October 19, 2011

பட்டினத்தார்





               பட்டினத்தார்

பட்டினத்தார் அவர்களின் இயற்பெயர் திருவெண்காடர். தாயின் அன்பைப் பற்றி கூறவேண்டுமானால் இவரது வாழ்க்கை வரலாறு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தாயைப் பற்றி இவர் பாடிய பாடல்கள் இன்றும் சமுதாயத்தில் பின்பற்றப் படும் ஒரு முன் உதாரணமாகவே இருந்து வருகிறது.

அவரது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இங்கே பார்ப்போம்.


பட்டினத்தார் ஞானம் பெற வேண்டி அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தன் தாயிடம் இருந்து விடை பெறுகிறார்.

நான் போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு அவர் தாயார் நீ அனைத்தையும் துறந்தாலும் தாயின் அன்பை மட்டும் துறக்க முடியாது என்கிறார்.

அனைத்தையும் துறப்பவனுக்கு தாய் அன்பு என்ன எல்லாம் ஒன்று தான் என்கிறார் பட்டினத்தார்.

தாய் பட்டினத்தாரிடம் இப்பொழுது நான் சொல்லும் எதுவும் உன் காதுகளுக்கு எட்டாது. அனுபவம் வரும் பொழுது தான் எல்லாம் உனக்கு புரியும் இருந்தாலும் நான் சொல்வதைக் கேள் இந்த நாணயத்தை நீ வைத்துக் கொள் தினமும் நீ அணியும் ஆடையின் முனையில் இதை முடி போட்டு வைத்துக் கொள்.
நான் இறந்தவுடன் அந்த முடி அவிழ்ந்து நாணயம் கீழே விழுந்து விடும். நான் இறந்து விட்டேன் என்று உனக்கு தெரிந்தவுடன் நீ எங்கிருந்தாலும் நான் இருக்கும் இடம் தேடி வந்து நீ எனக்கு கொள்ளி வைக்க வேண்டும். நீ கொள்ளி வைத்தால் தான் என் ஆன்மா சாந்தி அடையும் என்கிறார்.

பட்டினத்தார் தன் தாயாரிடம் அது நடப்பது என்பது இயலாத காரியம் என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார்.

பட்டினத்தார் பல ஆண்டுகள் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவ்வாறான செயல்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும்  வேளையில், ஒரு நாள் தவநிலையில் இருக்கும் போது அவர் உடுத்தி இருந்த ஆடையில் முடிந்து வைக்கப் பட்ட நாணயம் அவிழ்ந்து கீழே விழுந்தது.

அவர் தாய் இறந்து விட்டார் என்று அவருக்கு தெரிந்ததும், அவரையும் அறியாமல் அவர் மனம் தடுமாற்றம் அடைந்தது. உடனே அவர் அருகில் இருந்தவர்களிடம் தன் தாய் இறந்து விட்டார் அவரைப் பார்க்க சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்

அவர் தாய் இருக்கும் இடத்திற்கு வந்தபோது அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அவர் துறவியாகி எல்லாவற்றையும் துறந்து சென்று விட்டதால் சாதி வெறியர்கள் அவர் குடும்பத்தை விலக்கி வைத்திருந்தனர். அதனால் அவர் தாயாரின் இறந்த உடலுடன் ஓரிருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர்.

அந்த காட்சியைக் கண்டு மனம் வேதனையுற்று தன்னையுமறியாமல் கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரை அடக்க முடியாமல், அவர் தன் தாயைப் பற்றி பாடிய பாடலுக்கு இணையாக எந்த ஒரு பாடலும் இதுவரை எழுதப் படவில்லை.

       """"“ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்துபெற்று
                 பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு
                 கைப்புறத்தி லேத்திக் கனகமுத்தம் தந்தாளை
                 எப்பிறப்பிற் காண்பேண் இனி”"""                                                        
                                                                      ----------பட்டினத்தார்----------

"""""ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்று""
ஐயிரண்டு திங்கள் ஐந்து இரண்டு பத்து மாதங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களும் பல்வேறு இன்னல்கள் துன்பங்கள் அடைந்து தாயானாவள் குழந்தையை பெற்று எடுக்கிறாள்.

