January 24, 2020

பரம்பொருள்-பதிவு-118


           பரம்பொருள்-பதிவு-118

(கிருஷ்ணன்
அரவானை சந்திக்க
அவன் மாளிகைக்கு
செல்கிறார் - அரவான்
கிருஷ்ணனை
வரவேற்று அவர்
பாதங்களில்
விழுகிறான்)

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா !”

கிருஷ்ணன் :
“இந்த உலகம்
உள்ளளவும் உன்
புகழ் நிலைத்து
நிற்கட்டும் அரவான்!”

அரவான் :
“ஏன் ? நீடூழி
வாழ்க என்று வாழ்த்த
மாட்டீர்களா பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏன் அவ்வாறு
வாழ்த்தவில்லை என்பது
உனக்கே தெரியும் “

“அது மட்டுமல்ல
வாழ்த்துவது என்பது
சாதாரணமான விஷயம்
என்று நினைத்து
விட்டாயா அரவான் ?”

“வாழ்த்தும் போது
யாரை வாழ்த்துகிறோம்  ;
எதற்காக
வாழ்த்துகிறோம் ;
என்ன காரணத்திற்காக
வாழ்த்துகிறோம் ;
என்பது முக்கியம் “

“எல்லோராலும்
உண்மையாக
வாழ்த்த முடியாது  ;
அப்படியே ஒரு
சிலர் உண்மையான
மனதுடன் வாழ்த்தினாலும்
வாழ்த்துபவர்களுடைய
வாழ்த்துக்கள் அனைத்தும்
பலிக்கும் என்று
சொல்லி விட முடியாது ;” 

“கோடியில் ஒருவர்
வாழ்த்தும் வாழ்த்தே
பலிக்கும் என்பதை
நினைவில் கொள்
அரவான் !“

அரவான் :
“கோடியில் ஒருவரான
நீங்கள் வாழ்த்தினால்
அது நடக்குமே !
அப்படி இருக்கும்
போது நீங்கள் ஏன்
என்னை நீடுழி வாழ்க
என்று வாழ்த்தக்கூடாது?”

கிருஷ்ணன் :
“அரவான் !
என்ன நடக்கப் போகிறது
என்பது உனக்குத் தெரியும் “

“அப்படி இருக்கும் போது
நடக்க முடியாததை
நடக்க வையுங்கள்
என்று ஏன்
என்னிடம் கேட்கிறாய் ?”

அரவான் :
“நான் இதுவரை
வாழ்ந்த காலத்தில்
பெரியதாக
சாதனைகள் எதுவும்
செய்ததாக எனக்கு
தெரியவில்லை ;
இனி வாழப்போகும்
கொஞ்ச காலத்திலும்
என்னால் பெரியதாக
சாதனைகள் படைக்க
முடியுமா என்று
தெரியவில்லை. ;”

“அப்படி இருக்கும்
போது எனக்கு புகழ்
எப்படி உண்டாகும் ?
அப்படியே புகழ்
கிடைத்தாலும்  
அந்தப் புகழ்
இந்த உலகம்
உள்ளளவும் எப்படி
நிலைத்து நிற்கும் ?
அதற்கு நீண்ட ஆயுள்
தேவையல்லவா ?
அதற்காக நான்
நீண்ட காலம் வாழ
வேண்டும் அல்லவா ? ;”.

கிருஷ்ணன் :
“அரவான்
எவ்வளவு காலம்
வாழ்கிறோம் என்பது
முக்கியமில்லை ;
வாழ்ந்த காலத்தில்
மக்கள் மனதில்
இடம் பெற்று
நீங்காத புகழை
பெறுவதற்காக
எத்தகைய உயர்ந்த
செயல்களைச் செய்தோம்
என்பது தான் முக்கியம் ;
இவ்வாறு பெறப்படும்
புகழே உலகம் உள்ளளவும்
நிலைத்து நிற்கும் ;
என்பதை உணர்ந்து
கொள் அரவான் ;”

அரவான் :
“நான் தான் எந்த
ஒரு உயர்ந்த
செயலையும்
செய்யவில்லையே !”

கிருஷ்ணன் :
“நீ ! தான் யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய உயர்ந்த
செயலை செய்ய
போகிறாயே  ?”

அரவான் :
“பெரிய தந்தை
துரியோதனனுக்காக
நான் களப்பலி
ஆகப்போவதைத் தான்
உயர்ந்த செயல்
என்று சொல்கிறீர்களா?”

