February 24, 2012

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்அருள்இல்லார்க்கு-பதிவு15





        இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அருள் இல்லார்க்கு-பதிவு-15
      
                          “”பதிவு பதினைந்தை விரித்துச் சொல்ல
                                                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியாததைப் பற்றி இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வசனம்:1 :
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி : ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று,  மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
                                                               ------மத்தேயு - 19 : 23

ஏமாற்று வித்தை பல கற்று - அதை
ஏமாந்தவர்  மேல் சரிவரப் பயன் படுத்தி
மயக்கு மொழி பேசி மானிடர்  மனதை மயக்கி
கரையான் அரித்த நெஞ்சுடன்
கணக்கற்ற தவறான செயல்களைச் செய்து ,
கரை படிந்த உள்ளத்துடன்
களங்கமுள்ள செயல்கள் பல செய்து ,
                           வஞ்சக நெஞ்சமும் ,
                           வசீகரப் பார்வையும் ,
                           மாயஜால வார்த்தையும் - கொண்டு
                           செல்வம் பல சேர்த்து ,
                          பணத்தில் திளைத்து ,
                          பணத்தில் களித்து ,
                          சுக போகமுடனும்
                          பன்னீரில் குளித்து ,
                         சந்தனத்தில் நீந்தி ,
                         கன்னியர்  புடை சூழ
                         உலா வரும்
                        செல்வ நிலை கொண்ட
                         சீமான்களும் ,
                        பணக்காரர்களும் ,
                       ஐஸ்வரியவான்களும் ,

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்றால் ,
அனைத்து செல்வங்களையும் துறந்தவனாக இருக்க வேண்டும் ;
பாவங்களைக் கழித்தவனாக இருக்க வேண்டும் ;
துன்பங்களை விட்டவனாக இருக்க வேண்டும் ;
அறவழி நின்றவனாக இருக்க வேண்டும் ;
பொய் சொல்லாதவனாக இருக்க வேண்டும் ;
புறங்கூறாதவனாக இருக்க வேண்டும் ;
சூது செய்யாதவனாக இருக்க வேண்டும் ;
களவு கடைப் பிடிக்காதவனாக இருக்க வேண்டும் ;
கொலை செய்யாதவனாக இருக்க வேண்டும் ;
கொள்ளை அடிக்காதவனாக இருக்க வேண்டும் ;
கற்பு நெறி பிறழாதவனாக இருக்க வேண்டும் ;
பேராசை இல்லாதவனாக இருக்க வேண்டும் ;
சினம் தவிர்த்தவனாக இருக்க வேண்டும் ;
கடும்பற்றை விட்டவனாக இருக்க வேண்டும் ;
முறையற்ற பால் கவர்ச்சியை
நினைவாலும் , உடலாலும் தீண்டாதவனாக இருக்க வேண்டும் ;
உயர்வு தாழ்வு மனப்பான்மையை வாழ்வில்
கடை பிடிக்காதவனாக இருக்க வேண்டும் ;
வஞ்சக நெஞ்சத்தை கொண்டு
அழிக்கும் மனம் இல்லாதவனாக இருக்க வேண்டும் ;
இத்தகைய பல்வேறு தன்மைகள் கொண்டவர்
கண்டிப்பாக ஐஸ்வரியவனாக இருக்க முடியாது .

பணக்காரனாக வேண்டுமானால் இதில்
ஏதாவது ஒன்றை பயன் படுத்தித் தான் பணக்காரனாக முடியும் .
இதில் ஏதாவது ஒன்றை பயன் படுத்தாமல் பணக்காரனாக முடியாது .

நேர்மையான வழியில் பணம் சம்பாதித்து
உயர்  நிலையை அடைய முடியாது .
ஏதாவது ஒரு சிறிய தவறோ , மற்றவருக்கு துன்பமோ செய்தால் ,
தான் பணக்காரனாக முடியும் .
அதனால் தான் இயேசு இத்தகைய தன்மைகள் கொண்டவர்கள்
பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது என்பதை
குறிப்பால் உணர்த்தத் தான்
ஐஸ்வரியவான் பரலோக ராஜ்யத்தில்
நுழைய முடியாது என்று உண்மையாக
சத்தியமாக சொல்லுகிறேன் என்றார்.