இந்த இடத்தில் ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும.;
ஐம்புலன்கள் எனப்படுபவை மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை ஆகும்.
அந்த ஐம்புலன்கள மூலம் உணரப்படுபவை பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படும் .
பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படுபவை அழுத்தம்,ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவை ஆகும்.

மனிதன் எத்தகைய செயல்கள் செய்தாலும், அவனுடைய ஐம்புலன்களில் குறைந்தது இரண்டோ அல்லது மூன்றோ தான் ஒரே சமயத்தில் வேலை செய்யும் ஐந்து புலன்களும் ஒரே சமயத்தில் வேலை செய்வது என்பது அரிதான செயல்.

ஆணுக்கு ஒரு முறையும் பெண்ணுக்கு இரண்டு முறையும் ஒரே சமயத்தில் ஐம்புலன்களும் வேலை செய்யும்.
ஆணுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஒரு முறையும்,
பெண்ணுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஒரு முறையும்,குழந்தை பெறும் போது ஒரு முறையும், ஆக இரண்டு முறையில் ஐம்புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்யும்.
தாயானாவள் குழந்தை பெற்றெடுக்கும் போது ஐம்புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்வது மட்டுமல்லாமல், அவளுடைய ஒவ்வொரு அணுக்களும் அதிர்வடைந்து துன்பத்தை கொடுக்கும் .

அத்தகைய பல்வேறு துன்பங்களுக்கு இடையில் தாயானாவள் குழந்தை பெற்றெடுக்கிறாள்.




          """"பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு
                    கைப்புறத்தி லேத்திக் கனகமுத்தம் தந்தாளை """"
குழந்தை பசிக்காக ஏங்கி அழும் பொழுதோ அல்லது விளையாடும் பொழுதோ, கீழே விழுந்து விட்டால் தாய் தனது குழந்தையை பாசத்துடன் கைகளில் வாரி எடுத்து கைகளில் ஏந்தி மார்போடு அணைத்து என்ன கண்ணா பசி எடுக்குதா கீழே விழுந்து விட்டாயா என்று கொஞ்சி கன்னத்தில் முத்தமிடுவாள்.

பட்டினத்தார் பாடல்களில் சில பிரதிகள் கைப்புறத்தி லேத்திக் கனகமுலை தந்தாளை என்று சீர் மாறி (வார்த்தை மாறி) வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்றால் கைகளில் வாரி எடுத்து கைகளில் ஏந்தி மார்போடு அணைத்து என்ன கண்ணா பசி எடுக்குதா கீழே விழுந்து விட்டாயா என்று கொஞ்சி பசி தீர்க்க தாய்ப்பால் தருவாள்.





"""""""எப்பிறப்பிற் காண்பேண் இனி""""""
இவ்வளவு அன்பும் பாசமும் நிறைந்த தாயைப் போல ஒரு கருணை தெய்வத்தை எத்தனை கோடி பிறவி நான் எடுத்தாலும் காண முடியுமா என்று மனம் வருந்தி கண்ணீர் சிந்தி பாடுகிறார.;





மற்றொரு பாடல்:
பிறகு தாயை எரியுயட்ட விறகு தேடிய பொழுது கிடைக்கவில்லை. தண்ணீர் சொட்ட சொட்ட வாழைத்தண்டு மட்டுமே கிடைத்தது. அதைக்கொண்டு வந்து தாயின் இறந்த உடலின் மேல் வைக்கச் சொன்னார், அப்பொழுது அவர் பாடிய பாடல் இது தான்.

