March 03, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தனக்குவமை-பதிவு-19


             
             இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தனக்குவமை-பதிவு-19  
  
                    “”பதிவு பத்தொண்பதை விரித்துச் சொல்ல
                                                           ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

        ““கேளுங்கள் , அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ;
           தேடுங்கள் , அப்பொழுது கண்டடைவீர்கள் ;
           தட்டுங்கள் , அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ””
                                                                           -------மத்தேயு----7 : 7

““கேளுங்கள் , அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ;””
உள்ளத்தால் கண்ட நினைவுகளை உருவத்தால் செதுக்க முடியவில்லை ;
எழுத்துக்களால் தீட்டிய வார்த்தைகளை அச்சில் வார்க்க முடியவில்லை ;
விரல்களால் மீட்டிய அபிநயங்களை மேடை ஏற்ற முடியவில்லை ;
கனவுகளில் பதித்த முத்திரைகளை இரத்தத்தால் தீட்ட முடியவில்லை ;
உவகையில் உருக்கி வைத்த உணர்ச்சிகளை
உணர்வுகளில் காட்ட முடியவில்லை ;
செதுக்கி வைத்த கலைகளை கண்கொண்டு ரசிக்க முடியவில்லை ;
உருக்கி வைத்த உவகைகளை உவமையாக்க முடியவில்லை ;
நுகர்ந்து வைத்த நுகர்வுகளை அனுபவித்து பார்க்க முடியவில்லை ;
நடித்து வைத்த நாடகங்களை ரசித்து ருசிக்க முடியவில்லை ;
மீட்டி வைத்த ராகங்களை சிந்தனையில் தேக்க முடியவில்லை ;
பற்றி வைத்த பரிவுகளை பந்தத்தில் சேர்க்க முடியவில்லை ;
சொல்ல நினைத்த சொர்க்கங்களை சுக போகத்தில் செதுக்க முடியவில்லை ;
வார்த்து வைத்த விண்மீன்களை மாலை கோர்க்க முடியவில்லை ;
பிடித்து வைத்த கதிரவனை விளக்கொளிக்காக விளக்கேற்ற முடியவில்லை ;
அடைத்து வைத்த தென்றலில் நீந்தக் கற்க முடியவில்லை ;
அழைத்து வந்த கடவுளை அன்பில் கட்ட முடியவில்லை ;
திருடி வந்த நரகத்தை விலைக்கு விற்க முடியவில்லை ;
கொண்டு வந்த சுவர்க்கத்தை சுகித்து மகிழ முடியவில்லை ;
படித்து வந்த தமிழைப் பதவியில் வைக்க முடியவில்லை ;
அழைத்து வந்த அறிவை அரியணை ஏற்ற முடியவில்லை ;
வானவில்லைப் பிடித்து வட்டிக்கு விட்டு வாழ முடியவில்லை ;
காதல் செய்த காதலியைக் கல்யாணம் செய்ய முடியவில்லை ;

மனதில் தேக்கி வைத்த ஆசைகள் ,
உள்ளத்தில் எழுப்பி வைத்த கற்பனைக் கோட்டைகள் ,
விழிகளில் தேக்கி வைத்த கனவுகள் ,
ஆகியவைகளைக் கேட்டால் அப்பொழுது கொடுக்கப்படும்



                        “””தேடுங்கள் , அப்பொழுது கண்டடைவீர்கள்”””
யாரிடம் கேட்க வேண்டும்
எத்தகைய தன்மை உடையவரிடம் கேட்க வேண்டும்
யாரிடம் கேட்டால் நமக்கு வேண்டியவை கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நம் துன்பங்கள் நீங்குமோ?
யாரிடம் கேட்டால் நம் தேவைகள் நிறைவேறுமோ?
யாரிடம் கேட்டால் நம் வாழ்க்கை சுகமாகுமோ?
யாரிடம் கேட்டால் நம் கவலைகள் மாறுமோ?
யாரிடம் கேட்டால் நமக்கு இல்லை என்று சொல்லாமல் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நமக்கு உயர்ந்தவைகள் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நமக்கு மகிழ்ச்சிகள் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நம் அகம் மகிழுமோ?
யாரிடம் கேட்டால் நம் முகத்தில் புன்னகை பூ பூக்குமோ?
யாரிடம் கேட்டால் கிடைக்க முடியாததும் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நினைத்து பார்க்க முடியாததும் பெறமுடியுமோ?
யாரிடம் கேட்டால் அழிவில்லாத ஒன்றையும் பெற முடியுமோ?
யாரிடம் கேட்டால் நம் சிந்தை தெளியுமோ?
யாரிடம் கேட்டால் நம் வாழ்வின் தடுமாற்றம் நீங்குமோ?

