August 17, 2018

திருக்குறள்-பதிவு-3


                திருக்குறள்-பதிவு-3

“””ஏதிலார் குற்றம்போல்
தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும்
உயிர்க்கு””””

உலகில் வாழும்
மனிதர்களை மூன்று
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று : போட்டியில் கலந்து
         கொண்டு வெற்றி
         பெறுபவர்கள்

இரண்டு: போட்டியில் கலந்து
         கொண்டு தோல்வி
         அடைபவர்கள்

மூன்று : போட்டியில் கலந்து
         கொள்ளாமல்
         விமர்சிப்பவர்கள்

கிரிக்கெட் போட்டி
ஒன்றை எடுத்துக்
கொண்டால்
அந்த போட்டியில்
கலந்து கொண்டவர்களில்
ஒரு பிரிவினர்
போட்டியிட்டு போராடி
வெற்றி பெறுகிறார்கள்;
மற்றொரு பிரிவினர்
போட்டியில் கலந்து
கொண்டு போட்டியிட்டு
போராடி தோல்வி
அடைகிறார்கள்;
ஆனால் இதில்
கலந்து கொள்ளாமல்
வெளியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
அனைவரும் விமர்சனம்
செய்கிறார்கள்.

போட்டியில்
வெற்றி பெற்றவர்கள்
சரியாக ஆடவில்லை
இருந்தாலும் வெற்றி
பெற்றார்கள் என்று
வெற்றியை விமர்சிப்பார்கள்
தோல்வியடைந்தவர்கள்
பணத்தை
வாங்கிக் கொண்டு
விட்டுக் கொடுத்தார்கள்
அதனால்
தோல்வி அடைந்தார்கள்
என்று தோல்வி
அடைந்தவர்களைப் பற்றி
விமர்சிப்பார்கள்
விமர்சனம் செய்பவர்கள்

விமர்சனம் செய்பவர்கள்
விமர்சனம் செய்து
கொண்டு தான் இருப்பார்கள்
ஆனால் எதிலும் கலந்து
கொள்ள மாட்டார்கள்

அரசியல் என்று
எடுத்துக் கொண்டால்
தேர்தலில் போட்டியிட்டு
ஒரு கட்சி
ஆளுங்கட்சியாகவும்
மற்றொரு கட்சி
எதிர்க்கட்சியாகவும்
இருக்கும்
ஆனால் போட்டியிடாதவர்கள்
விமர்சகர்களாக இருந்து
கொண்டு விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்

வெற்றி பெற்றவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருக்கிறது இருந்தாலும்
வெற்றி பெற்றார்கள்
தோல்வி அடைந்தவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருந்தது அதை
சரி செய்து கொள்ளாத
காரணத்தினால் தான்
தோல்வி அடைந்தார்கள்
என்று பேசுவார்கள்
அவர்களைப் பற்றி
விமர்சனம் செய்வார்கள்

விமர்சனம் செய்பவர்கள்
அனைவரும் களத்தில்
இறங்கி வேலை
செய்ய மாட்டார்கள்.

களத்தில் இறங்கி
வேலை செய்பவர்கள்
ஒன்று வெற்றி
பெறுவார்கள்
அல்லது தோல்வி
அடைவார்கள்
வெற்றி பெற்றவர்கள்
மேலும் உயர் நிலை
அடைவதற்கு தேவையான
முயற்சிகளை செய்து
கொண்டு இருப்பார்கள்
தோல்வி அடைந்தவர்கள்
ஏன் தோல்வி  அடைந்தோம்
என்று யோசித்து
தோல்விக்கான
காரணங்களை அலசி
ஆராய்ந்து அதை
சரி செய்து
வெற்றியை நோக்கி
பயணித்துக் கொண்டிருப்பார்கள்

ஆனால் விமர்சனம்
செய்பவர்கள்
தொடர்ந்து விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்
அவர்கள் வாழ்க்கையில்
எந்த முன்னேற்றமும்
இருக்காது
எந்த நிலையில்
இருக்கிறார்களோ அதே
நிலையில் தான்
இருப்பார்கள்

பிறருடைய குற்றங்களை
கண்டுபிடித்து
விமர்சனம் செய்து
கொண்டிருப்பதால்
இச்சமுதாயத்திற்கு
ஒரு பயனும் இல்லை

