December 26, 2011

போகர்-7000-சாயா தரிசனம்-பொதுவானமுறை-பதிவு-8



       போகர் -7000- சாயா தரிசனம் - பொதுவான முறை - பதிவு -8

                       “”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
                                                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - பொதுவான முறை:

போகர் - 7000 - என்ற புத்தகத்தில் , போகர்  சொல்லிய படி சாயா தரிசனம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று கண்டோம் .
இந்த உலகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களால்  பின்பற்றப்பட்டு, செய்யப்பட்டு வரும் சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இப்பொழுது காண்போம் .


சாயா தரிசனம் இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது,
        1.  ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை .
        2.   வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை .


1.  ஆரம்ப கட்டத்தில்  உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை :

ஆரம்ப நிலையில் - கடைப்பிடிக்க வேண்டியவை :
1.   கண்டிப்பாக காலை இரண்டு சாமத்திற்குள் அதாவது 10-48 மணிக்குள் தான் செய்ய வேண்டும் .
2.   காலை சூரிய ஒளியில் தான் செய்ய வேண்டும் .
3.   மேலே சொல்லப்பட்ட இரண்டு விதி முறைகளை பின் பற்றாவிட்டால் தீயவைகளை விளைவிக்கக் கூடிய கெட்ட ஆவிகளின்  தொற்றுதல் ஏற்பட்டு கெடுதல்களை விளைவிக்க  வாய்ப்புகள் உண்டு .
4.   சாயா தரிசனம் செய்வதற்கு முனபு காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும் .
5.   காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு , உடல் கட்டு போன்ற மந்திரங்களைப் போட்டுக் கொள்ள வேண்டும் .


ஆரம்ப நிலையில் - செய்ய வேண்டியவை :
 1.  காலை இரண்டு சாமத்திற்குள் அதாவது காலை 10.48 மணிக்குள் ஒரு நேரத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .
2.   கிழக்கு திசையில் முதுகைக் காட்டிக் கொண்டும் , மேற்கு திசையில் முகத்தைக் காட்டிக் கொண்டும் நின்று கொள்ள வேண்டும் .
3.    நமது நிழலை தொடர்ந்து 15 நிமிடம் ( அல்லது ) 20 நிமிடம் தொடர்ந்து பார்க்க வேண்டும் .
4.   முதலில் தலை முதல் பாதம் வரை படிப்படியாக பார்க்க வேண்டும் .
5.    பிறகு முழு உருவத்தையும் கண் இமை கொட்டாமல் தொடர்ந்து பார்க்க வேண்டும் .
6.   சாயா தரிசனம் செய்பவர்  நிழல் முழுவதும் முழுமையாக வெண்மையாக அதாவது   வெண்மை நிறமாக மாற்றம் அடைவதைக் காணலாம் .
7.   கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே தனது உருவப் பிம்பம் தோன்றும் அல்லது சாயை தோன்றும் .
8.   நம்முடைய உயரத்தை விட ஒரு உயர்ந்த உருவம் நம் எதிரே தோன்றும் .
9.  அந்த உருவத்தின் தோற்றம் முழுவதும் வெண்மை நிறமாக இருப்பதைக் காணலாம் .
10.   சாயா தரிசனத்தை செய்யும் காலம் அதிகரிக்க , அதிகரிக்க அதாவது 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் கழித்து நாம் என்ன உடை உடுத்தி இருக்கிறோமோ அந்த உடையுடன் உருவம் தெளிவாகவும் தெரியும் .


2. வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய
வேண்டிய நிலை :

வளர்ச்சி நிலையில் - கடைப்பிடிக்க வேண்டியவை:
1.    வளர்ச்சி நிலை எதைக் குறிக்கும் என்றால் சாயா தரிசனம் 5 ஆண்டுகள் ( அல்லது ) 6 ஆண்டுகள் செய்தவர்களைக் குறிக்கும் .

