October 20, 2018

திருக்குறள்-பதிவு-37


                     திருக்குறள்-பதிவு-37

“””தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க்
கல்லால் மனக்கவலை
மாற்றல் அரிது”””


தெரியாத ஒன்றைப்
பற்றி விளக்குவதற்கு
தெரிந்த ஒன்றைக்
கொண்டு ஒப்பிட்டு
விளக்குவது
உவமை அணி
எனப்படும்

ஆப்பிள் என்றால் என்ன
என்றே தெரியாதவருக்கு
ஆப்பிள் பற்றி தெரிய
வைக்க வேண்டுமானால்
அதனோடு தொடர்புடைய
வேறு ஒரு பொருளை
ஒப்பிட்டு ஆப்பிளை
விளக்க வேண்டும்.

ஆப்பிளை பார்க்காதவருக்கு
ஒரு தக்காளியை
எடுத்துக் கொண்டு
இதே மாதிரி தான்
ஆப்பிள் இருக்கும்
சிவப்பு வர்ணத்தில்
இருக்கும் இதை விட
சற்று பெரியதாக
இருக்கும் என்று
சொல்லி ஆப்பிளைப்
பற்றி அறியாதவருக்கு
ஆப்பிள் எப்படி
இருக்கும் என்று
விளக்க முடியும்

இந்த உலகத்தில்
உள்ள பொருள்களில்
ஏதேனும் ஒரு தெரியாத
பொருளைப் பற்றி
ஒருவர் தெரிந்து
கொள்ள விரும்பினால்
அவருக்கு
அந்த பொருளுடன்
தொடர்புடைய
வேறு ஒரு பொருளை
சுட்டிக் காட்டி
விளக்கம் கொடுத்து
அந்த தெரியாத
பொருள் இப்படித்தான்
இருக்கும் என்பதை
அவருக்கு விளக்க
முடியும்

உலகத்தில் உள்ள
எந்த ஒரு
தெரியாத பொருளையும்
வேறு ஒரு பொருளை
சுட்டிக் காட்டி
விளக்க முடியும்

ஆனால், இறைவன்
இப்படித் தான் இருப்பான்
இந்த குணங்களைக்
கொண்டு தான் இருப்பான்
என்பதை விளக்க
இந்த உலகத்தில்
எந்த ஒரு
பொருளும் இல்லை
எந்த ஒரு பொருளைக்
கொண்டும் ஒப்பிட்டு
விளக்க முடியாதவன்
இறைவன்
அதனால் தான்
இறைவனை தனக்குவமை
இல்லாதான்
என்கிறோம்.

தனக்குவமை
இல்லாதவன் என்று
சொல்லப்படுகின்ற
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
கர்மவினைகளைக்
கழித்தவருக்கு
பிறவி என்பது
கிடையாது
பிறவி என்பது
இல்லாதவருக்கு
மனக்கவலை என்பது
ஏற்படாது

ஆனால்
தனக்குவமை இல்லாதவன்
என்று சொல்லப்படுகிற
இறைவனுடன்
இரண்டறக் கலக்காதவருக்கு
கர்ம வினைகள்
கழியாமல்,
கர்ம வினையினால்
தொடர்ந்து பிறவி
பல உண்டாகி
கஷ்டங்கள் ஏற்பட்டு
மனக்கவலை
என்பது ஏற்படும்
தொடர்ந்து பிறவி
எடுத்து வரும்போது
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டி வரும்
மனக்கவலை என்பது வரும்
அவர்களுடைய
மனக்கவலையை
மாற்ற முடியாது.

தனக்குவமை இல்லாதவன்
தாள் சேர்ந்தாற்கல்லால்
என்றால்,
எந்த பொருளோடும்
ஒப்பிட்டுக் காட்டி
விளக்க முடியாத
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இருப்பவர்கள்
என்று பொருள்

மனக்கவலை மாற்றல்
அரிது என்றால்,
கர்ம வினையைக்
கழிக்காமல்
பிறவி பல எடுத்து
துன்பப்படுபவர்களுடைய
மனக்கவலையை மாற்ற
முடியாது என்று
பொருள்.

