும் என்கிறார்  உரோமரிஷி .



                 “””””””””மக்களே சிவசிந்தை மறக்கொண்ணாது
           நாளுமே பஷிகளின் கருவரிந்து
                                நலந்தீதும் அவரவர்கள் பேரும்கண்டு
          வாழுமே அஷரம்சொல்வேன் பிரித்துத்தானே
                                மக்களே ஜெகத்தோர்க்கு காட்டொண்ணாது”””””””

எண்ணம் , சொல் , செயல் ஆகிய அனைத்தையும் ,
எப்பொழுதும் சிவனின் மேல் செலுத்த வேண்டும் .
எப்பொழுதும் சிவனுடைய சிந்தனையாகவே இருக்க வேண்டும் .

சிவ சிந்தை என்றால் ,
ஆதி நிலை , முதல் நிலை, மூல நிலை என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலையின் மேல் மனதை வைக்க வேண்டும் என்று பொருள் .
அத்தகைய மனதை உடையவர்களுக்கே பஞ்சபட்சி சாஸ்திரம் பலிக்கும் .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள சூட்சும ரகசியங்கள் அதாவது மையமான கருப்பொருள் எவை என்பதையும் ,
ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை உணர்ந்து பயன்படுத்தும் பொழுது அதாவது அதை செயல் படுத்தும் பொழுது உள்ள ரகசியங்கள் எவை என்பதையும் ,

ஒவ்வொரு நாளும் பஞ்ச பட்சிகள் செய்யும் தொழிலுக்குரிய நேரங்களை தனித்தனியாக பிரித்து அவை எவை என்பதையும் ,
ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை உணர்ந்து பயன்படுத்தும் பொழுது உண்டாக்கக் கூடிய நன்மைகள் தீமைகள் எவை என்பதையும் ,

ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தும் பொழுது அதாவது அதை செயல் படுத்தும் பொழுது பயன்படுத்தப் பொருள் எவை என்பதையும் ,
அவற்றிற்கு உரிய மூலிகைகள் , மந்திரங்கள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து அவை எவை என்பதையும்,

வேறுபடுத்தி தனித்தனியாக விளக்கி , எளிதாக பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக , முறைப்படுத்தி , ரகசியங்களை அவிழ்த்து கூறுகிறேன் .

இத்தகைய சிறப்பு மிக்க பஞ்சபட்சி சாஸ்திரத்தை உலகத்தில் உள்ள நயவஞ்சக எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு சொல்லாதே ,
அப்படி சொன்னால் மேலே சொல்லப் பட்டது போல பாவமானது 21 தலைமுறை வரை பாதிக்கும் என்கிறார்  உரோமரிஷி .


பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்ல வேண்டும்,  யாருக்கு சொல்லக் கூடாது என்று பார்த்தோம்.

அடுத்து மிக உயர்ந்த கலையாகிய , பஞ்ச பட்சி சாஸ்திரம் இந்த உலகத்தில் உள்ள மக்கள் அறியாமல் இருப்பதற்கான
காரணங்கள் எவை என்பதை பற்றி அடுத்து காண்போம் .


                      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                          போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”

January 05, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்ல வேண்டும்- பதிவு-4




உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்ல வேண்டும்-
                                                        பதிவு-4

                           “”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                                                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் -யாருக்கு சொல்ல வேண்டும் :

பாடல்-1


     “””””””பாரப்பாபஞ்ச பட்சிசுருக்கம் சொல்வேன்
                                பார்தனிலே ஒருவருக்குஞ் சொல்லவேண்டாம்
               நேரப்பா கலியுகத்தில் பழிக்கஞ்சார்கள்
                               நேர்மையுள்ள மனமுள்ளோர்  தேடிப்பார்த்து
              ஆரப்பா கோடியிலே ஒருவனுண்டு
                               அமர்ந்திருப்பார்  ஞானநிலை அரிவுதங்கி
               சீரப்பா யிருந்தோதா மனஞ்சோதித்து
                               தெள்ளுதமிழ் பட்சிவித்தை செப்புவாயே”””””””
                                     --------உரோமரிஷி----பஞ்சபட்சி சாஸ்திரம்--------