வசனம்:2 :
ஐசுவரியவானைப் பற்றி விளக்கிய இயேசு அதனை ஒரு உவமையுடன் ஒப்பிட்டு மேலும் விளக்குகிறார்:

மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ,ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் எனறு உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .”
                                                                                      ---------மத்தேயு - 19 : 24

ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில்
நுழைய முடியாது என்றால்
எத்தகைய தன்மைகள் கொண்டவர்கள்
பரலோகராஜ்யத்தில் நுழைய முடியும் என்று
சிந்தித்துப் பார்த்தால்

எந்த விதமாக களங்கமும் இல்லாதவர் ;
அனைத்து    விதமான ஆசைகளையும் எரித்தவர் ;
எல்லா     விதமான செல்வங்களையும் துறந்தவர் ;
கற்பு நெறி பூண்டு ஒழுகுபவர் ;
ஆண்டவர் பால் தன் மனதை செலுத்துபவர் ;
தன் பாவங்களை ஆண்டவரிடம் ஒப்படைத்தவர் ;
ஆண்டவரிடம் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவர் ;
ஆண்டவரிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர் ;
அனைத்தும் ஆண்டவரே என்றும் உணர்ந்தவர் ;

இத்தகைய தன்மைகள் கொண்டவர்கள் மட்டுமே
பரலோக ராஜ்யத்தை அடைய முடியும் என்று பொருள் .


பொருட்களில் அளவில் உருவத்தில்
மிகச் சிறியதாக கருதப்படுவது ஊசி .
அத்தகைய ஊசியின் காதிற்குள்
ஒட்டகத்தை நுழைக்க
முயற்சி செய்தால் கூட நுழைத்து விடலாம் - ஆனால்
கள்ளத்தனமான எண்ணங்களையும் ,
தவறான செய்கைகளையும் ,
மனதை வருத்தப்பட வைக்கும் செயல்களையும் ,
பல்வேறு விதமான களங்கங்களையும் ,
தன்னுள் கொண்ட
ஐஸ்வரியவான் பரலோக ராஜ்யத்தில்
கண்டிப்பாக நுழைய முடியாது என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர்:
      “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
       இவ்வுலகம் இல்லாகி யாங்கு
                                            -----திருவள்ளுவர்----திருக்குறள்----- 

இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து விட்டால்
தன் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்  கொள்ளவும் ;
தன் ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவும் ;
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் ;
தன் சிந்தனையை செயல்படுத்திக் கொள்ளவும் ;
தன் கற்பனைக்கு உருவம் கொடுத்துக் கொள்ளவும் ;
தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவும்  ;
தன் குடும்பத்தை செழிப்பாக்கிக் கொள்ளவும் ;
சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ளவும் ;
மற்றவரிடத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவும்;

உறவுகள் தன்னை மதிக்கும் படி நடந்து கொள்ளவும்;
நண்பர்கள் தன் மேல் பாசமழை பொழியும் படி நடந்து கொள்ளவும் ;
தன் சந்ததிகள் தன்னை வாழ்த்தும் படி நடந்து கொள்ளவும் ;
உயர்ந்தோர்  போற்றும் படி நடந்து கொள்ளவும் ;
சான்றோர்  வாழ்த்தும் படி நடந்து கொள்ளவும் ;

நம் வாழ்க்கை சிறப்புடன்
அமைய வேண்டும் என்றால் பொருள் வேண்டும் .
பொருள் இருந்தால் தான் நமக்கு தேவையானவற்றை
நிறைவேற்றிக் கொள்ள முடியும்,
பொருள் இல்லாமல் நமக்கு தேவையானவற்றை
நிறைவேற்றிக் கொள்ள முடியாது .


இவ்வுலகில் இந்த உலகில்
வாழ வேண்டுமென்றால் பொருள் வேண்டும் .
சிறப்புடன் வாழ வேண்டுமென்றால் ,
மேலே சொன்னவாறு எல்லாவற்றையும் பெற்று
வாழ வேண்டும் என்றால் .