அத்தகையவரிடம் ,
அத்தகைய தன்மை உடையவரிடம் ,
அத்தகைய சிறப்புகள் பெற்றவரிடம் கேட்க வேண்டும் .

அத்தகையவரை தேட வேண்டும்
அத்தகைய ஒருவர்  என்றால் - அவர்
ஆண்டவராகத் தான் இருக்க முடியம்
ஆண்டவரால் மட்டும் தான்
நாம் நினைத்ததை நடத்த முடியும் ;
தேவையை தீர்க்க முடியும் ;
மகிழ்ச்சியை தர முடியும் ;
துன்பத்தை போக்க முடியும் ;
கவலைகளை கரைக்க முடியும் ;
கண்ணீரை துடைக்க முடியும் ;

அத்தகைய ஆண்டவரை தேடினால் கண்டு அடைவீர்கள்
அதாவது அவரை காணக்கூடிய பேறு உங்களுக்கு கிடைத்தால் ;
அவரிடம் இணையக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் ;
அவரிடம் பேசக்கூடிய தகுதி உங்களுக்கு உண்டானால் ;
நீங்கள் கேட்கக் கூடியவைகளை இறைவன் கேட்கும் நிலை வந்து விட்டால் ;
அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் .
நீங்கள் இறைவனைக் கண்டு ,
அதன்மூலம் உங்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வீர்கள் .



“”தட்டுங்கள் , அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;””

எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடியுமா?
என்பதை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

உங்கள் ஆசைகள் ஒழுக்கமானவைகளாக இருந்தால் ;
நல்ல எண்ணத்துடன் கூடியவைகளாக இருந்தால் ;
மற்றவருக்குத் துன்பத்தை தரக்கூடியவையாக இல்லாமல் இருந்தால் ;
மற்றவர்  வாழ்வை கெடுப்பதாக இல்லாமல் இருந்தால் ;
உங்களுக்கு உங்களுடைய பாவ புண்ணியங்களுக்கு ;
ஏற்ற விதத்தில் கொடுக்கப்படும் .

நீங்கள் அன்புடன் ; நீங்கள் கருணையுடன் ; நீங்கள் இரக்கமுடன் ;
நற்குணங்களைப் பெற்று நல்லதே நினைத்து ; நல்லதே சொல்லி ;
நல்லதே செய்து ; வாழும் ஒருவராக -  நீங்கள் இருந்து
இறைவனின் இதயக் கதவை தட்டினால் ;
அவருடைய இதயத்தை வேண்டுதல் என்ற முறையில் ;
பிரார்த்தனை என்ற வழியில் தட்டினால் ;
உங்கள் தேவைகள் சரியானவைகளாக இருந்து ,
அவை உங்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப
ஏற்ற விதத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் .

உங்கள் வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்பவர்  யார்?
என்பதை உணர்ந்து கேளுங்கள்.
அதாவது ஆணட்வர்  தான் தருவார்  என்பதை
உணர்ந்து தேடுங்கள், காணுங்கள் .
அதன்மூலம் உங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்று கொள்வீர்கள் .
தேவையானவைகள் பெற வேண்டும் என்றால் ,
இறைவன் இதயக் கதவைத் தட்ட வேண்டும் .
அப்பொழுது இதயக் கதவு திறக்கப்பட்டு உங்களுக்கு தேவையானவைகள்,
உங்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அளிக்கப்படும் .

இதைச் சுருக்கமாகச் சொன்னால் ,
உங்களுக்கு தேவையானவைகளை ஆண்டவனிடம் கேட்டால்
ஆண்டவன் தருவார்  என்று பொருள் .

உங்களுக்கு தேவையானவைகளை ஆண்டவரிடம் கேட்டால்
உங்களுடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப
தேவையானவைகளைத் தருவார் ;
தேவையில்லாதவைகளைத் தர மாட்டார் ;
 என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் இயேசு .