    
“””””””பாரப்பாபஞ்ச பட்சிசுருக்கம் சொல்வேன்
                                 பார்தனிலே ஒருவருக்குஞ் சொல்லவேண்டாம்
                நேரப்பா கலியுகத்தில் பழிக்கஞ்சார்கள்””””””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தும் முறை ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி காணும் முறை ,

ஆகிய அனைத்தையும் எளிமையாக பயின்று பயன்படுத்தும் வகையில் பஞ்சபட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் உனக்கு சுருக்கமாக சொல்கிறேன் .
அவ்வாறு நான் சுருக்கமாக சொல்லும் பொழுது அனைத்து ரகசியங்களும் அதில் உள் அடங்கி இருக்குமாறு உனக்கு சொல்கிறேன் .
இத்தகைய சிறப்புகள் பல பெற்ற இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் உள்ள ஒரு மனிதருக்கும் சொல்ல வேண்டாம் .

ஏன் ஒரு மனிதருக்கும் சொல்லக் கூடாது என்றால் ,
இப்பொழுது நடப்பது கலியுகம்.
கலியுகத்தில் பாவம் செய்வதற்கு யாரும் அஞ்சுவதில்லை .
அப்படியே பாவம் செய்தாலும் தண்டனை உண்டு என்று உணர்ந்தும் யாவரும் கவலை கொள்வதில்லை .

ஏழையின் ரத்தத்தை குடிக்கும் கயவர்கள் ,
அறியாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் புல்லுருவிகள் ,
சாதியின் பெயரால் கயமைத் தனம் புரியும் கசடர்கள் ,
மதத்தின் பெயரால் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் ,
கடவுளை வியாபாரப் பொருளாக்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ,
அடிமைத் தனத்தை ஊக்குவிக்கும் அறிவிலிகள் ,
மனிதர்களை சிந்திக்க விடாத சுயநலக் கிருமிகள் ,
பிறர்  வாழப் பொறுக்காத மானிடப் பிறவிகள் ,

நிறைந்துள்ள இந்த உலகத்தில் ,
எத்தகைய பாவச் செயலையும் துணிந்து செய்யும் பாவிகள்  இந்த உலகத்தில் நிறைந்துள்ளதால் ,
வாழ்க்கைக்கு , வெற்றியைத் தேடித் தரும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்கிறார்  உரோமரிஷி .
             


                          “””””நேர்மையுள்ள மனமுள்ளோர்  தேடிப்பார்த்து
                ஆரப்பா கோடியிலே ஒருவனுண்டு”””””””
இத்தகைய பாவங்கள் பல செய்து வாழக் கூடிய இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு இடையில் ,
துhய்மையான உள்ளம் கொண்டவராக இருப்பவரை ,
துன்பம் தந்தவனையும் நேசிக்கும் தன்மை கொண்டவரை ,
மற்றவர்  கண்ணில் வரும் கண்ணீரை துடைக்கும் இதயம் கொண்டவரை ,
ஏழையாக வாழ்பவரை ஏற்றி விடும் ஏணியாக இருப்பவரை ,
அறியாமையில் தள்ளாடுபவரை சிந்திக்க வைக்கும் சீர்திருத்தவாதியாக இருப்பவரை ,
திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டவரை மீட்டெடுக்கும் வழியாகாட்டியாக இருப்பவரை ,
மரணத்தின் வாசல் வரை தொட்டு விட்டு வந்தவருக்கு வாழ்கைக்கு உயிராக இருப்பவரை ,

தேடிக் கண்டு பிடித்து அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை என்கிறார்  உரோமரிஷி .
மேலே சொல்லப்பட்ட தன்மைகள் கொண்டவனை இந்த உலகத்தில் தேடிப்பார்த்தால் கோடி மக்களில் ஒருவன் தான் இருப்பான் என்கிறார் உரோமரிஷி .

             

                   “”””””””அமர்ந்திருப்பார்  ஞானநிலை அரிவுதங்கி
          சீரப்பா யிருந்தோதா மனஞ்சோதித்து
                               தெள்ளுதமிழ் பட்சிவித்தை செப்புவாயே”””””””
இந்த உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் நல்ல மனம் கொண்டவன் ஒருவன் தான் இருப்பான் .
அவன் எப்படி இருப்பான் என்றால் ,

பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்தவனாக இருப்பான்.
ஓவ்வொரு செயலுக்கும் விளைவு கண்டிப்பாக உண்டு என்று அறிந்தவனாக இருப்பான் .
பிற உயிர்களை நேசிப்பவனாக இருப்பான் .