பொருள் நல்ல வழியில் தேட முடியாது ;
கிடைக்கும் என்று சொல்ல முடியாது ;
சமுதாயம் அதற்காக ஒத்துழைப்பும் கொடுக்காது ;
அத்தகைய பொருளை நல்வழியில் தேட முடியாது ;
பொருள் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது ;
இச்சமுதாயம் வாழவும் விடாது ;

அதனால் மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
அவன் செய்யும் செயல்கள்
கர்ம வினைகளைக் கொண்டு வந்து விடுகிறது.
கர்ம வினையில் மனிதன் மாட்டிக் கொள்வதால்
பிறப்பு - இறப்பு என்ற சூழலில் சிக்கிக் கொள்கிறான் .

கர்ம வினைகள் முழுவதையும் எரித்து ,
பிறப்பு - இறப்பு என்ற சூழற்சியை அறுத்து ,
முக்தி என்ற நிலையை அடைந்தால் தான்
முக்தி கிடைத்தால் தான்
அவன் ஆதி நிலை , முதல் நிலை , மூல நிலை
என்று சொல்லக் கூடிய இருப்பு நிலையுடன் சேர முடியும் .
அதாவது அந்த உலகம் என்று சொல்லக் கூடிய
சுத்தவெளி , இருப்பு நிலையில் கலக்க முடியும் ,
பிறப்பை அறுக்க முடியும் ,
அதற்கு
அன்பு கருணையும் மனதில் சுரக்க வேண்டும் .
கர்ம வினை களைய வேண்டும் .
முன்வினை , முயற்சி , ஆராய்ச்சி கொண்டு
அதை அடைய வேண்டும் .

கர்ம வினைகளைக் கொண்டவனால்
இந்த உலகத்தில் தான் வாழ முடியும் .
கர்ம வினைகளைக் களைந்தவனால் மட்டுமே
இறைவனை அடைய முடியும் என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு ( பணம் , பொருள் ……… ) கொண்டவனால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .
இவையனைத்தையும் விட்டால் தான் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்கிறார்.
இதற்கு ,
அனைத்தையும் வைத்துக் கொண்டு பரலோக ராஜ்யம் அடைய முடியாது ,
அனைத்தையும் விட்டால் தான் பரலோக ராஜ்யம் அடைய முடியும்
என்று பொருள் .



திருவள்ளுவரும் , கர்ம வினை கொண்டவரால் இந்த உலகத்தில் தான் வாழ முடியும் .
கர்ம வினை கழித்தவரால் மட்டுமே இறைநிலையுடன் இணைய முடியும் என்று கூறுகிறார்.
இதற்கு ,
கர்ம வினைகளை வைத்தக் கொண்டு இறை நிலை அடைய முடியாது ,
கர்ம வினைகளைக் கழித்தால் தான் இறை நிலை அடைய முடியும்
என்று பொருள் .   


                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                      போற்றினேன் பதிவுபதினைந் துந்தான்முற்றே “”

February 22, 2012

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்-இன்னாசெய்தாரை-பதிவு-14




       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-இன்னா செய்தாரை-பதிவு-14
      
                    “”பதிவு பதிநான்கை விரித்துச் சொல்ல
                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
சாதி வெறியை மறந்து ,
மத உணர்வைத் துறந்து ,
இன வேறுபாட்டைக் களைந்து ,
மொழி வேற்றுமையைச் சிதைத்து ,
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனாலும்
வாழ்க்கையில் பின் பற்றப்பட வேண்டிய ,
வாழ்க்கையில் கடை பிடிக்கப்பட வேண்டிய  ,
ஒரு செயல் உண்டு - அது என்ன என்பதைப் பற்றி
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :



வசனம்-1:
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்  ; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள் ;உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”
                                                               -----மத்தேயு - 5 : 44
                                                              