2.    ஒரு நாளில் எந்த சாமத்திலும் சாயா தரிசனம் செய்யலாம் அதாவது எந்த நேரத்திலும் பகல் , மதியம் , இரவு என்று எந்த நேரத்திலும் செய்யலாம்.
3.     சூரிய ஒளியில்  மட்டுமின்றி மின் விளக்கிலும் செய்யலாம் .
4.     சாயா தரிசனத்தை செய்வதற்கு முன்பு உடல் கட்டு , திக்கு கட்டு மந்திரங்களைப் போட்டுக் கொள்ள வேணடும் .



வளர்ச்சி நிலையில் - செய்ய வேண்டியவை :
1.   இரவு நேரத்தில் செய்ய வேண்டும் .
2.    வீட்டிற்குள் செய்யக் கூடாது .
3.    வீட்டின் மாடியில் நின்று கொண்டு செய்ய வேண்டும் .                 
4.     மின் விளக்கை பொருத்தி எரிய வைத்து சாயா தரிசனத்தைச் செய்ய வேண்டும் .
5.    பௌர்ணமி நிலவு ஒளியிலும் சாயா தரிசனத்தைச் செய்யலாம் .
6.    வீட்டின் மாடியில் நின்று கொண்டு பார்ர்க்கும் பொழுது நம்மைச் சுற்றி, அந்த இடத்தைச் சுற்றி , இருள் நிறைந்த நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் .
7.    மாடியின் ஒரு சுவரில் ஒரு மின் விளக்கை மட்டும் பொருத்தி அதை எரியவைக்க வேண்டும் .
8.     மின் விளக்கை நோக்கி நம் முதுகை காட்டும் படி நின்று கொள்ள வேண்டும் .
9.    தரையில் தெரியும் நிழலை நன்கு உற்று நோக்கி பார்க்க வேண்டும் .
10.   நிழல் முழுவதும் வெண்மை நிறமாக மாற்றம் அடையும் .
11.   கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே தனது உருவப் பிம்பம் தோன்றும் அல்லது சாயை தோன்றும் .
12.  ஆண்டுகள் பல கடந்து சாயா தரிசனத்தைத் தொடர்ந்து செய்து வர வெண்மை நிறமாக தெரிந்த உருவம் ஒவ்வொரு நிறமாக மாற்றம் அடைவதைக் காணலாம் .

13.  பிறகு நம்முடைய உருவமே பனையளவு நிற்பதை நாம் காணலாம் .


சாயா தரிசனத்தைத் தொடர்ந்து செய்து வர நடக்கும் நிகழ்வுகளும், கிடைக்கும் சக்திகளும், பலன்களும் போகர்  - 7000 என்ற புத்தகத்தில் போகர் சொன்னவாறே நடக்கும் .

சாயா தரிசனத்தைச் செய்து அத்தகைய பலன்களை அடைந்தவர்கள் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் .
அத்தகையவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டு அவர்கள் சீடனாக இருந்து சாயா தரிசனத்தை செய்த அனுபவமும் எனக்கு உண்டு .
அந்த அனுபவங்களை வார்த்தைகளில் எழுத முடியாது , சொற்களில் சொல்ல முடியாது .

ஒவ்வொருவரும் சுயமாக சாயா தரிசனத்தைச் செய்து அதன் பலன்களை அனுபவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .


             “”””நீயாக அனுபவிக்காததைப் பிறர் சொற்களில்
                   திருப்பிச் சொல்லாதே””””
என்ற வார்த்தையின் படி நான் செய்து அனுபவித்ததால் சாயா தரிசனத்தை எழுதினேன் .


சாயா தரிசனம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில் காணும் உருவத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும் ,
அந்த மாற்றங்கள் என்ன ரகசியத்தைச் சொல்ல வருகின்றன என்பதையும் தொடர்ந்து பார்ப்போம் .