எனக்கு ஏன்
படிப்பு வரவில்லை;
எனக்கு ஏன்
நல்ல வேலை
கிடைக்கவில்லை;
எனக்கு ஏன்
அதிக சம்பளத்தில்
வேலை கிடைக்கவில்லை;
என்னுடைய குடும்பம்
ஏன் கஷ்டப்படுகிறது;
என்பதை
யோசித்துப் பார்த்து
தன்னிடம் உள்ள
குற்றங்களை
ஆராய்ந்து பார்த்து
அதை தீர்க்க என்ன
செய்ய வேண்டுமோ
அதை செய்ய வேண்டும்

அப்படி செய்தால்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக அமையும்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக
அமைந்து விட்டால்
சமுதாயம் நல்ல
சமுதாயமாக அமையும்

எனவே,
இச்சமுதாயத்தில்
வாழும் ஒவ்வொரு
தனி மனிதனும்
பிறரிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
விமர்சிப்பதை விட்டு விட்டு
தன்னிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
சரி செய்து கொண்டால்
சமுதாயம் மனிதர்கள்
வாழக்கூடிய
சமுதாயமாக இருக்கும்
இல்லையென்றால்
இச்சமுதாயம்
மனிதர்கள் வாழ இயலாத
சமுதாயமாகத் தான்
இருக்கும்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  17-08-2018
///////////////////////////////////////////////////////////



August 09, 2018

திருக்குறள்-பதிவு-2



                    திருக்குறள்-பதிவு-2

இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

தனக்குத் துன்பம் செய்தவரைத்
தண்டிப்பது என்பது அவர்
வெட்கப்படும்படி அவருக்கு
நல்லது செய்து விடுவதாகும்
என்று பொருள்
கொள்ளப்படுகிறது

இதற்கு இப்படியும்
அர்த்தம் சொல்லலாம்


ஒருவர் நமக்கு
தொடர்ந்து தீமையான
செயல்களையே செய்து
கொண்டிருக்கிறார்;
நமக்கு கிடைக்க
வேண்டிய நல்ல
விஷயங்களை
நமக்கு தொடர்ந்து
கிடைக்க விடாமல்
தடுக்கிறார்;
வேலையில் தடைகளை
ஏற்படுத்துகிறார்;
நம்மைப் பற்றி
பிறரிடம் பொய்யான
தகவல்களைச் சொல்லி
நம்முடைய பெயரை
கெடுக்க பார்க்கிறார்;
நம்மை பிறரிடம்
தப்பாக சொல்லி
பிறரை நமக்கு
எதிரியாக்குகிறார்;
நமக்கு சேர
வேண்டியவைகளை
அபகரித்துக் கொள்கிறார்;
இவ்வளவையும் தாங்கிக்
கொண்ட நாம்
நமக்கு கெடுதல்
செய்தவருக்கு
துன்பம் வந்த போது
நாம் ஓடிச் சென்று
உதவி செய்கிறோம்
இதனால் அவர்
ஒரு பெரிய
பிரச்சினையிலிருந்து
தப்பிக்கிறார்.

நாம் உதவி செய்த
நபர் நம்மைப் பற்றி
நினைக்கிறார்
நாம் எவ்வளவு
கெடுதல்கள் அவருக்கு
செய்திருக்கிறோம்
ஆனால் அவர்
அதை எல்லாம்
தாங்கிக் கொண்டு
அவைகளை எல்லாம்
மறந்து விட்டு
பெருந்தன்மையுடன்
நமக்கு துன்பம்
வந்தபோது ஓடி வந்து
உதவி செய்திருக்கிறார்
இவ்வளவு உயர்ந்த
குணம் கொண்ட
ஒருவருக்கு
நான் கெடுதல் செய்து
மிகப் பெரிய
பாவத்தை செய்து
விட்டேன்
என்று வருந்துகிறார்.

நாண என்பதற்கு
இந்த இடத்தில்
வெட்கப்படுதல்
என்று பொருள்
கொள்ளக் கூடாது.

நாண என்பதற்கு
இந்த இடத்தில்
வருத்தப்படுதல்
என்று பொருள்
கொள்ள வேண்டும்.