குறுகிய மனப்பான்மை விடுத்து ,
பரந்த மனப்பான்மை கொண்டவர்களால் தான் ,
குறுகிய சிந்தனை அகற்றி
விரிந்த சிந்தனை பெற்றவர்களால் தான் ,
சுய நலம் புதைத்து
பொது நலம் விதைத்தவர்களால் தான் ,
தான் மட்டுமே வாழ வேண்டும் என்பதை விடுத்து
அனைவரும் வாழ வேண்டும்
என்ற எண்ணம் கொண்டவர்களால் தான் ,

                                            உயரிய சிந்தனை ;
                                           தன்னலமற்ற நலம் ;
                                           அன்பின் அர்த்தம் ;
                                           கருணையின் மொழி ;
                                           துன்பத்தின் வீரியம் ;
                                            ஏழ்மையின் கலக்கம் ;
                                            வறுமையின் சோகம் ;
                                            கண்ணீரின் கவலை ;
ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும் .

இத்தகைய சிறப்பை கொண்டவர்களால் தான் ;
இத்தகைய உணர்வை அடைந்தவர்களால் தான் ;
இத்தகைய பண்பைப் பெற்றவர்களால் தான் ;
இத்தகைய மனத்தெளிவைப் பெற்றவர்களால் தான் ;
இவர்களால் மட்டும் தான் ;

நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் - எதிரியையும் நேசிக்க முடியும் ;
நம்மை கவலையில் ஆழ்த்தும் - பகைவனையும் நேசிக்க முடியும் ; 
நம்மை சோகத்தில் தள்ளும் - விரோதியையும் நேசிக்க முடியும் ;
நம்மை கண்ணீரில் வாட்டும் - துரோகியையும் நேசிக்க முடியும் ;

இத்தகைய தன்மை இல்லாதவர்கள்
நண்பனை கூட நேசிக்க முடியாது
அதனால் தான் இயேசு
உங்களுக்கு துன்பங்களைக் கொடுக்கும் சத்ருக்களை சிநேகியுங்கள் .

உங்கள் முன்னேற்றத்தைப் பிடிக்காமல்
நீங்கள் வாழ்வதை பொறுக்காமல்
உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள் .

உங்களை பகையாக நினைத்து
இன்னல்கள் கொடுக்கும் பகையாளிகளுக்கும்
நன்மையே செய்யுங்கள் .

உங்களை நித்திக்கிறவர்கள்
உங்களைத் துன்பப் படுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களுடைய தவறுகளை மன்னித்து
அவர்கள் நலம் பல பெற்று வாழ
இறைவனிடம் ஜெபம் பண்ணுங்கள் .


ஒருவன் செய்த தவறை மன்னித்து மறந்து
அவன் வாழ்க்கை சிறக்க
அவன் வாழ்க்கை உயர்வடைய
அவன் துன்பம் நீக்கி சிறப்புற்று வாழ
அவன் இன்பத்துடன் சுகித்து வாழ
ஜெபம் பண்ண வேண்டும் என்பது மிக உயர்ந்த மனப்பான்மை
அத்தகைய ஒரு மனப்பான்மையை கொள்ள வேண்டும்
என்கிறார்  இயேசு .

மனிதன் - ஒருவன் செய்த தவறை மன்னிக்கும் போது மனிதனாகிறான்
மனிதன் - ஒருவன் செய்த தவறை மறக்கும் போது தெய்வமாகிறான்
என்ற அடிப்படையில் தான்
என்பதை நினைவில் கொண்டு தான்
பகைவனையும் நேசிக்க வேண்டும் என்கிறார்  இயேசு .

பகைவனையும் நேசிக்க வேண்டும் என்றால்
உயர்ந்த குணநலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும்
உயர்ந்த குணநலன்கள் கொண்டவர்களால் தான்
பகைவனையும் நேசிக்க முடியும் என்ற அடிப்படையில் தான்
இயேசு பகைவனை நேசிக்க வேண்டும் என்கிறார் .

அதாவது
தீய எண்ணம் நீக்கி
உயர்ந்த எண்ணம் கொண்டு
வாழ வேண்டும் என்பதற்காக

மனிதன் நல்லவனாக வாழ்ந்து
நல்லதே செய்தே சமுதாயத்தில் வாழ வேண்டும்
சமுதாயம் துhய்மை பெற வேண்டும்
அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் - என்ற
தொலைநோக்கு பார்வையில் தான்
இயேசு பகைவனையும் நேசி என்கிறார்.