                         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஎட்டு  ந்தான்முற்றே “”

December 24, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- செய்யும் முறை- பதிவு-7




            போகர்  - 7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -7

                                   “”பதிவு ஏழை விரித்துச் சொல்ல
                                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:
பாடல் - 3

                “””””அறியவே நுட்பமது என்னசொல்வேன்
                                          ஆகாகா நாதாக்கள் கண்டதில்லை
                      முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல்
                                          முனையான தன்சிரசைத் தானும்பார்த்து
                      குறியுடனே ஆகாயம் தன்னைநோக்கி
                                          கொற்றவனே பார்க்குமந்தச் சமயம்தன்னில்
                     நெறியுடனே உமைப்போல ரூபங்காணும்
                                          நேர்மையுடன் ரூபமதன் வினயங்கேளே”””””
                                                                                         ----------போகர்----- 7000----------
        “””””அறியவே நுட்பமது என்னசொல்வேன்
                                  ஆகாகா நாதாக்கள் கண்டதில்லை””””””
சாயா தரிசனத்தின் ரகசியங்கள் , சூட்சுமங்கள் , பலன்கள் , சக்திகள் ஆகியவற்றை எழுத்துக்களில் எழுதிக் காட்ட முடியாது .
வார்த்தைகளில் சொல்ல முடியாது .
சாயா தரிசனத்தின் சக்திகளை சாதாரண மனிதர்கள் கண்டதில்லை அதாவது சாயா தரிசனம் செய்யாதவர்களுக்கு சாயா தரிசனத்தின் சக்திகள் தெரிவதில்லை , கண்டதில்லை என்கிறார்  போகர்.


      
“”””””முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல்
                                    முனையான தன்சிரசைத் தானும்பார்த்து””””
 நேத்திரங்கள் என்றால் நெற்றி என்று சிலர்  சொல்லுகிறார்கள் .
நேத்திரங்கள் என்றால் கண்கள் என்று சிலர்  சொல்லுகிறார்கள் .
போகர்   இந்த இடத்தில் நேத்திரங்கள் என்று கண்களைக் குறிப்பிடுகிறார். அதாவது கண்களை இமை கொட்டாமல் நிழலில் உள்ள சிரசை அதாவது தலையை உற்று நோக்க வேண்டும் .

இங்கே ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .
சாயா தரிசனம் செய்பவர்கள்  தன்னுடைய நிழலில் முதலில் தலையைப் பார்க்க வேண்டும் .
பிறகு படிப்படியாக பார்வையை இறக்கிக் கொண்டே வந்து கழுத்து , மார்பு, கைகள் , இடுப்பு , கால்கள் , பாதம் என்று உடல் முழுவதும் பார்க்க வேண்டும். தன்னுடைய நிழலைத் தலை முதல் பாதம் வரை முழுவதுமாக பார்க்க வேண்டும் .
சிறிது நேரம் தொடர்ந்து பார்க்க வேண்டும் ஆரம்பத்தில் உள்ளவர்கள் சிறிது நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் .

சாயா தரிசனம் சில ஆண்டுகள் செய்த பிறகு அதாவது சில ஆண்டுகள் கழித்த பிறகு 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும் .
அதாவது தொடர்ந்து 15 - நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் இமை கொட்டாமல் தன் நிழலைத் தானே பார்க்க வேண்டும் .


        “””””””குறியுடனே ஆகாயம் தன்னைநோக்கி
                                       கொற்றவனே பார்க்குமந்தச் சமயம்தன்னில்””””””
தன்னுடைய நிழலைப் பார்த்து முடித்த பின் கண்களை இமைக்காமல் பூமியிலிருந்து தான் நிற்கும் தரையிலிருந்து மெதுவாக படிப்படியாக மேலே தொடர்ந்து தன் பார்வையை உயர்த்த வேண்டும் .
ஆகாயத்தை நோக்கிப் பார்க்க வேண்டும் .

அவ்வாறு ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது நடைபெறுபவை எவை என்பதைப் பற்றி போகர்  பின்வரும் அடிகளில் கூறுகிறார் .


       “”””””நெறியுடனே உமைப்போல ரூபங்காணும்
                                     நேர்மையுடன் ரூபமதன் வினயங்கேளே”””””
அவ்வாறு ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது உருவம் முதலில் வெண்மை நிறமாக பூமியிலிருந்து படிப்படியாக வளர்ந்து கொண்டே இருக்கும் .

ஆகாயத்தில் காணும் அந்த உருவம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுகிறேன் கேள் என்று போகர்  கூறுகிறார் .