                   

          """""“முன்னை யிட்டதீ முப் புரத்திலே
                       பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
                       அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
                       யானு  மிட்டதீ மூள்க மூள்கவே"""""""                                       
                                                  ----------பட்டினத்தார்---------------

முன்னை யிட்டதீ முப் புரத்திலே ------- முன்பு ஒரு நாள் சிவபிரான் முப்புரத்தை (திரிபுரத்தை) எரித்தார்.
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே ------- அதற்கு பிறகு அனுமன் இலங்கையை எரித்தார்.
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே ------- என் தாயார் அடிவயிற்றில் அக்கினிக்கு மத்தியில் என்னை சுமந்தார்.
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே-------  அந்த தீயைப் போல நானும் என் தாயாரின் சிதைக்கு தீ மூட்டுகிறேன்.
இந்த பாடலுக்கு சொல்லப்படும் பொருளை ஆழ்ந்து படித்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பது போல தோன்றும். சித்தர்கள் எப்பொழுதும் புராணங்களையோ, கடவுள் கதைகளையோ, தங்கள் பாடல்களில் சேர்க்க மாட்டார்கள் அதை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

சித்தர்களை மனிதர்கள் தவறாக புரிந்து கொண்டதே இதற்கு காரணம்.

இந்தப் பாடலுக்கு பொருளை இப்படியும் சொல்லலாம்.




"""""""முன்னை யிட்டதீ முப் புரத்திலே""""
முப்புரம் என்றால் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் கூடும் இடம். இந்த மூன்று நாடிகளும் தான் தவத்திற்கு முக்கியம். இந்த மூன்று நாடிகளும் கூடும் இடத்தில் தான் இறைவன் ஜோதி மயமாக இருக்கிறான் என்பதை சித்தர்கள் தவங்கள் பல செய்து தங்கள் தவ ஆற்றலினால் உணரந்து,
அந்த மூன்று நாடிகளும் கூடும் இடத்தில் இறைவனை ஜோதி மயமாக கண்டனர்.





"""""""பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே"""""
அவர்களுக்கு பின்பு வந்தவர்களும் தலையில் தான் கடவுள் இருக்கிறான் என்பதை உணர்நதனர்.
தலையில் தெய்வத்தை கண்டவர்கள் தென்புலத்தார் என்று அழைக்கப் படுகிறார்கள்.

புவி ஈர்ப்பு விசை நம்மை கீழ் நோக்கி இழுக்கிறது. எனவே நம் கால் பாகம் இருக்கும் பகுதி வடக்கு திசையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

அதற்கு எதிர்ப்பக்கம் நம் தலைப்பாகம் தென் திசையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

எனவே தலையில் தான் கடவுள் இருக்கிறார் என்று உணர்ந்தவர்கள் தென்புலத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

புவியியல் முறைப்படி பார்த்தால் இலங்கை தெற்கு திசையில் இருக்கிறது. இந்தியாவின் அடிப்பாகத்தில் இந்தியாவுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது. அதைப்போல நம் தலைப் பாகமும் உடலிலிருந்து தனித்து இருப்பது போல் தோன்றினாலும் கழுத்துப் பகுதியுடன் இணைக்கப் பட்டிருக்கிறது.


தென்னிலங்கை என்பது நம்முடைய தலைப்பாகத்தைத்தான்.

பின்பு வந்தவர்களும் கடவுளை ஜோதி வடிவமாக தலைக்குள் கண்டனர். என்பதே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே என்பதற்கு பொருள்.





"""""""அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே"""""
உலகில் உள் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தி உறங்கிக்கொண்டிருக்கிறது என்று ஆன்மீக உலகில் சொல்லப் படுகிறது.

மனிதனைப் படுக்கப் போட்டு அவனை அளந்து அந்த அளவில் மைய அளவு எவ்வளவு என்று கண்டுபிடித்து குறித்தால் அது தான் மூலாதாரம் அது அடி வயிற்றில் வரும்.

அந்த மூலாதாரத்தில் தான் குண்டலினி சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது. குண்டலினி சக்தி பாம்பு வடிவத்தில் இருப்பதாக உவமிக்கப்படுகிறது.

குண்டலினி சக்தி பெண் தெய்வத்திற்கு அதாவது பார்வதி தேவிக்கு சக்திக்கு ஒப்பிடப்படுவதால் குண்டலினி சக்தி அன்னைக்கு ஒப்பிடப்படுகிறது.


இந்த குண்டலினி சக்தியானது மந்திரங்கள் உச்சாடணம் பண்ணிணாலோ தவங்கள் இயற்றினாலோ மூலாதாரத்தில் இருந்து எழுந்து ஆறு ஆதாரங்களை கடந்து செல்லும்.