வசனம்-2 :
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்
                                                             -----மத்தேயு - 5 : 45 
பகைவனை நேசிக்கும் தன்மை பெற்றவர்கள் ,
பகைவன் செயலை மன்னிக்கும் மனதைப் பெற்றவர்கள் ,
உயர்ந்த குணத்தைப் பெற்றவர்கள் ,

அனைத்தையும் தன்னுள் கொண்ட
எல்லாம் வல்ல ஆண்டவனின் ,

அனைத்தையும் ஆண்டு கொண்டிருக்கிற
எல்லாம் வல்ல ஆண்டவனின் ,

அனைத்தையும் காத்துக் கொண்டிருக்கிற
எல்லாம் வல்ல ஆண்டவனின்,

அனைத்தையும் வழி நடத்துகிற
எல்லாம் வல்ல ஆண்டவனின் ,

பிதாவின் குழந்தையாக இருப்பதற்கு உரிய
தகுதியைப் பெறுகிறீர்கள்

பிதாவின் குழந்தையாகிறீர்கள்
என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர்:

              “””“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
                     நன்னயம் செய்து விடல்””””
                                               ------திருக்குறள்----திருவள்ளுவர்-------

                நம்முடைய ,
                                       மனம் வருத்தப் படும்படி ;
                                       கண்கள் கண்ணீர் விடும்படி ;
                                       இதயம் இரத்தம் சிந்தும்படி ;
                                       வாழ்க்கை வெறுத்துப் போகும்படி ;
                                       அமைதி குலைந்து போகும்படி ;
                                        நிம்மதி சிதைந்து போகும்படி ;
                                        இன்பம் மறைந்து போகும்படி ;
                                        வறுமை நம்மை வாட்டும்படி ;
                                        ஏழ்மை நம்மை தாக்கும்படி ;
                                        சிந்தனை சிதைந்து போகும்படி ;

துன்பம் பல கொடுத்து
நம்மை கலங்க வைப்பவர் ;
எதிராளியாக நினைத்து ஏளனம் செய்பவர் ;
விரோதியாக நினைத்து துன்பம் கொடுப்பவர் ;
பகையாளியாக நினைத்து தொல்லை கொடுப்பவர் ;
நம்முடைய முன்னேற்றத்தை விரும்பாதவர் ;
நம்முடைய முன்னேற்றத்தைத் தடை செய்ய காரியங்கள் வகுப்பவர் ;
கீழே தள்ளி விட திட்டம் தீட்டுபவர் ;
கூட இருந்தே குழி பறித்து துரோகம் செய்பவர் ;

போன்ற தன்மைகள் கொண்டவர் ;
நம் வாழ்வில் எதிர்பட்டு
துன்பங்கள் பல செய்தாலும்
ஆதனால் நாம் பாதிப்பு நிலை அடைந்தாலும்
துன்பம் செய்தவருக்கு எதிராக துன்பம் செய்யாமல்
தனக்கு துன்பம் செய்தவருடைய

                                                  மனம் திருந்தும்படி ;
                                                  உள்ளம் வருந்தும்படி ;
                                                  தவறை உணரும்படி ;
                                                  சிந்தனை தெளியும்படி ;
                                                  இதயம் சிந்திக்கும்படி ;
                                                  நாணத்தால் துவளும்படி ;

துன்பம் செய்தவருக்கும் நன்மையே செய்து     
தவறுக்கு தண்டனை கொடுக்காமல்


தவறு செய்தவன் தன் தவறை 
தானே உணர்ந்து மனது திருந்தும் படி
துன்பம் செய்தவருக்கும்
அவர்  மனந் திருந்தும் படி
நன்மையே செய்ய வேண்டும்
என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு , நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் பகைவனுடைய செயலை மன்னித்து , அவனை நேசித்து அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிறார்.