பாடல் -4

            “”””””பனையளவு உயரமப்பா உந்தன்ரூபம்
                                             பாரினிலே தானிருந்து காணலாமே
                     காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன்
                                             கண்ணிற்கு ஆகாயம் தன்னிலப்பா
                     தோணவே சுடரொளி போலும்தன்ரூபம்
                                            தோற்றுமப்பா கண்ணிற்கு கூச்சங்காணும்
                     சாணளவு ரூபமது கொண்டுமல்லோ
                                            சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
                     நீணவே மாயாதி ரூபந்தானும்
                                           நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே””””””””””
                                                                             -----------போகர் -------7000---------- 
          “”””””பனையளவு உயரமப்பா உந்தன்ரூபம்
                                       பாரினிலே தானிருந்து காணலாமே””””””
ஒவ்வொருவரும் தங்கள் உருவத்தை உடலை கைகளால் அளந்தால் சாண் அளவு கொண்டு அளந்தால் உடலானது எண் சாண் அளவு தான் இருக்கும் .
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உருவத்தை அளந்தால் ஒவ்வொருவடைய உருவமும் எண்சாண் அளவு தான் இருக்கும் .
அதனால் தான் எண் சாண் கொண்டது மனிதனது உருவம் என்றனர்  நமது முன்னோர்கள் .

இத்தகைய எண் சாண் கொண்ட நமது உடலானது பனையளவு கொண்ட தோற்றமாக இருந்தால் எப்படி இருக்கும் அதனை கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும் .
அத்தகைய  பனையளவு உயரம் கொண்ட உருவமாக நம்முடைய உருவம் இருப்பதை நாமே பார்க்கலாம் எப்பொழுது பார்க்கலாம்  .
இந்த உலகத்தில் உயிரோடு வாழ்ந்தபடியே , இருந்த படியே நம்முடைய உருவத்தை , பனையளவு உருவம் கொண்ட உருவமாக பார்க்கலாம்.
யார் பார்க்கலாம் என்றால் சாயா தரிசனம் செய்பவர்  தன்னுடைய உருவத்தை பனையளவு உருவம் கொண்ட உருவமாக பார்க்கலாம் .
சாயா தரிசனம் செய்பவர்  தன்னுடைய எண் சாண் உடலை பனையளவு உருவம் கொண்ட உருவமாக எப்படி பார்க்கலாம் என்பதை போகர் பின்வரும் அடிகளில் கூறுகிறார்.

          
             ”””””காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன்
                                        கண்ணிற்கு ஆகாயம் தன்னிலப்பா”””””
சாயா தரிசனம் செய்பவர்  சாயா தரிசனத்தை செய்யும் பொழுது தெரியும் பனையளவு உருவம் கொண்ட தனது உருவத்தை ஆகாயத்தில் காணும் பொழுது ,
அந்த உருவம் எவ்வாறு இருக்கும் எப்படி இருக்கும் அதன் தன்மை என்ன என்பதைக் கூறுகிறேன் கேட்பாயாக என்கிறார் போகர்.            


              ””””””தோணவே சுடரொளி போலும்தன்ரூபம்
                                             தோற்றுமப்பா கண்ணிற்கு கூச்சங்காணும்
                        சாணளவு ரூபமது கொண்டுமல்லோ
                                             சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
                       நீணவே மாயாதி ரூபந்தானும்
                                             நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே””””

ஆகாயத்தை நோக்கி நாம் பார்க்கும் பொழுது சுடரிலிருந்து வெளிப்படும் ஒளி எவ்வளவு பிரகாசத்தைத் தருமோ,  
எவ்வளவு பிரகாசத்தை உண்டு பண்ணுமோ ,
அத்தகைய ஒரு பிரகாசத்தை போல நம்முடைய உருவம் நமக்கு எதிரே தோன்றும் .

அந்த உருவத்தை நாம் காணும் பொழுது நம்முடைய கண்கள் கூசும் விதத்தில் எதிரே உள்ள உருவம் தெரியும்
அதாவது பனைளயவு உருவம் கொண்ட நமது உருவத்தை காணும் பொழுது கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு பிரகாசமாக இருப்பதால்
கண்களால் பார்க்கும் பொழுது நம்முடைய கண்கள் கூசும் .