திருவள்ளுவர்:
        “””தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
             மனக்கவலை மாற்ற லரிது”””
                                                     ------திருவள்ளுவர்----திருக்குறள்--

பாசத்தின் கருவறையில் கூட எனக்காக
அன்புகள் கருவுறவில்லை ;
மலரத் துடிக்கும் மொட்டுகளில் கூட
எனக்காக சுவைத் தேன்கள் சுரக்கவில்லை ;
வீசவரும் தென்றலில் கூட
எனக்காக இனிமைகள் பூப்பூக்கவில்லை ;
உதிக்கத் துடிக்கும் உதயசூரியனில் கூட
எனக்காக உயர்வுகள் உதயமாகவில்லை ;
ஆனால் கல்லறையின் இடுக்குகளில் கூட எனக்காக
இடம் ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது .

கஷ்டத்தை கட்டிலாகப் போட்டு படுக்கிறவன் – நான் ;
தோல்வியை துண்டாக மாற்றி தோளில் போட்டு நடக்கிறவன் – நான் ;
பிரச்சினையை தலையணையாக்கி தலைக்கு
வைத்துக் கொள்பவன்- நான் ;
கண்ணீரை தாகம் தீர்க்கும் தண்ணீராக பருகுபவன் – நான் ;
வெற்றி என்ற காற்று வரவில்லை என்பதற்காக
இன்பம் என்ற சுவாசத்தை வாங்க முடியாவிட்டாலும்
வாழ்க்கை வெயிலில் நடக்க தயங்காதவன் -  நான் ;

வாழ முடியவில்லை ;
வாத் தெரியவில்லை ;
வாழ வழியில்லை ;
வாழவே பிடிக்கவில்லை ;
ஏன் பிறந்தேன் என்று புரியவில்லை ?
எதற்காக வாழ்கிறேன் என்று தெரியவில்லை ?

மனதில் அமைதி இல்லை ;
உள்ளத்தில் இன்பம் இல்லை ;
வாயில் புன்னகை இல்லை ;
வேலை தேடினால் வேலை கிடைக்க வில்லை ;
செல்வம் சேர்க்க முடியவில்லை ;
வாழ வீடு இல்லை ;
சாப்பிட உணவு இல்லை ;
உடுத்த உடை இல்லை ;
இல்லறத்தில் நுழைய துணைவி கிடைக்கவில்லை ;
துணைவி கிடைத்தாலும் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை ;
குழந்தைச் செல்வமும் இல்லை ;
நிம்மதியாக வாழ முடியவில்லை ;
அமைதியாக இருக்க முடியவில்லை ;

என்று உள்ளம் நொந்து ,வாழ்க்கை வெறுத்துப் போய்
உதவிக்கரம் கொடுத்து துவண்டு போன வாழ்க்கையை
துhக்கி நிறுத்தி யாரேனும் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன் .

            தோல்வியுற்ற என்னை
            தோள் கொடுத்து துhக்க
            துணை இல்லை இங்கே !

                                                வருந்திக் கிடக்கும் என்னை
                                                வாழ வைக்க
                                                வழி இல்லை இங்கே !

             அழிந்து விட்ட
              அன்புகளை அரவணைக்க
              ஆதரவு இல்லை இங்கே !

                                               முடிந்து விட்ட
                                               முடிவுகளுக்கு முதலுதவி செய்ய
                                                முகம் இல்லை இங்கே !

             கரைந்து விட்ட
             காட்சிகளைக் கரை சேர்க்க
              கவலை இல்லை இங்கே !

                                                 மடிந்து விட்ட
                                                 மனச் சாட்சிகளை மன்றத்தில் ஏற்ற
                                                 மனது இல்லை இங்கே

               பிரிந்து விட்ட
              பிரிவுகளை உறவாக்க
               பிணைப்பு இல்லை இங்கே !

                                               சரிந்து விட்ட
                                               சதிராட்டங்களைச் சரித்திரத்தில் ஏற்ற
                                               சந்தர்ப்பம் இல்லை இங்கே !

என்பதை உணர்ந்து கொண்டேன்
அழுது புலம்புவதால் ஒரு பயனும் இல்லை .