அவ்வாறே ,
திருவள்ளுவரும் , நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் பகைவனுக்கு அவன் நாணுமாறு நன்மை செய்ய வேண்டும் என்கிறார்.


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுபதிநான் குந்தான்முற்றே “”

February 20, 2012

இயேசு கிறிஸ்து - அழுகுணிச் சித்தர்-ஊற்றைச்- பதிவு-13





      இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-பதிவு-13
      
                    “”பதிவு பதிமூன்றை விரித்துச் சொல்ல
                                                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இயேசு மறுபடியும் பிறத்தல் என்பதைப் பற்றி , அவற்றைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

இயேசு நிக்கொதேமுவிடம் மறுபடியும் பிறத்தல் பற்றி பேசுகிறார்:

வசனம் - 1:
ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.”
                                                                                ------யோவான்-3:3

நம்முடைய பாவங்கள் அனைத்தும் கழிக்கப்பட்டால் ,
நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டால் ,
கடவுள் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு
மன்னித்து நம்மை ஏற்றுக் கொண்டால் ,
கடவுளுடைய குழந்தையாக நம்மை ஏற்றுக் கொண்டால் ,
நாம் புதியதாகப் பிறப்பு எடுத்தவர்களாவோம் ;
அதாவது புதியதாகப் பிறந்தவர்களாவோம் ;
அதையே மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையின்
மூலம் குறிப்பிடுகிறார்  இயேசு .

இவ்வாறு ஒருவன் ஒரு மனுஷன்
கடவுளுடைய ஆசி பெற்று மறுபடியும் பிறந்தால் மட்டுமே ,
கடவுளுடைய ராஜ்யத்தைக் காண்பான் .
இவ்வாறு ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்
கடவுளுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் .
என்பதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன் ;
சத்தியமாக உனக்குச் சொல்கிறேன் ;
மெய்யாக உனக்குச் சொல்கிறேன் ;
என்று நிக்கொதேமுவிடம் கூறுகிறார்  இயேசு .



வசனம்-2 :
இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளாத ,
உண்மை உணர முடியாத ,
விளக்கம் பெற முடியாத ,
அறிவு தெளிவு பெறாத ,
யோசிக்கும் நிலையில் இல்லாத ,
நிக்கொதேமு ,

அதற்கு நிக்கொதேமு : ஒரு மனுஷன் முதிர்  வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான்.
                                                                                -----யோவான்-3:4

இயேசுவின் வசனத்தின் வார்த்தைகளின்
அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டு
சிந்தனை தடுமாறி ,
குழப்பத்தில் தள்ளப்பட்டு ,
அறியாமையில் உழன்று ,
மறுபடியும் பிறத்தல் என்றால்
இரண்டு முறை தாயின் வயிற்றில் பிறக்க
வேண்டும் என்று புரிந்து கொண்டு ,
தவறாக அர்த்தம்  எடுத்துக் கொண்டு ,
ஒரு மனுஷன் வயதாகி விட்டால் மீண்டும் எப்படி பிறக்க முடியும் ?

மேலும் அவன் தன்னுடைய தாயின் கர்ப்பத்தில்
இரண்டாவது தடவையாக உட்பிரவேசித்து
எப்படி பிறக்க முடியும் என்று கேட்கிறார் .



வசனம்-3 :
மறுபடியும் பிறத்தல் என்பதைப் பற்றி விளக்கம் தந்த
இயேசுவின் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்ட
நிக்கொதேமுவின் வார்த்தைகளுக்கு 

எவ்வாறு மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ,
மறுபடியும் பிறப்பதன் பலன் என்ன என்பதைப் பற்றி இயேசு விளக்கம் தருகிறார் .

இயேசு பிரதியுத்தரமாக : ஒருவன் ஜலத்தினாலும் , ஆவியினாலும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்.
                                                                                --------யோவான்-3:5

ஒருவன் நீரினாலும் , ஆவியினாலும் மறுபடியும் பிறந்தால்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பான்
ஒருவன் நீரினாலும் , ஆவியினாலும் மறுபடியும் பிறவா விட்டால்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் ,
என்று உண்மையாக உனக்குச் செல்கிறேன் என்றார் .