தனக்குவமை இல்லாதவன்
என்று சொல்லப்படுகிற
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இருப்பவர்களுக்கு
கர்ம வினைகள்
கழியாமல்,
கர்ம வினையினால்
தொடர்ந்து பிறவி
பல உண்டாகி
வாழ்க்கையில் ஏற்படும்
கஷ்டங்களினால்
உண்டாகக்கூடிய
மனக்கவலையை
மாற்ற முடியாது

ஆனால்,
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
கர்மவினையைக்
கழித்தவருக்கு
பிறவி என்பது
ஏற்படாத காரணத்தினால்
மனக் கவலை
என்பது உருவாகாது
என்பதைத் தான்

தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை
மாற்றல் அரிது

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  20-10-2018
///////////////////////////////////////////////


October 19, 2018

திருக்குறள்-பதிவு-36



                      திருக்குறள்-பதிவு-36

“”””உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்””””

தானும், தனது
குடும்பமும்
இந்த உலகத்தில்
மகிழ்ச்சியாக
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
இரண்டு நிலைகளைப்
பின்பற்ற வேண்டும்

ஒன்று
எந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் முட்டாளாக
இருக்க வேண்டும்

இரண்டு
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் அறிவாளியாக
இருக்க வேண்டும்

ஒரு ஊரில் ஆண்கள்
யாரும் கோவணம்
கட்டுவதில்லை
இந்த விஷயத்தை
அறியாது அந்த
ஊருக்கு புதியதாக
வரும் ஒருவர்
கோவணம் கட்டிக்
கொண்டு அந்த ஊருக்குள்
நடந்து செல்கிறார்
அவரை பார்க்கும்
அந்த ஊரில் உள்ளவர்கள்
அனைவரும் அவரைப்
பார்த்து சிரிக்கின்றனர்
பைத்தியக்காரன்
கோவணம் கட்டி
இருக்கிறான் பார்
அவனுக்கு அறிவு
என்பதே இல்லை
என்று கிண்டல்
கேலி செய்கிறார்கள்
அவமானப்படுத்துகிறார்கள்

முட்டாள்கள் கூடி
முட்டாள்தனமாக
ஒரு விஷயத்தை
செய்யும் போது
நாமும் முட்டாள்களுடன்
முட்டாளாக இருந்து
கோவணம்
கட்டாமல் இருந்தால்
நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ முடியும்
நான் அறிவாளி
கோவணம் கட்டிக்
கொண்டு தான் செல்வேன்
என்று சென்றால் நாம்
நிம்மதியாக வாழ முடியாது

நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ வேண்டுமானால்
எந்த இடத்தில் முட்டாளாக
இருக்க வேண்டுமோ
அந்த இடத்தில்
முட்டாளாக இருந்து
தான் ஆக வேண்டும்
அந்த இடத்தில்
அறிவாளியாக
இருக்கக் கூடாது

இது தான் கோவணம்
கட்டாத ஊரில்
கோவணம் கட்டியவன்
பைத்தியக்காரன்
என்பதற்கு அர்த்தம்

நாம் பள்ளியில்
படித்துக் கொண்டிருக்கிறோம்
அப்பொழுது
அனைவரும் போட்டி
போட்டுக் கொண்டு
வாழ்க்கையில்
நல்ல வேலை
நல்ல சம்பளம்
கிடைக்க வேண்டுமானால்
நன்றாக படித்து
அதிக அளவில்
மதிப்பெண்கள் எடுக்க
வேண்டும் என்ற
நினைப்பில் அனைவரும்
போட்டி போட்டுக் கொண்டு
படிக்கும் போது
நாமும் அவர்களுடன்
போட்டி போட்டுக்
கொண்டு படித்து
அதிக மதிப்பெண்கள்
எடுத்து நாம்
அறிவாளி என்பதை
நிரூபிக்க வேண்டும்
இந்த இடத்தில்
அறிவாளியாக
இருக்க வேண்டும்
முட்டாளாக
இருக்கக் கூடாது

நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ வேண்டுமானால்
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ
அந்த இடத்தில்
அறிவாளியாக இருந்து
தான் ஆக வேண்டும்
அந்த இடத்தில்
முட்டாளாக
இருக்கக் கூடாது

தானும், தனது
குடும்பமும் நிம்மதியாக
உலகத்தில் உள்ள
மக்களோடு ஒன்று
பட்டு நிம்மதியாக
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
எந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டுமோ
அந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டும்
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் அறிவாளியாக
இருக்க வேண்டும்
என்பதை
உணராமல்
இருப்பவர்கள்
பலபுத்தகங்களைப்
படித்து பெற்ற
படிப்பறிவு மற்றும்
அனுபவத்தின்
மூலம் பெற்ற
பட்டறிவு
ஆகிய இரண்டு
அறிவினாலும்
ஒரு பயனும் இல்லை
என்பதைத் தான்