மேலும் இத்தகைய தன்மைகளைப் பெற்றவன் கண்டிப்பாக ,
உண்மையான ஞானத்தைத் தேடி அலைபவனாக இருப்பான் .
ஞானத்திற்கான திறவுகோலை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பான் .
உண்மையான ஞானம் அடைந்தவரை ஆசானாக ஏற்றுக் கொள்ள தேடிக் கொண்டு இருப்பான் .
அத்தகையவனை தேடிக் கண்டு பிடித்து அவனுடைய குணங்களையும், பண்புகளையும் மனதையும் சோதித்து அறிய வேண்டும் .

பிறகு அழகான தமிழில் எழுதி வைக்கப் பட்டுள்ள பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லித் தர வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .



பாடல்-2

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லித் தர வேண்டும் என்று சொன்ன ரோமரிஷி , எப்பொழுது பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லித் தர வேண்டும் என்று கீழ்க் கண்ட பாடலில் சொல்லுகிறார் .


    “””””செப்புவாய் வருஷமது பனிரன்டானால்
                                 திடமான மனதென்று அறிந்துகொண்டு
            ஒப்புவாய் சூட்சஷாதி சூட்சஷமெல்லாம்
                              ஒளித்துவைத்து மத்ததெல்லாம் சொல்லுவாய்நீ””””””
                                            --------உரோமரிஷி----பஞ்சபட்சி சாஸ்திரம்-----


சீடனாக இருப்பவரை அவருடைய குணநலன்களை அறிந்து கொண்டு அவருடைய மனப் பக்குவத்தை உணர்ந்து கொண்டு,
எதனைக் கண்டும் அஞ்சாதவர் ,
மன உறுதி படைத்தவர் ,
தோல்விகண்டு துவண்டு விழாதவர் ,
கவலை தன்னை அழுத்திய பொழுதும் கலங்காதவர் ,
என்பதை அவரைப்பற்றி முழுமையாக நன்றாக அறிந்து கொண்டு 12 வருடங்கள் கழித்து ,

பஞ்சபட்சி சாஸ்திரத்தின் அதி சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்  .
காலம் வரும் பொழுது மட்டும் அதிசூட்சும ரகசியங்களை விளங்க வைக்க வேண்டும் சொல்லித் தர வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .

பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்ல வேண்டும் என்று சொன்ன உரோமரிஷி .
பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லக் கூடாது என்று உரோமரிஷி கூறும் பாடல்களை அடுத்து பார்ப்போம் .

                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                      போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  எத்தகைய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு மட்டும்  உபதேசிக்க வேண்டும் என்று உரோமரிஷி கீழ்க்கண்ட பாடல்களில் விளக்குகிறார் .

January 04, 2012

உரோமரிஷி - பஞ்ச பட்சி சாஸ்திரம் - வரலாறு- பதிவு-3





             உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-வரலாறு-பதிவு-3

                         “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                                             ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சிறப்பு வாய்ந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்வோம் .

பஞ்ச பட்சி சாஸ்திரம் - வரலாறு :


பாடல்-1
     “”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
                                       சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்
               விண்ணான சூரனை சம்பாரம்செய்து
                                     வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்
               வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
                                     கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்
                நன்னாகநான் வெளியாயப் பட்சிவித்தை
                                       நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
                                                                      ------உரோமரிஷி---பஞ்சட்சி சாஸ்திரம்--
   “”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
                                சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்”””””
கொடுமைகள் பல செய்து , தொல்லைகள் பல கொடுத்து , தீய செயல்கள் பல செய்து , அட்டுழியம் தொடர்ந்து செய்து கொண்டிருந்த சூரனை அழித்து அமைதியை உண்டாக்குவதற்காக பார்வதி தேவி தன் சக்தியெல்லாம் ஒன்றாக திரட்டி தன் அம்சமாக வேலை சுப்பிரமணியருக்குக் கொடுத்தார் .

அக்கிரமங்களை வீழ்த்தி , அமைதியை நிலைநாட்ட , சிவபெருமான் -மகிமையை வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக உயர்ந்த சாஸ்திரமாகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  சுப்பிரமணியருக்கு உபதேசித்து வெற்றி பெறுவதற்கான திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தார் .