நம் கவலைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியவர்  யார்
என்பதை அறிய வேண்டும் .
அவரிடம் சரண் அடைய வேண்டும் என்கிறார்  திருவள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் என்று பெயரிட்டு அழைக்கப்படுபவனால்
மட்டுமே நம் கவலைகள் அனைத்தையும் தீர்க்க முடியும்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

தனக்குவமை இல்லாதான் :
பிரபஞ்ச பரிணாமத்தில் ; பரிணாம தோற்றத்தில் ;
ஒரு உருவத்தைப் போல ஒரு உருவம் ,
ஒரு குணத்தைப் போல ஒரு குணம் ,
ஒரு நிறத்தைப் போல ஒரு நிறம் ,
ஒரு வடிவத்தைப் போல ஒரு வடிவம் ,
ஒரு மணத்தைப் போல ஒரு மணம் - உண்டு
ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதி - அந்தம் ஒன்றே .

ஆனால் , அதிநிலை , முதல்நிலை , மூலநிலை
இருப்புநிலை என்று சொல்லப்படக்கூடிய
பரம்பொருளுக்கு ஒத்த பொருள் ஒன்று இல்லை .
அதனை மற்றொன்றுடன் ஒப்பிட்டு விளக்க முடியாது .
உவமையால் விளக்க முடியாது .
அதனால் அந்த நிலையை , அந்த மூலநிலையை ,
தனக்கு உவமை இல்லாதான் என்று கூறுகிறோம் .

தனக்குவமையில்லாதவன் தன்னை உவமைகள் கொண்டு
விளக்க முடியாதவன் என்று அந்த நிலையை கூறுகிறோம் .
மற்றொரு நிலையை உவமை காட்டி இது போலான
என்று கூறி விளக்கலாம் .
ஆனால் அவ்வாறு உவமை காட்டி கூறவொண்ணாத பெருமை வாய்ந்த
பரம்பொருள் உணர்ந்து பற்றி நின்றாலொழிய விளக்க முடியாது .

அத்தகையவனிடம் சேர்ந்தால் ஒழிய மனக்கவலையை மாற்ற முடியாது
மனிதனுக்குள்ள அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்து
அவனுடைய கவலைகளை நீக்க வேண்டுமானால்
பரம்பொருள் , ஆண்டவன் , இறைவனால்

மட்டும் தான் முடியும் - எனவே
உனக்கு எவை தேவையோ அதை இறைவனிடம் கேள் - அதை

எல்லாம் வல்ல இறைவன் அளிப்பார்  என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து – திருவள்ளுவர்:
இயேசு , மனிதனுக்கு எது தேவையோ அதை கேட்டால் அதை ஆண்டவனால் மட்டும் தான் தர முடியும் என்கிறார் .

அவ்வாறே ,
திருவள்ளுவரும் , மனிதனுக்கு எது தேவையோ அதை இறைவனிடம் கேட்டால் அதை இறைவனால் மட்டும் தான் தர முடியும் என்கிறார்.


                            “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                  போற்றினேன் பதிவுபத்தொண்பது  ந்தான்முற்றே “”

March 01, 2012

இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பரமபதத்தை - பதிவு-18






    இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பதிவு-18
      
                        “”பதிவு பதினெட்டை விரித்துச் சொல்ல
                                                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

வசனம் -1:

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் ; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
                                                                --------யோவான் - 14 : 6

தெரியாத மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் ;
தெரியாத விளையாட்டை அறிந்து கொள்வதற்கும் ;
புரியாத வியாபாரத்தை புரிந்து கொள்வதற்கும் ;
அறியாத பாடத்தை அறிந்து கொள்வதற்கும் ;
அறியாத சூட்சுமத்தை உணர்ந்து கொள்வதற்கும் ;
கற்காத கல்வியை கற்றுக் கொள்வதற்கும் ;
சுட்டிக் காட்டப்படும் முறை ,
விளக்கி சொல்லித் தரப்படும் முறை ,
வழி காட்டுதல் என்ற நிலைக்குள்
அடக்கி வைக்கப்படுகிறது .


நானே வழி என்று சொல்லும் போது
எதற்கான வழி ? என்ற கேள்வி எழுகிறது .

அதற்கான பதிலை இயேசு ,
அடுத்த வார்த்தையில் சொல்கிறார்
சத்தியத்திற்கு வழி - அதாவது
சத்தியத்திற்கு நானே வழியாக இருக்கிறேன்  என்கிறார்.