இதனால் தான் மனுஷனுடைய
பாவங்கள் மன்னிக்கப் பட்டு ,
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு ,
கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ,
மறுபடியும் பிறத்தல் என்பற்கு அடையாளமாக
ஜலத்தினாலும் , ஆவியினாலும்
ஏற்றுக் கொள்ளப்படும் முறை கடை பிடிக்கப் பட்டு
நடை முறையில் பயன் படுத்தப் பட்டு வருகிறது .

ஒருவன் தன் பாவங்களை நீக்கி மறுபடியும் பிறந்தால் மட்டுமே
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்கிறார்  இயேசு .



அழுகுணிச் சித்தர் :
               “”””ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
                     மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
                     மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
                     ஊற்றைச் சடலம்விட்டே என்கண்ணம்மா
                                           ஊன்பாதஞ் சேரேனோ””””
                                                                           -------அழுகுணிச் சித்தர்-------

                              “ ஊற்றைச் சடலமடி
உடலில் உயிர்  இருக்கும் வரை தான் உடலுக்கு உடல் என்று பெயர் .
உடலை விட்டு உயிர்  பிரிந்தால் பிணம் என்று பெயர் .

உடலை விட்டு உயிர்  பிரிந்தால்
ஒரு சில மணி நேரங்களிலேயே நாற்றமடிக்கிறது ;
புதைத்தால் அரிக்கப்படுகிறது ;
எரித்தால் சாம்பலாகிறது ;

உயிர்  உடலில் இருக்கும் வரை
என்ன செயல்களை செய்யக் கூடாதோ அத்தனையும் செய்யும் மனிதன்
உயிர்  உடலை விட்டுப் பிரிந்தால் ஒன்றுக்கும் உதவாத பிணம் .



                               “உப்பிருந்த பாண்டமடி
பாண்டம் என்றால் பாத்திரம் என்று பொருள் .
பாண்டம் என்றால் பெரும்பாலும் மண்ணால் செய்யப் பட்ட பாத்திரம் என்று பெரும்பாலும் பொருள் கொள்ளப்படுகிறது .

உப்பு வைக்கப் பட்ட பாத்திரமானது
அரிக்கப்படும் தன்மையை அடைகிறது ;
அழிந்து விடுவதற்குரிய நிலையை எட்டி விடுகிறது ;


பாண்டம் எனப்படுகிற பாத்திரம்  நமது உடலையும் ,
உப்பு என்பது நமது கர்ம வினைப் பதிவுகளையும் குறிக்கிறது .


பாத்திரமாகிற நமது உடலில்
உப்பாகிய கர்ம வினை
இருக்கின்ற காரணத்தினால் தான்
நமது உடல்
ஜென்மம் ஜென்மமாக பிறப்பெடுப்பதற்கும் ;
பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்குவதற்கும் ;
துன்பச் சகதியில் சிக்குண்டு வருந்துவதற்கும் ;
காரணமாக அமைகின்றது ;
அடிப்படையாக இருக்கின்றது ;
ஆதாரமாக இருக்கின்றது ;
மூலமாக இருக்கின்றது ;



                    “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
உயிரில் பதிந்துள்ள கர்மவினைப் பதிவுகளே
மனிதன் என்னும் பிறப்பெடுத்து ,
ஜென்மம் - ஜென்மமாக , பிறப்பு - இறப்பு என்ற வாழ்க்கைச் சூழலில் சிக்கி ,
துன்பங்கள் , துயரங்கள் , கவலைகள் உன்ற சகதியில் மாட்டி ,
உறவினர்கள் , சுற்றத்தார் , குடும்பத்தார்  என்ற குடும்பச் சுமையைத் தாங்கி ,
சொல்ல முடியாத துன்பம் ,
வெளிக் காட்ட முடியாத மனம் ,
ஆகியவற்றில் மாட்டி
துயரக் கடலில் நீந்த வேண்டி இருக்கிறது .



            “””””மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை””””
மனிதனாகப் பிறப்பு எடுத்தால்
மனிதன் அடையத் தக்க எல்லா விதமான நிலைகளையும்
அடைய வேண்டி இருக்கிறது .