எண்சாண் அளவு கொண்ட நமது உருவமானது பனை அளவு உயரம் அளவுக்கு உருவம் தெரியும் .

பனையளவு உயரம் கொண்டு எதிரே தெரியும் உருவம் நம்மைப் போலவே அச்சு அசலாக உண்மையாக ஒரு உருவம் இருப்பது போலவே தெரியும் .
அது எப்பொழுது தோன்றுமென்றால் ஆரம்ப கட்டத்தில் அச்சு அசலாகத் தெரியாது .
சாயா தரிசனத்தில் உயர்ந்த நிலை அடைந்த பின்னர்  அதாவது வருடங்கள் பல கடந்தப் பின்னர்  தான் அவ்வாறாகத் தெரியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .


                      """“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                போற்றினேன் பதிவுஏழு  ந்தான்முற்றே “”

December 22, 2011

போகர்-7000-சாயா தரிசனம்-செய்யும் முறை- பதிவு-6





               போகர்-7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -6

        """"“”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
                                             ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:
பாடல் - 2:

     “”””””காணவே சாமமது ரெண்டுக்குள்ளே
                               கருவான காயாதி கற்பங்கொண்டு
              கோணவே போசனங்கள் உண்டுமேதான்
                              தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
              நாணவே முடிதனையே அசைக்காமல்தான்
                               நன்மையுடன் இருகரமும் தொங்கவிட்டு
             பூணவே தன்நிழலைக் கண்ணால்கண்டு
                              பொங்கமுடன் நன்மைதின்மை அறிந்திடாயே”””””””
                                                                              ---------போகர்------ 7000---------
           “”””””காணவே சாமமது ரெண்டுக்குள்ளே”””””
சாயா தரிசனத்தை இரண்டு சாமத்திற்குள் செய்ய வேண்டும் என்கிறார் போகர்.
முதலில் சாமம் என்றால் என்ன என்றும் , அதன் கால அளவு எவ்வளவு என்றும் தெரிந்து கொள்வோம் .


சாமம் :
ஒரு நாளைக்கு 10 சாமம்
பகல் 5 சாமம், இரவு 5 சாமம் ---ஆக மொத்தம்-----ஒரு நாளைக்கு 10 சாமம்
ஆகும் .

பகல் 5 சாமம் ----என்பது ---அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ,
இரவு 5 சாமம்---- என்பது -------மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 06..00 மணி வரை ,
ஆகும் .

                        1 சாமம் --------------  6 நாழிகை
                        1 நாழிகை------------ 24 நிமிடம்
                        6 நாழிகை------------ 02 மணி 24 நிமிடம்
                        எனவே ,
                         1 சாமம்--------------- 02 மணி 24 நிமிடம்
                         2 சாமம்----------------04 மணி 48 நிமிடம்

போகர்  சாயா தரிசனத்தை “”சாமமது ரெண்டுக்குள்ளே”” செய்ய வேண்டும் என்றும் , காலையில் சூரியனை வைத்தும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார் .

அதாவது காலையில் இரண்டு சாமத்திற்கான அளவுகளை கணக்கிட்டு அந்த கால அளவுக்குள் , சாயா தரிசனத்தை செய்யும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
போகர்  சொல்லும் சாயா தரிசனத்திற்கான கால அளவை பின்வருமாறு கணக்கிட்டு செய்ய வேண்டும்.    

இரண்டு சாமத்திற்கான அளவு - கணக்கிடுதல் : 
             
          காலை ------------- 06 . 00 மணி (அதிகாலை 06.00 மணி)
       1 சாமம் --------------  02 . 24 (2 மணி 24 நிமிடம்)
                                                   --------------------
          1 சாமம் -------------  08 . 24 (8 மணி 24 நிமிடம்)   
                                                    ---------------------

            காலை---------------- 08 - 24 (8 மணி 24 நிமிடம்)
           1 சாமம்----------------  02 . 24
                                                          --------------------
              2 சாமம் --------------  10 . 48 (10 மணி 48 நிமிடம்)
                                                        ---------------------


சாமமது இரண்டுக்குள்ளே என்றால் அதிகாலை 06.00 மணியிலிருந்து அதிகாலை 10.48 மணிக்குள் என்று பொருள்.
சாயா தரிசனத்தை அதிகாலை 06.00 மணிமுதல் அதிகாலை 10..48 மணிவரை இடைப்பட்ட நேரத்திற்குள் காலத்திற்குள் செய்ய வேண்டும் என்கிறார்  போகர்.