சத்தியம் உண்மை என்ற வார்த்தையால் குறிப்பிடப் படுகிறது
பொய்    ---- உண்மை இல்லாதது பொய்
உண்மை  --- பொய் இல்லாதது உண்மை
உண்மைக்கும் பொய்யுக்கும் நுhலிழை வித்தியாசமே உண்டு .

                                                  சத்தியம் பொய் இல்லாதது ;
                                                  சத்தியம் என்றும் மாறாதது ;
                                                  சத்தியம் என்றும் அழியாதது ;
                                                 ஆண்டவனே சத்தியம் ;
                                                  ஆண்டவனே நித்தியம் ;

சத்தியமாகிய ஆண்டவனை அடையக் கூடிய
வழியாக நான் இருக்கிறேன் என்கிறார்  இயேசு .

அடுத்து ஒரு கேள்வி எழுகிறது சத்தியத்தை
அடையக் கூடிய வழி என்ன?
இயேசு அடுத்து கூறுகிறார்  - “”ஜீவனுமாயிருக்கிறேன்”””
ஜீவன் மூலமாக சத்தியத்தை உணர முடியும் .
சத்தியமாகிய ஆண்டவனை அடைய முடியும் .
 
                                             என்னுடைய ஜீவன் மூலமாக
                                             சத்தியமாகிய ஆண்டவனை
                                             அடையக் கூடிய வழியாக
                                              நான் இருக்கிறேன் என்கிறார்  இயேசு .

ஏனென்றால் , பிதாவை நான் அறிந்திருக்கிறேன்
என்னை என் ஜீவனை எவன் பின்பற்றுகிறானோ
அவனுக்கு சத்தியமாகிய ஆண்டவனை
அடையக் கூடிய வழியை நான் காட்டுவேன்
அதற்கு நான் வழியாக இருக்கிறேன் .

ஆண்டவனை அடையக் கூடிய ,
ஆண்டவனை அடையக் கூடிய வழியைக் காட்டக் கூடிய ,
ஆண்டவனிடம் சேரக் கூடிய ,
ஆண்டவனிடம் அருள் பெறக்கூடிய ,
ஆண்டவனிடம் தன் பாவங்களை முறையிடக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் பாவங்களைத் தீர்க்கக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் குறைகளை முறையிடக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் தேவைகளை கேட்கக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் வாழ்வை வளமாக்கக் கூடிய ,
வுழியை காட்டக் கூடியவராய்
நான் இருக்கிறேன் என்கிறார்  இயேசு .


என்னை , என் ஜீவனை , எவன் பற்றிக் கொள்ளுகிறானோ ,
அவனுக்கு சத்தியமாகிய ஆண்டவனை ,
அடையக் கூடிய வழியைக் காட்டும் வழியாக நான் இருக்கிறேன்
இருப்பேன் என்கிறார்  இயேசு .

நானே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறேன்
என்பதற்கு இது தான் பொருள்



வசனம் -2 :

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும்  அறிந்திருப்பீர்கள்
                   --------யோவான் - 14 : 7

என்னை ஆண்டவன் என்று நம்பினால் ,
என்னை ஆண்டவன் என்று அறிந்தால் ,
என்னை ஆண்டவன் என்று உணர்ந்தால் ,
என்னை ஆண்டவன் என்று விசுவாசித்தால் ,
என்னை ஆண்டவன் என்று பின்பற்றினால் - மட்டுமே
                                       பிதாவை அறிய முடியும் ;
                                       பிதாவை உணர முடியும் ;
                                        பிதாவினிடத்தில் வர முடியும் ;
                                        பிதாவை அடைய முடியும் ;
என்கிறார்  இயேசு .



வசனம் -3 :
பிலிப்பு அவரிடம் பிதாவை எங்களுக்கு
காண்பிக்க வேண்டும் என்கிறார்.
பிதா யார்? என்பதை அறிந்து கொள்வதற்காக ,
அவர்  எத்தகைய சக்தி படைத்தவர்
என்பதை தெரிந்து கொள்வதற்காக ,
அவர்  எவ்வளவு பெரிய அற்புதங்களை செய்வார்
என்பதை உணர்ந்து கொள்வதற்காக
பிலிப்பு இயேசுவிடம் பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றான் .