கர்ம வினைப் பதிவுகளை கழிக்கத் தெரியவில்லை ;
கர்ம வினைப் பதிவுகளால் ஏற்படும் பிறப்பை நிறுத்தத் தெரியவில்லை ;
பிறப்பு-இறப்பு என்ற சூழலை அறுக்கத் தெரியவில்லை ;
முக்தி என்னும் நிலையை அடையும் வழி தெரியவில்லை ;

முக்தி என்னும் நிலையை அடைவதற்கு
உரிய வழியை ஆராய்ந்து பார்த்தேன் .

அந்த நிலை அடைந்தவர்களையும் காண முடியவில்லை;
அந்த நிலை அடைந்தவர்களும் அதை சொல்லவில்லை;

அதை நான் தேடுகிறேன்,
தேடினேன் , தேடிக் கொண்டே இருக்கிறேன் .

முக்தி அடைவதற்கு உரிய வழிமுறைகள்
தெரியவும் இல்லை
கிடைக்கவும் இல்லை



               “””மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்”””
கர்ம வினைகளைக் களைந்து ,
ஜென்மம் -ஜென்மங்களாக தொடர்ந்து வரும்
பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியை அறுத்து ,
முக்தி என்னும் நிலையை அடைந்து ,
மனிதன் என்னும் நிலை இறந்து ,
தானே அவனாக மாறும் நிலையைத் தான்
மாற்றிப் பிறத்தல்என்று வார்த்தையால்
குறிப்பிடுகிறோம் .

இவ்வாறு மாற்றிப் பிறந்தால் பிறந்து விட்டால்
புறப்பு-இறப்பு என்ற சுழற்சி கிடையாது .


மனிதனாகப் பிறந்தால்
கர்ம வினை உண்டு ,
பிறப்பு-இறப்பு என்ற சுழற்சி உண்டு ,
ஜென்மங்கள் உண்டு ,
இவையனைத்தும் உண்டு ,

இவையனைத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க
மனிதனாகப் பிறக்கும் பிறப்பை அறுத்து
புதிதாக பிறக்க வேண்டும் .
மனிதன் என்ற நிலையை மாற்றிப் பிறக்க வேண்டும் .

முக்தி என்ற நிலை அடைந்து தானே அவனாக மாறி பிறந்தால்
மட்டுமே மனிதப் பிறப்பை தடுக்க முடியும்

இவ்வாறு மாற்றிப் பிறப்பதற்கு உரிய வழி
எனக்குக் கிடைத்தால் என்ன செய்வேன் என்பதை கூறுகிறார்
அழுகுணிச் சித்தர் .



“””ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
                         உன்பாதஞ் சேரேனோ””
மாற்றிப் பிறப்பதற்கு உரிய வழி எனக்கு கிடைத்தால்
அதனுடைய ரகசியம் எனக்குத் தெரிந்தால்
அதனைப் பயன்படுத்தி ,
செயல்படுத்தி ,
பிறப்பு - இறப்பு அறுத்து ,
கர்ம வினைகளை களைந்து ,
இனி எடுக்கப் போகும் பல ஜென்மங்களை எரித்து ,
மனிதப் பிறவிகளை உடைத்து ,
இந்த உடலை விட்டு விட்டு
எல்லாம் வல்ல தெய்வீகத்துடன்
இறைநிலையுடன்
சுத்த வெளியுடன் கலந்து
அமைதி பெறுவேன் என்கிறார் அழுகுணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து- அழுகுணிச் சித்தர் :
இயேசு , மறுபடியும் பிறந்தால் மட்டுமே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்றார் .

அவ்வாறே ,
அழுகுணிச் சித்தரும் , தான் மறுபடியும் பிறக்கும் ரகசியம் தெரிந்து கொண்டால் , அதை செயல்படுத்தி எல்லாம் வல்ல இறைநிலையுடன் இணைவேன் என்கிறார் .


                               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                   போற்றினேன் பதிவுபதிமூன் றுந்தான்முற்றே “”