இங்கே ஒன்றை நாம் தெரிந்து கொள்வோம் : -
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் உள்ள வெற்றிக்கான திறவுகோல் என்ன என்று இப்பொழுது பார்ப்போம் .
ஒருவருடைய வாழ்நாளில் நல்ல காலம்  , கெட்ட காலம் என இரண்டு காலங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் .
நல்ல காலத்தில் ஒருவர்  எத்தகைய  தீமையான செயல்கள் செய்தாலும் அவரை எளிதாக யாராலும் வெற்றி கொள்ள முடியாது .அவரை அவ்வளவு எளிதாக யாராலும் தண்டிக்க முடியாது .
ஆனால் அந்த நல்ல நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கெட்ட காலம் நடைபெறும் .

கெட்ட காலம் நடைபெறும் அந்த சரியான காலத்தைக் கண்டுபிடித்து பயன்படுத்தினால் எவ்வளவு பலசாலியான எதிரியாக இருந்தாலும் , சக்திகள் பல பெற்ற எதிரியாக இருந்தாலும் , எதிரியை வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம் .

இந்த நேரங்களின் சூட்சும ரகிசயங்களை விரிவாக உரைப்பது தான் பஞ்ச பட்சி சாஸ்திரம் .
இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தைத் தான் சிவபெருமான் முருகனுக்கு உபதேசித்தார் .



”””விண்ணான சூரனை சம்பாரம்செய்து
                    வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்””””””
சுப்பிரமணியர்  பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதனை சரியான காலத்தில் பயன்படுத்தி சூரனை அழித்து வெற்றி கொண்டார் .
பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்ட சுப்பிரமிணயர், சூரர்களை அழித்து , ஒழித்து வெகுகாலம் ஆன பின்பு உலகத்திலேயே உயர்ந்த சாஸ்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
முனிவர்களுக்கு எல்லாம் தலைவராகிய ,
முனிவர்களுக்கு எல்லாம் குருவாகிய ,
அகத்திய முனிவருக்கு சுப்பிரமணியர் உபதேசித்தார் .



      “”””””வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
                                   கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்”””””
சித்தர்களின் தலைவராகிய அகத்திய முனிவர் ,
சித்தர்களின் குருவாகிய அகத்திய முனிவர் ,

18 சித்தர்கள் என்று சொல்லப்படக் கூடிய ,
                                 1 நந்தி                        11 காலங்கி
                                2 அகத்தியர்                          12 அழுகண்ணர்
                                 3 புண்ணாக்கீசர்                13 பாம்பாட்டி
                                 4 புலத்தியர்                         14 அகப்பேய்ச் சித்தர்
                                5 பூனைக்கண்ணர்           15 தேரையர்
                                6 இடைக்காடர்                  16 குதம்பைச் சித்தர்
                                7 போகர்                                 17 சட்டநாதர்
                               8 புலிப்பாணி
                              9 கருவூரார்
                              10 கொங்கணர்

இவர்களில் சிலருக்குப் பதில் உரோமரிஷி , கும்பமுனி , மச்சமுனி , கோரக்கர் என்ற பலரையும் கூட்டித் தொகையைப் பதினெட்டாகப் பல பட்டியல்களையும் கொள்வர் .

18 சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட மேலே சொல்லப்பட்டவர்களுக்கு அகத்திய முனிவர்  உபதேசம் பண்ணியதோடு நின்று விடவில்லை. அவர்களுடன் ஒன்றாக கலந்து இருந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படக் கூடிய விளைவுகளையும் ,
கிடைக்கக் கூடிய பலன்களையும் ,
பெறக் கூடிய சக்திகளையும் ,
அவர்களுக்கு வெளிப்பட செயல்படுத்திக் காட்டி செயல் விளைவுத் தத்துவத்துடன் விளக்கி உபதேசித்தார் .



  “””””””நன்னாகநான் வெளியாய்ப் பட்சிவித்தை
                                நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
இவ்வாறாக பல்வேறு நிலைகளைக் கடந்து வந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
யாரும் அறியக்கூடாது என்று மறைத்து வைக்கப் பட்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் பாடல்களாக்கி இந்த உலகத்திற்கு வெளிப்படையாக அளித்திருக்கிறேன் என்கிறார்  உரோம ரிஷி .