அதற்கு இயேசு ,

பிலிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?   என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் ; அப்படியிருக்க பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?”
                                                                   --------யோவான் - 14 : 9
இவ்வளவு காலம்
என்னுடன் உறவாடிக் கொண்டு இருக்கிறாய் ;
என்னுடன் பழகிக் கொண்டு இருக்கிறாய் ;
என் வார்த்தைகளை கேட்கிறாய் ;
என் வசனங்களை கேட்கிறாய் ;
என் செயல்கனை நோக்குகிறாய் ;
என் விளக்கங்களை அறிகிறாய் ;
என் சிந்தனைகளை உணர்கிறாய் ;
என் அற்புதங்களை பார்க்கிறாய் ;
என் தீர்க்கதரிசனங்களை கேட்கிறாய் ;

                                             குருடர்  பார்வையடைவதை ;
                                             ஊமை பேசுவதை ;
                                             செவிடர்  கேட்பதை;
                                            இறந்தவர்  உயிர்  பெற்று எழுவதைப் பார்த்தும்;

இன்னும் உனது மனம் தெளிவு அடையவில்லையா ?
அறிவு விளக்கம் பெற வில்லையா?
புத்தி ஆராய்ந்து நோக்கவில்லையா?
அப்படி இருந்தும் நீ எப்படி இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாய் .

நான் வேறு அல்ல , பிதா வேறு அல்ல
என்னில் பிதாவும் , பிதாவில் நானும் இருக்கிறேன்
பிதாவில் நான் இருக்கிறேன் , என்னில் பிதா இருக்கிறார்

என்னைக் கண்டவன் , பிதாவைக் கண்டவன்
பிதாவைக் கண்டவன் , என்னைக் கண்டவன்

பிதாவைக் கண்டவன் , என்னைக் காண்பான்
என்னைக் கண்டவன் , பிதாவைக் காண்பான்

நான் இருக்கும் இடத்தில் பிதா இருப்பார்
பிதா இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்

என்னை அறிந்தவன் , பிதாவை அறிவான்
பிதாவை அறிந்தவன் , என்னை அறிவான்


இவற்றை எல்லாம் எவன் அறியவில்லையோ ?
இவற்றை எல்லாம் எவனுக்கு உணர்ந்து
கொள்ளும் சக்தி இல்லையோ ?
இவற்றை எல்லாம் யாருக்கு புரிந்து கொள்ளும்
மனப்பக்குவம் இல்லையோ?

அவர்கள் தான் என்னையும் ,
பிதாவையும் வேறு படுத்தி பார்ப்பார்கள்
பிதா வேறு , நான் வேறு என்று பார்ப்பார்கள் .

நீ இன்னும் மனது தெளிவு பெறாத காரணத்தால் தான்
பிதாவை எனக்கு காண்பியும் என்கிறாய்
என்று பிலிப்புவை நோக்கி இயேசு கூறுகிறார்.



பகவத்கீதை - கிருஷ்ணர் :

 “””ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாச்ரய :
  மத்ப்ரஸாதாதவாப்நோதி சாச்வதம் பதமவ்யயம்   “”””

        அத்தியாயாம் - 18 : மோசஷ ஸந்யாஸ யோகம் : சுலோகம் - 56

“””என்னையே புகலாகக் கொண்ட கர்மயோகி எலலாக் கர்மங்களையும் எப்பொழுதும் செய்து கொண்டிருப்பினும் எனது அருளால் நிலையான என்றுமுள்ள அழியாத பரமபதத்தை அடைகிறான்”””
    ----பகவத்கீதை--(பதவுரை-பொழிப்புரை)--ஜயதயால் கோயந்தகா--

அறியாமையை விலக்கித் தான் ;
ஆசையை அறுத்துத் தான் ;
இன்பத்தை எரித்துத் தான் ;
ஈவதில் உயர்ந்து தான் ;
ஊழ்வினையை கழித்துத் தான் ;
வந்த கடமையை முடிக்கத் தான் ;
மனிதனாக பிறவி எடுப்பதற்கு காரணம் தான் ;
மனிதன் பிறவி எடுப்பதே கர்ம வினைகளை கழிப்பதற்குத் தான் ;
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுப்பதற்குத் தான் ;
பிறப்பு - இறப்பற்ற நிலையை அடைவதற்குத் தான் ;
எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திலேயே இணைவதற்குத் தான் ;

எதிலிருந்து எல்லாம் தோன்றியதோ ,
எது எல்லாவற்றையும் காத்து வருகின்றதோ ,
எதில் எல்லாம் போய் ஒடுங்கப் போகிறதோ - அதைத் தான்