“”உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்””

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  19-10-2018
////////////////////////////////////////////////

October 16, 2018

திருக்குறள்-பதிவு-35


                       திருக்குறள்-பதிவு-35

“””””சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச்
சுடும்””””

மனிதன் மூன்று
விஷயங்களைத் தன்னுள்
கொண்டு இயங்கிக்
கொண்டு இருக்கிறான்

ஒன்று  : எண்ணம்
இரண்டு : சொல்
மூன்று  : செயல்

சினம் என்பது
எழும்போது
அறிவானது வெளியே
சென்று விடுகிறது
இதனால்
எது நல்லது
எது கெட்டது
என்பதை ஆராய்ந்து
எண்ணிப் பார்த்து
முடிவெடுக்க முடியாத
காரணத்தினால்
மனிதன்
சொல்லக்கூடிய
சொல்லும்,
செய்யக்கூடிய
செயலும்
தவறாகவே முடிந்து
விடுகிறது.

உலகில் நடைபெறும்
குற்றங்களில்
பெரும்பாலும்
சினம் உள்ளே
எழும்போது
அறிவு வெளியே
சென்று விடுவதால்
தான் ஏற்படுகிறது

சினம் என்பது
எழுந்து இயங்க
ஆரம்பித்தவுடன்
நாம் என்ன
பேசுகிறோம்
நாம் என்ன
செயல் செய்கிறோம்
என்பது நமக்கே
தெரியாமல் போய்
விடுகிறது.

தவறான வார்த்தைகளை
பிறர் மனம்
புண்படும்படி
பேசுவோம்
செய்யும் செயல்களைக்
கூடத் தவறாகத்
தான் செய்வோம்
பிறர் ஏற்றுக்
கொள்ளாத்தகாத
செயல்களைத்
தான் செய்வோம்

முதல் நபர்
இரண்டாம் நபரிடம்
பேசிக்
கொண்டிருக்கும்போதே
பேச்சு முற்றி
வாக்குவாதம் நடந்து
சண்டையாகி விடுகிறது
இதனால் முதல் நபர்
சினம் கொண்டு
இரண்டாம் நபரை
கத்தியால் குத்திய
காரணத்தினால்
இரண்டாம் நபர்
அந்த இடத்திலேயே
இறந்து விடுகிறார்
முதல் நபர்
கொலைகாரர் என்ற
பட்டத்துடன்
தண்டனை பெற்று
வருகிறார்.

சினத்தால்
முதல் நபர் செய்த
தப்பால் கிடைத்த
தண்டணையால்
முதல் நபர் மட்டும்
கஷ்டப்படவில்லை
அவருடைய
குடும்பமும் சேர்ந்தே
கஷ்டப்படுகிறது
அதாவது
கொலைகாரன் மனைவி
கொலைகாரன்
பிள்ளைகள் என்று
அவர்களை
அவமானப்படுத்தி
அவர்களை
இச்சமுதாயத்தில் வாழ
முடியாத அளவிற்கு
மன வேதனையை
உண்டாக்குகிறது
இச்சமுதாயம்

கொலை செய்தவரை
பார்த்து இப்படி
தப்பு செய்துவிட்டீர்களே
என்று கேட்டால்
அறிவில்லாமல்
செய்து விட்டேன்
என்று அவர் சொல்வார்
அதாவது சினம்
என்பது எழுந்தபோது
அங்கே அறிவு
வெளியே சென்று
விட்டது என்பது
அதற்குப் பொருள்.

சினம் என்பது
எழும்போது
அறிவு என்பது
வெளியே சென்று
விடுகிறது
நாம் குற்றம் செய்து
குற்றவாளியாகி
தண்டிக்கப்படுகிறோம்
நாம் மட்டும்
கெட்டப் பெயர்
வாங்கிக் கொண்டு
கஷ்டப்படப்பட
மாட்டோம்
நம்முடைய குடும்பமும்
சேர்ந்தே கஷ்டப்படும்
என்பதை நினைவில்
கொண்டு
மனிதன் சினம்
எழும்போது அது
எழாத வண்ணம்
பார்த்துக் கொள்ள
வேண்டும்
என்பதைத் தான்
“””சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி
இனமென்னும்
ஏமப் புனையைச்
சுடும்””””
என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

--------- இன்னும் வரும்
---------- 16-10-2018
/////////////////////////////////////////////