                                  “”””””””கருவான காயாதி கற்பங்கொண்டு
                         கோணவே போசனங்கள் உண்டுமேதான்”””””””””
 காய கற்பம் :
காயம் என்றால் உடம்பு என்று பொருள் .
கற்பம் என்றால் அழிவில்லாமல் பாதுகாப்பது என்று பொருள் .
காய கற்பம் என்றால் உடலை அழிவில்லாமல் பாதுகாப்பது என்று பொருள் .

இங்கே போகர்  காயாதி கற்பம் கொண்டு என்கிறார் . ஆனால் அதன் விவரங்கள் என்ன என்று அவர்  சொல்லவில்லை .
காயாதி கற்பம் என்றால் லேகியம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.
அது என்னவென்ற ரகசியம் குரு , சீடர்  பரம்பரை வாயிலாக மறை பொருளாக வந்து கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

போசனங்கள் உண்டுமே தான் என்றால் நன்றாக சாப்பிட்டு விட்டு என்று பொருள் .

சாயா தரிசனத்தை சாப்பிட்டு விட்டுத் தான் செய்ய வேண்டும் என்கிறார் போகர் .



             “”””””””தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
               நாணவே முடிதனையே அசைக்காமல்தான்
                           நன்மையுடன் இருகரமும் தொங்கவிட்டு”””””””

முதலில் பூமியில் அசையாமல் நேராக நின்று கொள்ள வேண்டும் .

பெண்களுக்கு நாணம் வந்தால் எப்படி முகத்தை தொங்கப் போடுவார்களோ, அவ்வாறு முகத்தை பூமியை நோக்கி தொங்க விட்டுக் கொண்டு,  முகத்தை அசைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

நம்முடைய இரண்டு கரங்களையும் தளர்த்திக் கொண்டு தரையை நோக்கியவாறு இருக்கும் படி தொங்க விட்டுக் கொள்ள வேண்டும் .
இரண்டு கரங்களும் பூமியை நோக்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் .



””””””பூணவே தன்நிழலைக் கண்ணால்கண்டு
                             பொங்கமுடன் நன்மைதின்மை அறிந்திடாயே”””””””
மேலே சொல்லப்பட்ட முறைகளின் படி செயல்களைச் செய்து தன்னுடைய நிழலை முழுமையாக பார்த்து சாயா தரிசனத்தை செய்வதற்குரிய பயிற்சியை தொடங்க வேண்டும் .


நமது வாழ்வில் நடை பெறக் கூடிய நன்மை , தீமைகளை அறிந்து கொள்ளக் கூடிய சக்தியை பெற வேண்டுமானால் சாயா தரிசனத்தை செய்ய வேண்டும் என்று சொல்லும் போகர் ,

சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்யும் முறைகளை தொடர்ந்து பின்வரும் பாடல்களில்  கூறுகிறார் .

                     """""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                    போற்றினேன் பதிவுஆறு  ந்தான்முற்றே “”""""

December 21, 2011

போகர் -7000- சாயா தரிசனம்-செய்யும் முறை- பதிவு-5




போகர் -7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -5

“”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:

பாடல் -1
சாயா தரிசனத்தின் வரலாற்றையும் , சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் சக்திகளையும் , பலன்களையும் தன் பாடல்களின் மூலம் விளக்கிய போகர் ,
சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்,
சாயா தரிசனத்தை செய்யும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் எவை என்பதைப் பற்றியும் ,
சாயா தரிசனத்தை செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை விஷயங்கள் எவை என்பதைப் பற்றியும்,  
போகர்  சொல்லியவற்றை பின்வரும் பாடல்களில் பார்ப்போம்