அந்த நிரந்தரமானதைத் தான் ;
அந்த அழிவில்லாததைத் தான் ;
ஆதி - அந்தம் இல்லாததைத் தான் ;
பிறப்பு - இறப்பு அற்றத்தைத் தான் ;
குணத்தைக் கடந்ததைத் தான் ;
உருவத்தில் அடக்க முடியாததைத் தான் ;
எழுதுக்களில் எழுத முடியாததைத் தான் ;
வார்த்தைகளில்  சொல்ல முடியாததைத் தான் ;
உவமித்து காட்ட முடியாததைத் தான்
எல்லாம் வல்ல பரம்பொருளைத் தான் ;
அப்பாலுக்கும் அப்பால் உள்ளதைத் தான் ;
எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதைத் தான் ;
வேறுபடுத்தி காட்ட முடியாததைத் தான் ;
விஞ்ஞானத்தால் உணர முடியாததைத் தான் ;
ஐம்புலன்களுக்குள் அடக்க முடியாததைத் தான் ;

துhணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று
சொல்லப்படுவதைத் தான் ;
அன்றும் என்றும் இன்றும் உள்ளத்தைத் தான் ;
நித்தியமாக உள்ளதைத் தான் ;

எதை இதுகளால் அதை உணரமுடியவில்லையோ
                                  அதைத் தான் ;
                                  அந்த உண்மையைத் தான் ;
                                  அந்த சத்தியத்தைத் தான் ;

அடைய வேண்டுமானால்
இணைய வேண்டுமானால் - என்னை சரணடை
அதாவது கிருஷ்ணனை சரணடை ,
அதாவது இறைவனை சரணடை ,
இறைவனுடன் இணைந்தவன் அவனும் இறைவனாகிறான்
அது அது ஆக மாறுகிறது .


மனிதன் இறைவனை அடைய வேண்டுமானால் ,
கர்ம வினையைக் கழிக்க வேண்டும் .
இறைவனை அடைந்து விட்டால் ,
கர்ம வினை தன்னுள் எரிந்து விடும் .

நாம் நம் கர்ம வினையை
கழிக்க பல்வேறு பிரச்சனைகள் கஷ்டங்கள் தாங்கி
கண்ணீர்  விட வேண்டி இருக்கும்

கண்ணீரை இரத்தமாக சிந்த வேண்டி இருக்கும் ;
குடும்பத்தை வெறுக்க வேண்டி இருக்கும் ;
வாழ்க்கையை வெறுக்க வேண்டி இருக்கும் ;
பந்தத்தை அறுக்க வேண்டி இருக்கும் ;
செல்வத்தை இழக்க வேண்டி இருக்கும் ;
ஆசையை துறக்க வேண்டி இருக்கும் ;

என்ற காரணத்தாலேயே
என்னை சரண் அடை என்கிறார்.
அது தான் பரிபூரண சரணாகதி

எல்லாமே நீ தான் என் வாழ்க்கையில் நடக்கும்
இன்பம் - துன்பம்  ; உயர்வு – தாழ்வு ;
ஏற்றம் - இறக்கம் ; மகிழ்ச்சி - கவலை ; சோகம் – துக்கம் ;
போன்ற அனைத்திற்கும் நீ தான் காரணம் என்று ,

இறைவனை சரண் அடைந்து விட்டால்
இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் .

நிம்மதியான வாழ்வை அளித்து
நிலைத்த பேரின்பத்தை
மரணமில்லா பெருவாழ்வு
முக்தி என்னும் நிலையை
ஞானத்தை அளித்து காப்பான் என்கிறார்
பகவத் கீதையில் கிருஷ்ணர்.

என் வழியால் வந்தால் உனக்கு துன்பமில்லை
நான் வழி காட்டுவேன் என்கிறார்  கிருஷ்ணர்.



இயேசு கிறிஸ்து-பகவத்கீதையில் கிருஷ்ணர்:
இயேசு ,
பிதாவை அடைவதற்கான வழியாக
நான் இருக்கிறேன் என்கிறார்.

அவ்வாறே ,
பகவத் கீதையில் - கிருஷ்ணரும் ,
கடவுளை அடைவதற்கான வழியாக நான் இருக்கிறேன் என்கிறார்.


                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                           போற்றினேன் பதிவுபதினெட்டு  ந்தான்முற்றே “”