ஒருவர் தான்
செய்த தீமையான
செயலை நினைத்து
வருத்தப்படுவதில்
இரண்டு நிலைகள்
இருக்கிறது

   ஒன்று : உண்மையாக
            வருத்துப்படுவது

  இரண்டு : உண்மையாக
            இல்லாமல்
            வருத்தப்படுவது

யார் ஒருவர் தான்
செய்த தீமையான
செயலை நினைத்து
உண்மையாக
வருத்தப்படுகிறாரோ
அவர் அந்த தீமையான
செயலை மீண்டும்
அவர் தன் வாழ்க்கையில்
செய்ய மாட்டார்

ஆனால் ஒருவர்
தான் செய்த
தீமையான செயலை
நினைத்து
உண்மையாக இல்லாமல்
பொய்யாக
வருத்தப்படுகிறாரோ
அவர் தான் அந்த
தீமையான செயலை
தன் வாழ்க்கையில்
மீண்டும் மீண்டும்
செய்து கொண்டிருப்பார்

நாம் நம்முடைய
வாழ்க்கையை
எடுத்துப் பார்த்தால்
நாம் சிறிய வயது முதல்
தற்போது வரை
சிறிய வயதில் செய்த சில
தீமையான செயல்களை
இன்றும் நாம்
செய்து கொண்டிருப்போம்
அதற்குக் காரணம்
நாம் செய்த
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக
வருத்தப்படாததே
காரணம்

நாம் செய்த
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக
வருத்தப்பட்டிருப்போமேயானால்
அந்த தீமையான செயலை
நாம் செய்யாமல்
விட்டிருப்போம்

நாம் இன்றும்
தொடர்ந்து தீமையான
செயல்களை தொடர்ந்து
செய்வதற்குக் காரணம்
நாம் செய்யும்
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக வருத்தப்
படாததே காரணம்

இன்னா செய்தாரை
ஒறுத்தல் என்றால்
நமக்கு கெடுதல்
செய்யும் ஒருவர்
என்று பொருள்

அவர்நாண நன்னயம்
செய்து விடல் என்றால்,
நாம் செய்த
நன்மையான செயலை
நினைத்து அவர்
உண்மையாக
வருத்தப்பட்டால்
அவர் மீண்டும்
அந்த தப்பை
செய்ய மாட்டார்
என்று பொருள்.

அதாவது நமக்கு கெடுதல்
செய்த ஒருவருக்கு
நாம் நன்மை செய்தால்
அதை நினைத்து
அவர் உண்மையாக
வருத்தப்பட்டால்
அவர் மீண்டும்
அந்த தப்பை
நமக்கு மட்டும் அல்ல
யாருக்கும் செய்ய
மாட்டார்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  09-08-2018
///////////////////////////////////////////////////////////


August 08, 2018

திருக்குறள்-பதிவு-1


                      திருக்குறள்-பதிவு-1

“””தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று””””

உலகம் முழுவதும்
வாழ்க்கையை
வாழ்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : தனக்காக
        வாழ்பவர்கள்
இரண்டு: பிறருக்காக
         வாழ்பவர்கள்

தனக்காக வாழ்பவர்கள்
என்பவர்கள்
தான், தன்னுடைய குடும்பம்,
நண்பர்கள் ஆகியோருக்காக
வாழ்பவர்களைக் குறிக்கும்

பிறருக்காக வாழ்பவர்கள்
என்பவர்கள்
தான், தன்னுடைய குடும்பம்,
நண்பர்கள்
ஆகியோரைத் தவிர்த்து
உலகில் உள்ள
அனைவருக்காகவும்
வாழ்பவர்களைக் குறிக்கும்

பிறருக்காக வாழ்பவர்கள்
பிறரை வாழ வைப்பதற்காக
இச்சமுதாயத்தில் உள்ள
மூன்று நிலைகளில்
உள்ளவர்களுடன் போராட
வேண்டி இருக்கிறது

ஒன்று  : பணம் படைத்தவர்கள்
இரண்டு : பதவி படைத்தவர்கள்
மூன்று  : அதிகாரம் படைத்தவர்கள்

இந்த மூன்று நிலையில்
உள்ளவர்கள் பிறருக்காக
வாழ்பவர்களை அழிப்பதற்காக
மூன்று செயல்களைக்
கையாள்கின்றனர்.

ஒன்று   : அடிமையாக்க
           நினைப்பது
இரண்டு  : மிரட்டுவது
மூன்று   : கொன்று விடுவது

மூன்று நிலைகளில்
உள்ளவர்கள்
மூன்று செயல்களைக்
கொண்டு அழித்தவர்களில்
முக்கியமானவர் சாக்ரடீஸ்.