கிருஷ்ணன் :
“ நீ ! களப்பலி
ஆகப்போவதைத் தான்
நான் உயர்ந்த
செயல் என்றேன் ;
துரியோதனனுக்காக
களப்பலியாவதை
நான் உயர்ந்த
செயல் என்று
சொல்லவே இல்லையே “

“துரியோதனன் எதிரி
என்று தெரிந்தும்
துரியோதனனுக்காக
எப்படி களப்பலியாவதற்கு
சம்மதித்தாய் அரவான் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------24-01-2020
//////////////////////////////////////////


January 23, 2020

பரம்பொருள்-பதிவு-117


            பரம்பொருள்-பதிவு-117

தர்மர் :
“அர்ஜுனா !
கிருஷ்ணன் தான்
எங்களை
வார்த்தைகளால்
கொன்றான் - என்றால்
நீயும் ஏன் எங்களை
வார்த்தைகளால்
கொல்கிறாய் ? “

“உன்னைப்பற்றி
நாங்கள் சொல்லி - நீ
தெரிந்து கொள்ள
வேண்டிய
அவசியமே இல்லை ;  
உன்னைப் பற்றி
உனக்கே
நன்றாகத் தெரியும் ;
உன்னைப் பற்றி
உனக்கு மட்டுமல்ல
இந்த உலகத்திற்கே
நன்றாகத் தெரியும் ; “

“குருஷேத்திரப் போரின்
மையப்புள்ளியே நீ தான் ;
குருஷேத்திரப் போரே
உன்னை மையமாக
வைத்துத்தான்
இயங்கப் போகிறது ; - நீ
இல்லாமல்
பாண்டவப் படைகள்
குருஷேத்திரப் போரில்
கலந்து கொள்வதால்
எந்தவிதமான நன்மையும்
ஏற்படப் போவதில்லை ;”

“கௌரவப் படைகளை
தடுத்து நிறுத்தி
போர் செய்யும்
தகுதி உனக்கு
மட்டுமே இருக்கிறது  ;”

“கெளரவப் படையில்
உள்ள பீஷ்மர்
துரோணாச்சாரியார்
மற்றும் அந்த அணிக்காக
போர் செய்யும்
சிறந்த வீரர்களையும்
எதிர்க்கும் சக்தி உனக்கு
மட்டுமே இருக்கிறது ;”

“உன்னையோ அல்லது
கிருஷ்ணனையோ
களப்பலி கொடுத்து
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்  
நாங்கள் நாட்டை ஆள
வேண்டும் என்றால்
அப்படி ஒரு நாடு
எங்களுக்குத்
தேவையேயில்லை  ;
நாங்கள் காட்டிற்கே
சென்று விடுகிறோம் ; “

கிருஷ்ணன் :
“நீங்கள் ஏன் காட்டிற்கு
செல்ல வேண்டும் ;
எந்தவித பாவத்திற்கும்
அஞ்சாமல்
அக்கிரமத்தையும் ;
அநியாயத்தையும் ;
அதர்மத்தையும் ;
தொடர்ந்து தங்கள்
வாழ்க்கையில் செய்து
கொண்டிருப்பவர்கள்
நாட்டில் வாழ்ந்து
கொண்டிருக்கும் போது
தர்மத்தை கடைபிடித்து
வாழும் நீங்கள்
ஏன் காட்டிற்கு
செல்ல வேண்டும் ?”

“அதர்மத்திற்கு பயந்து
தர்மத்தை கடைபிடிக்கும்
நீங்கள் காட்டிற்கு
சென்று விட்டால்
உங்களைப் பார்த்து
இந்த உலகத்தில்
தர்மத்தை கடைபிடித்து
வாழும் மற்றவர்களும்
தர்மத்தை கடைபிடித்து
வாழவே அஞ்சுவார்கள் ;”

“அதர்மத்திற்கு பயந்து
தர்மத்தை கடைபிடிக்கும்
நீங்கள் காட்டிற்கு
சென்று விட்டால்
வருங்காலத்தில் - இந்த
உலகத்தில் தர்மத்தை
கடைபிடிப்பவர்கள்
யாருமே இருக்க
மாட்டார்கள் ;”

“அதர்மத்திற்கு பயந்து
தர்மத்தை கடைபிடிக்கும்
நீங்கள் காட்டிற்கு
சென்று விட்டால்
வருங்காலம்
உங்களைப் பார்த்து
குறை சொல்லாதா?”

பீமன் :
“ஆனால் காலம்
எங்களுக்கு சாதகமாக
இல்லையே கிருஷ்ணா? “

“எங்களுக்கு
எதிர்ப்பாகத் தானே
செயல்பட்டுக்
கொண்டு இருக்கிறது”

கிருஷ்ணன்  :
“காலம் எப்போதும்
எந்த காலத்திலும்
யாருக்கும்
எதிராக இருந்ததில்லை ;”

“காலத்தை தனக்கு
சாதகமாக பயன்படுத்திக்
கொள்ளத் தெரிந்தவர்கள்
மட்டுமே - இந்த
உலகத்தில் வெற்றி
பெற்றிருக்கிறார்கள் ;”

“காலத்தை
தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ளத்
தெரியாதவர்கள் - தான்
இந்த உலகத்தில்
தோல்வி அடைந்து
இருக்கிறார்கள் ; “

“அதர்மத்தை நிலை
நாட்டுவதற்கு
கௌரவர்கள்
அரவானை வைத்து
மனித விளையாட்டை
விளையாடி விட்டார்கள் ;”

“தர்மத்தை நிலை
நாட்டுவதற்கு
காலத்தை நமக்கு
சாதகமாக பயன்படுத்திக்
கொள்வதற்காக
காலத்தை வைத்து - இனி
நாம் விளையாட
வேண்டியது தான் ;”

பீமன்  :
“என்னது காலத்தை
வைத்து விளையாட்டா?”