அந்த ஆறு ஆதாரங்கள் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்கினை ஆகியவை ஆகும்.

குண்டலினி சக்தி உடம்பின் ஒவ்வொரு ஆதாரமாகத் துளைத்துச் செல்லும் போது அந்தந்த ஆதாரங்களுக்கு உரிய பூதங்கள் ஐந்தினையும் தன்னுள் எடுத்துக் கொள்கிறது.

 குண்டலினி சக்தி ஆக்கினை சக்கரத்தை அடையும் போது யோகியின் தேகம் சித்த தேகம் ஆகிறது.

குண்டலினி யோகப் பயிற்சியில் குண்டலினி சஉறஸ்ராரத்தைச் சென்றடையும் பொழுது அங்கு சுரக்கும் அமிர்தத்தை யோகியானவன் சுவைக்கிறான். சஉறஸ்ராரத்தில் தான் குண்டலினி தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது .

சஉறஸ்ராரத்தில் குண்டலினி நுழையும் போது யோகியானவன் சிவத்துடன் ஒன்றுபடுகிறான். பேரண்டங்களின் சாட்சியாகிறான் , சித்தனாகிறான் , காலத்தின் பிடியிலிருந்து வெளி வந்து விடுகிறான்

இதனை உணர்ந்தே சித்தர்கள் கடவுளை காண்பதற்கு அடிப்படையாக உள்ள குண்டலினி சக்தி ஆகிய அன்னையை எழுப்ப வேண்டும் என்று உணர்ந்தனர்.

குண்டலினி சக்தியை எழுப்ப சித்தர்கள் பலவித தவங்கள் செய்து மூலாதாரத்தில் தவக்கனலை துhண்ட, அக்கினி பிரவாகத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் குண்டலினி சக்தி விழித்து எழுந்து கடவுளை அடைவதற்காக நகரத் தொடங்குகிறது.

இதுவே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே என்பதற்குப் பொருள்.





""""""யானு மிட்டதீ மூள்க மூள்கவே"""""""
மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்று நெற்றிக்கண்ணில் உள்ள சிவனுடன் சேர்க்கும் பொழுது கடவுள் நமக்கு ஜோதி வடிவமாகக் காட்சியளிப்பார்.

கடவுள் நமக்குக் காட்சி தர வேண்டுமென்றால், நம்முடைய கர்மவினையாவும் எரிந்து விட்டிருக்க வேண்டும். கழிந்து விட்டிருக்க வேண்டும். கர்ம வினையாவும் கழிந்தால் தான் நாம் முக்தி அடைய முடியும். பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியு்ம்.

கர்மவினைகளை நெற்றிக் கண்ணில் உள்ள தவ அக்கினியால் எரிக்கலாம்.
மற்றவர்களுடைய கர்மவினைகளை நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய கர்மவினைகளை நாம் நம் தவ ஆற்றலால் கழிக்கலாம்.

உலகில் உள்ள எல்லோரும் எந்த முறையைப் பின்பற்றி தம்முடைய கர்மவினையை எரித்தார்களோ, அந்த முறையை கண்டுபிடித்து பட்டினத்தார் தம் கர்மவினையை எரித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாயின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, அவருடைய கர்ம வினையை தான் ஏற்றுக் கொண்டு தன்னுடைய தவ அக்கினியால் எரிக்கிறார்.

அதைத் தான் பட்டினத்தார் யானுமிட்ட தீ மூள்கமூள்கவே என்கிறார்.

தாயின் சிதைக்கு தீயை மூட்டி பட்டினத்தார் பாடிய பாடலில் மிகப்பெரிய தத்துவமே மறைந்து இருக்கிறது.

மேற்கண்ட இரண்டு பாடல்களும் தாயின் மேல் பட்டினத்தார் வைத்திருந்த அளவற்ற அன்பு, பக்தி, மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பாடப் பட்டிருப்பதுடன் மட்டுமில்லாமல், சமுதாயத்திற்கு தேவையான சீர்திருத்தக் கருத்துக்களும் இடம் பெற்றிருப்பது தான் இதன் சிறப்பாகும்.

No comments:

Post a Comment