சாக்ரடிஸ் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகள்
இவைகள் தான்:

ஏழை மக்களும்
தங்களுக்குள்ள
உரிமையைப் பெற்று
வாழ வேண்டும்
என்று கொந்தளிக்கும்
சூரியனாய் எரிகிறாய்;

உன் இன மக்கள்
முன்னேற்றம் அடைய
இரத்தம் சிந்தி
கதிரவனாய் பிரகாசிக்கிறாய்;

தாழ்த்தப்படுத்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும் பிற்படுத்தப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
போராடும் ஞாயிறாய்
தகிக்கிறாய்;

அடிமைகளாய் இருப்பவர்களை
அதிலிருந்து விடுவிக்க
முரசொலிக்கிறாய்;

பகுத்தறிவு கருத்துக்களை
மக்களிடம் விதைக்க
மக்களுக்காக தந்தையாகவும்,
அண்ணாவாகவும் பாடுபடுகிறாய்;

பணக்காரர்கள்
பதவியில் இருப்பவர்கள்
அதிகாரம் படைத்தவர்கள்
ஆகியோரை எதிர்த்து
நீ செய்யும் ஒவ்வொரு
செயலும் அரசியலாக
மாறுகிறது

இது தான் நீ செய்த
குற்றம் என்றனர்
இந்த குற்றத்தை
நீ நிறுத்தி விட்டால்
உன்னை உயிரோடு
விடுகிறோம்
இதனை நீ தொடர்ந்து
செய்தால் உனக்கு
மரண தண்டனை
விதிக்கப்படும் என்றனர்
குற்றத்தை சுமத்தியோர்

நான் பிறருக்காக
பாடுபடுவது குற்றம் என்றால்
அந்த குற்றத்தை
பிறருக்காக வாழும்
அந்த குற்றத்தை
எனக்கு இறப்பே ஏற்பட்டாலும்
தொடர்ந்து செய்வேன்
என்று கூறி ஆதிக்க
சக்தி கொண்டோரால்
வழங்கப்பட்ட தண்டனைக்கான
விஷத்தை அருத்தி
மரணத்தை தழுவிய
சாக்ரடீஸ் வாழும் போதும்
போராடியது மட்டுமல்லாமல்
இறந்த பின்பும்
மக்களை போராட வைத்தார்

வாழும் போதும்
வரலாறு படைத்து
இறப்பின் போதும்
வரலாறு படைத்த
அந்த தலைவனை
அமைதி கொள் தலைவா
கோடானுகோடி
உடன்பிறப்புகளின்
இதயத்தில் வாழும் நீ
அமைதியாக
துயில் கொள் தலைவா
என்று இச்சமுதாயம்
பிறருக்காகவே வாழ்ந்து
பிறருக்காகவே உயிர்நீத்த
அந்த தெய்வத்தை கண்டு
கண்ணீர் செலுத்தியது

வாழும் போதும்
சாக்ரடிஸ் பிறருக்காகவே
வாழ்கிறார் என்று
மக்களால் புகழப்பட்டார்
இறந்த பின்பும்
சாக்ரடிஸ் பிறருக்காகவே
வாழ்ந்து உயிர் விட்டார்
என்று மக்களால்
புகழப்பட்டார்.
  
தோன்றிற் புகழோடு
தோன்றுக என்றால்
வாழும் போது
இவர் பிறருக்காகவே
வாழ்கிறார் என்று
மக்களால் புகழக்கூடிய
நிலையும்,
இறந்த பின்பு
இவர் பிறருக்காகவே
வாழ்ந்தவர் என்று
மக்களால் புகழக்கூடிய
நிலையும் உண்டாகக்கூடிய
வாய்ப்பு இருந்தால்
மட்டுமே வாழ வேண்டும்
என்று அர்த்தம்.

அஃதிலார் தோன்றலின்
தோன்றாமை
நன்று என்றால்
பிறருக்காக வாழ
முடியவில்லை என்றால்
வாழ்வதை விட இறப்பதே
மேல் என்பது தான்
இதற்கு அர்த்தம்

அதாவது வாழும் போதும்
பிறருக்காக
வாழ்ந்தவர் இவர்
இறந்த பின்பும்
பிறருக்காகவே
வாழ்ந்தவர் இவர்
இறந்து விட்டார் என்று
சமுதாயம் புகழக்கூடிய
உயர்ந்த நிலையில்
புகழோடு இருக்க முடிந்தால்
வாழ வேண்டும்
அப்படி பிறருக்காக வாழ
முடியவில்லை என்றால்
வாழ்வதை விட இறப்பதே
மேல் என்பது தான்

“””தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று”””
என்பதற்கான அர்த்தம்
  
---------இன்னும் வரும்
-----------07-08-2018
///////////////////////////////////////////////////////////