பாடல்- 2
      “””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
                                    நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு
                குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
                                  குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்
               வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
                                  வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு
                தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
                                   தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
                                                              ---------உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரம்---

   “”””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
                                  நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு””””””””
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் , சூட்சும ரகசியங்களை எல்லாம் உள்ளடக்கி , பாடல்களாக்கி,  பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொன்னேன் .
நல்லோரை நசுக்க வேண்டும் என்றோ ,
பகைத்தோரை அழித்து இன்பம் காண வேண்டும் என்றோ ,
தீய செயல்களில் ஈடுபட்டு உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றோ ,
அறியாமையில் வாடும் நெஞ்சங்களை அழ வைக்க வேண்டும் என்றோ ,

நினைத்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்தாமல் ,
நேர்மையான எண்ணம் கொண்டு ,
சத்திய வழியில் நடந்து ,
பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .



 “”””””குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
                                   குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்”””””””””
தனக்கு எதிராக தகாத செயல்கள் பல செய்து
தன்னை துன்பத்தில் ஆழ்த்தியவரின் ,
தன்னை மனம் கலங்க வைத்தவரின் ,
தன்னை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றவரின் ,
செய்கையால் தன் நிலையில் மாற்றம் அடைந்து , தடுமாற்றத்திற்கு உட்பட்டு, கோபாவேசத்துடன்
உணர்ச்சி வயப்பட்டோ , சிந்தனை தடுமாறியோ , கோபநிலைக்கு தள்ளப்பட்டோ , மனம் தன் நிலையில் இல்லாமல் அவருக்கு எதிராக பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது .

அப்படி தவறாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் நமது குடும்பம் சிதறிப்போகும் .
கர்மவினை நம்மை ஜென்ம , ஜென்மமாக பின் தொடர்ந்து வந்து நமது குலத்தை நாசம் செய்யும் .
ஓவ்வொரு ஜென்மத்திலும் நமக்கு வாழ்க்கையை துன்பம் நிறைந்ததாக கொடுத்து நம்மை வருத்தப்பட வைக்கும் என்கிறார்  உரோமரிஷி .



“”””””வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
                                 வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று , அதன் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதன் பலன்களை உணர்ந்து, அதன் மகிமைகளை தெரிந்து ,அதன் சக்திகளை அடைந்த பின் ,
புகழ் பெற வேண்டும் என்ற ஆசையில் அதனை வெளி உலகுக்கு வெளிப்படுத்தாமல் அமைதியாக இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் .     

வண்டு என்னும் பறவையானது மலரிலுள்ள தேனை சுவைத்து விட்டு அந்த ஆனந்தத்தில் தள்ளாடிக் கொண்டு செல்வது போல்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சக்தியை அடைந்த பின் அந்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய ,
தன் சக்தியை அனைவரும் அறியும் படி படம் பிடித்துக் காட்டக் கூடாது என்கிறார்  உரோமரிஷி .



”””””தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
                             தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
வருத்தப்பட்டு கண்ணீர்  சிந்தி வருபவருக்கு கண்ணீரைத் துடைக்கும் கையாகவும் ,
துன்ப வடுக்களால் காயம் பட்டவருக்கு மருந்தாகவும் ,
திக்கு தெரியாதவருக்கு திசை காட்டும் வழிகாட்டியாகவும் ,
இருளில் தத்தளிபவருக்கு வெளிச்சத்தைக் காட்டும் ஒளியாகவும் ,
வாழ்க்கையைத் தவற விட்டவருக்கு புது வாழ்வை தரும் இன்பமாகவும் ,
இந்த உலகத்தில் இருந்து கொண்டு சமுதாயத்திற்கு தான் யார்  என்பதையும், தன் சக்தி எத்தகையது என்பதையும் ,வெளிப்படுத்தாமல்
இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு தொண்டுகள் பல செய்து மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பத்தைக் கண்டு வாழ வேண்டும் என்கிறார்  உரோமரிஷி.

 பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளையும் வரலாற்றையும் பார்த்த நாம் அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
யாருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதை பற்றிப் பார்ப்போம் .


                             “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                  போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”