கிருஷ்ணன்  :
“ஆமாம் பீமா ஆமாம் “

“காலத்தை வைத்து  
நான் எப்படி
விளையாடப் போகிறேன்
என்பதை மட்டும்  
பொறுத்திருந்து பார் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------23-01-2020
//////////////////////////////////////////


January 22, 2020

பரம்பொருள்-பதிவு-116


             பரம்பொருள்-பதிவு-116

தர்மர் :
“என்ன வார்த்தை
சொல்லிவிட்டாய்
கிருஷ்ணா ?”

“இப்படி ஒரு
வார்த்தையை சொல்ல
உனக்கு எப்படி
மனம் வந்தது “

“எங்களைப் பற்றி
முழுவதும்
தெரிந்திருந்தும் இப்படி
ஒரு வார்த்தையை
எப்படி சொன்னாய் “

“என்னை களப்பலியாகக்
கொடுங்கள் என்று
நீ சொன்ன
வார்த்தைகளைக் கேட்டு
என்னுடைய இதயம்
வெடித்து நான்
இன்னும் இறக்காமல்
இருக்கிறேனே - என்று
வேதனைப் படுகிறேன்
கிருஷ்ணா ! “

“கிருஷ்ணா! கிருஷ்ணா!
என்ற நாமத்தை
நான் என்னுடைய
நாவினால்
சொல்லும் போது
வேறு எந்த ஒரு
வார்த்தையும் என்னுடைய
காதில் விழுந்து
விடக்கூடாது என்பதற்காக
என்னுடைய காதுகளை
மூடிக் கொண்டு
கிருஷ்ணா! கிருஷ்ணா!
என்று உன்னுடைய
நாமத்தை  
அனுதினமும்
உச்சரிப்பவன்  நான்;
ஆனால் , இன்றோ
கிருஷ்ணனாகிய
நீயே சொன்ன
வார்த்தைகளைக் கேட்டு
என்னுடைய காதுகளை
மூடிக்கொள்ளும்படி செய்து
விட்டாயே கிருஷ்ணா !”

“எங்களுக்குள்
இருப்பவன் நீ !”

“எங்களுக்குள் இயங்கிக்
கொண்டிருப்பவன் நீ !”

“எங்களை இயக்கிக்
கொண்டிருப்பவன் நீ !”

“எங்களுக்கு துன்பம்
என்ற ஒன்று
வரும் போதெல்லாம்
ஓடோடி வந்து
துன்பத்தை துடைப்பவன் நீ!”

“நாங்கள் அனைவரும்
நீயே கதி என்று
உன்னுடைய பாதங்களில்
சரணாகதி அடைந்து
விழுந்து கிடக்கிறோம் ;
என்பதை உணர்ந்தும்
இப்படி ஒரு வார்த்தையை
உன்னால் எப்படி சொல்ல
முடிந்தது கிருஷ்ணா ! “

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதின் மூலம்
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்
நாங்கள் நாட்டை 
ஆள முடியும் என்றால்
அப்படி ஒரு வெற்றியும்
தேவையில்லை ;
அப்படி ஒரு நாட்டை
ஆளவும் நாங்கள்
விரும்பவில்லை ;”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதின் மூலம்
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்
என்னுடைய தம்பிகள்
மற்றும் பாஞ்சாலி
ஆகியோர் தங்களுடைய
சபதத்தை
நிறைவேற்றிக் கொள்ள
முடியும் என்றால்
அப்படி ஒரு
சபதத்தை அவர்கள்
நிறைவேற்றிக்
கொள்ளாமலேயே
போகட்டும் ;”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதின் மூலம்
பெறப்படும் வெற்றியை
வைத்துத் தான்
துரியோதனனை
இந்த நாட்டை
ஆளவிடாமல்
தடுக்க முடியும்
என்றால் - அப்படி
ஒரு வெற்றி
எங்களுக்கு
தேவையே இல்லை
துரியோதனனே
நாட்டை ஆளட்டும் ;”

“நீ இல்லாத ஒரு
வாழ்க்கையை
எங்களால் நினைத்து
கூடப் பார்க்க
முடியவில்லை  என்ற
நிலை இருக்கும் போது
எங்களுக்கு
வெற்றி எதற்கு ?
நாடு எதற்கு
கிருஷ்ணா ? “

அர்ஜுனன் :
“கிருஷ்ணனை களப்பலி
கொடுக்க வேண்டிய
அவசியமே இல்லை ;

“களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடைய மூவரில்
நான் ஒருவன்
இங்கு இருக்கிறேன்
என்பதையே
மறந்து விட்டீர்களா ?”

“என்னை களப்பலியாகக்
கொடுங்கள்
நான் தயாராகவே
இருக்கிறேன் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------22-01-2020
//////////////////////////////////////////