      
     “”””””வரியான புலிப்பாணி கண்ணேகேளு
                                 வாகுபெற ஆகாய தெரிசனந்தான்
                துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு
                                 துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளாய்
               சரியான பூமிதனில் மேடுபள்ளம்
                                சட்டமுடன் ஆராய்ந்து சரிதைகாண
               பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க
                                 பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
                                                                                        ------போகர் ---- 7000-----


“”””””வரியான புலிப்பாணி கண்ணேகேளு””””
என்னுடைய சீடனாகிய புலிப்பாணியே  நான் சொல்ல வருவனவற்றை பொறுமையுடனும் , நிதானமாகவும் கேட்பாயாக என்று,
சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றி போகர்  தன் சீடனாகிய புலிப்பாணியிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் .




               “”””””வாகுபெற ஆகாய தெரிசனந்தான்
        துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு
                        துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளாய்”””””
போகர்  ஆகாய தரிசனம் என்று குறிப்பிடுவது சாயா தரிசனத்தைத்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

சாயா தரிசனத்தை , ஆகாய தரிசனம் என்று போகர்  குறிப்பிடுவதற்கு என்ன காரணம் என்பதை பின்வரும் பாடல்களின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் .
சாயா தரிசனத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு விதமான நன்மைகளை தனக்குள் அடக்கியதும் ,
                            அதிசயங்களையும்,
                           ரகசியங்களையும் ,
                          சித்துவேலைகளையும்
தன்னுள் கொண்டதுமான சாயா தரிசனத்தை செய்வதற்கு
எந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும்,
எந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் ,
எந்த சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ,
சொல்கிறேன் கேட்டுக் கொள்வாயாக என்று போகர்  தன் சீடனான புலிப்பாணியிடம் கூறுகிறார் .


வையகத்தில் இருப்பதற்கு என்றால் ,
இந்த உலகத்தில் இறப்பு அற்று வாழ்வதற்குரிய ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்று பொருள் .

துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு என்றால் ,
இந்த உலகத்தில் நன்மை எது? தீமை எது? என்பதையும் நாம் வாழும் காலத்தில்
நல்லது நடப்பதற்கு காரணம் என்னவென்றும் ,
கெட்டது நடப்பதற்கு காரணம் என்னவென்றும் ,
ஆராய்ந்து அறிவதற்கும்,
இந்த உலகத்தில் இறப்பு அற்று வாழ்வதற்கு உரிய ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்றும் பொருள் .


இத்தகைய சிறப்பு வாய்ந்த ரகசியங்களை தன்னுள் கொணடுள்ள பயிற்சியான தவமான சாயா தரிசனத்தை செய்வதற்கு உரிய முறைகள் எவையென்று கூறுகிறேன் கேட்பாயாக என்கிறார்  போகர். 
               


சாயா தரிசனம் பயிற்சி முறை ஆரம்பம்:

                “””””சரியான பூமிதனில் மேடுபள்ளம்
                                         சட்டமுடன் ஆராய்ந்து சரிதைகாண””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்வதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.     
சாயா தரிசனம் செய்வதற்கு தேர்ந்து எடுத்த இடம் மேடு பள்ளங்கள் இல்லாமல் , சமதளமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .
அதாவது சாயா தரிசனம் செய்பவர்  நிற்கும் பூமிக்குரிய இடம் மேடு பள்ளங்கள் இல்லாமல் , சமதளமாக இருக்க வேண்டும் என்கிறார்  போகர்.




            “””””பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க
                                       பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே””””
சூரியன் காலையில் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது சாயா தரிசனம் செய்பவர்  மேற்கு திசை நோக்கி நின்று கொள்ள வேண்டும் .
மேற்கு திசையில் தன்னுடைய முகம் இருக்கும் படி அதாவது மேற்கு திசையை நோக்கியபடி நின்று கொள்ள வேண்டும் .

மேற்கு திசையில் தன்னுடைய முகத்தைக் காட்டிக் கொண்டும் ,
கிழக்கு திசையில் அதாவது சூரியன் இருக்கும் திசையில் முதுகை காட்டிக் கொண்டும் ,
இருக்கும் படி நின்று கொள்ள வேண்டும் .

               

                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”