August 05, 2019

பரம்பொருள்-பதிவு-51


               பரம்பொருள்-பதிவு-51

பதிகம் – 6
"மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆனேறு
ஊரும் அடிகளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“அழகிய மடல்களைக்
கொண்ட தென்னை
மரங்கள் நிறைந்த
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
மாசி மாதத்தில்
பவுர்ணமியோடு கூடிய
மகம் நட்சத்திரம் வரும்
மாசி மகமான புண்ணிய
நாளில் பக்தர்கள் கடலில்
நீராடி சிவபெருமானை
வழிபட்டு கொண்டாடும்
மாசி கடலாட்டு விழாவில்
வலிமை பொருந்திய
காளையின் மேல்
சிவபெருமான் பவனி வந்து
பக்தர்களுக்கு அருள் வழங்கும்
அற்புதக் காட்சியைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 7
" மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழா பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“திருவருள் எழுச்சியை
விளைவிக்கும் திருக்கோயில்
விழாக்கள் இடைவிடாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
வீதிகளைக் கொண்ட
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
பங்குனி மாதத்தில்
உத்திர நட்சத்திரத்தில்
பவுர்ணமி வரும்
பங்குனி உத்திரம்
புண்ணிய நன்னாளில் பக்தர்கள்
பக்தி பரவசம் மேலிட்டு
ஆரவார ஒலியை  எழுப்பி
பக்தர்களால் கொண்டாடப்படும்
பல்வேறு விழாக்களை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 8
"தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“வீரமும் கோபமும் ஒருங்கே
கொண்ட இராவணனுடைய
தோள்களை நெரித்தவனும்
அழகிய திருவடிகளைக்
கொண்டு மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருப்பவனுமாகிய
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
பண்ணோடு பாடக்கூடிய
சப்தரிஷிகள்,தேவர்கள்,
அரம்பையர்கள், அசுரர்கள்,
தானவர்கள், தைத்தியர்கள்,
நாகர்கள், கருடர்கள்,
கிண்ணரர்கள், கிம்புருசர்கள்,,
யட்சகர்கள், வித்தியாதரர்கள்,
அரக்கர்கள், கந்தர்வர்கள்,
சித்தர்கள், சாரணர்கள்,
பூதகணங்கள், பிசாசர்கள்
ஆகிய பதினெட்டு கணத்தினரும்
வணங்கும் சித்திரை அட்டமியில்
கொண்டாடப்படும் விழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை  என்கிறார் “

பதிகம் – 9
" நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
அழகிய தாமரை மலர் மேல்
உறையும் நான்முகனும்,
நாராயணணும் தரிசிக்க
முடியாத சிவபெருமானுடைய
அடி முடிகளை அனைவரும்
தரிசிக்கும் வகையில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
வைகாசி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 10
" உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“உடை அணியாமல் வாழும்
சமணர்கள், உடையைப்
போர்த்திக் கொண்டு
வாழும் கரிய சாக்கியர்கள்
தம் வாய்க்கு வந்ததை
எல்லாம் பேசிக் கொண்டு
திரியும் இந்த மண்ணுலகில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
ஆனி, ஆடி, ஆவணி
ஆகிய மாதங்களில்
சிவபெருமானுக்கு
ஆயிரமாயிரம் ஆதிசைவப்
பெருமக்கள் வந்து ஞானாக்கினி
வளர்த்துச் செய்யப்போகின்ற
கும்பாபிஷேகத்தை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  04-08-2019
//////////////////////////////////////////////////////////




August 04, 2019

HAPPY FRIENDSHIP DAY- 04-08-2019


               HAPPY FRIENDSHIP DAY- 04-08-2019

அன்பிற்கினியவர்களே,


“”””உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு””””

நண்பனுக்கு
துன்பம் வரும்போது
நாம் நண்பனுக்கு
செய்யும் உதவியை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : பிறர் துன்பம்
        போல் கருதி
        உதவி செய்வது

இரண்டு :நம்முடைய
         துன்பம் போல்
         கருதி உதவி
         செய்வது



நாம் அலுவலகத்தில்
வேலை செய்து
கொண்டு இருக்கிறோம்
நம் உறவினர்
ஒருவருக்கு மிகவும்
உடல் நிலை
சரியில்லை
அவரை மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறோம்
என்று நமக்கு
போன் வருகிறது
நாம் சரி
நான் வந்து பார்க்கிறேன்
என்று சொல்லி விட்டு
மிகவும் பொறுமையாக
வேகமாக இல்லாமல்
நிதானமாக வேலை
எல்லாம் முடித்து
விட்டு பொறுமையாக
இரவு சென்று
மருத்துவமனையில்
சேர்த்திருக்கும்
நமது உறவினரை
பார்த்து விட்டு
துன்பத்தை நீக்குவதற்கு
தேவையான நடவடிக்கைகளை
எடுத்து துன்பத்தை
நீக்குகிறோம்

அதைப் போல
நண்பனுக்கு துன்பம்
வரும் போது
நிதானமாகவும்
பொறுமையாகவும்
அலட்சியமாகவும் இருந்து
ஈடுபாடு இல்லாமல்
இருந்து நண்பனுக்கு
வரும் துன்பத்தை
நீக்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு நண்பனுடைய
துன்பத்தை நீக்குவது
பிறர் துன்பம் போல்
கருதி உதவி
செய்வது ஆகும்.

நமக்கு உடல்நிலை
சரியில்லை
என்று மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்கள்
நமக்கு நோய்
வந்து விட்டதே
இதை எப்படி போக்குவது
பணம் எப்படி திரட்டுவது
உதவிக்கு ஆட்களை
எப்படி அழைப்பது
அலுவலகத்திற்கு
விடுப்பு எப்படி எடுப்பது
என்று நமக்கு துன்பம்
வரும் போது நாம்
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாக இருந்து
முழு ஈடுபாட்டுடன்
இருந்து பல்வேறு
செயல்களைச்செய்து
நமக்கு வந்த துன்பத்தை
நீக்குகிறோம்

அதைப்போல்
நண்பனுக்கு துன்பம்
வரும் போது
அந்த துன்பத்தை
நீக்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும் இருந்து
முழுஈடுபாட்டுடன்
இருந்து
செயல்களைச் செய்து
நண்பனுக்கு வரும்
துன்பத்தை நீக்குவது
நம்முடைய துன்பம் போல்
கருதி உதவி
செய்வது ஆகும்

நண்பன் துன்பத்தில்
இருக்கும் போது
பிறர் துன்பம் போல்
கருதி உதவி
செய்வதற்கு மனம்
இருந்தால் போதும்
ஆனால்
நண்பன் துன்பத்தில்
இருக்கும் போது
நம்முடைய துன்பம்
போல் கருதி
உதவி செய்வதற்கு
அன்பும், கருணையும்
வேண்டும்

அன்பும், கருணையும்
யாருடைய உள்ளத்தில்
இருக்கிறதோ
அவரால் மட்டுமே
நண்பன் துன்பப்படும்போது
தன் துன்பம் போல் கருதி
உதவி செய்ய முடியும்

நாம் நான்கு நண்பர்களுடன்
பேசிக் கொண்டு
இருக்கிறோம்
அப்பொழுது
நம் உடலிலிருந்து உடை
நழுவினால் எப்படி கை
உடனே சென்று
அதை பிடித்து
நம்முடைய மானத்தை
காப்பாற்ற முயற்சி
செய்கிறதோ
அதைப்போல நண்பனுக்கு
துன்பம் வரும்போது
நமக்கு ஒரு துன்பம்
வரும் போது எப்படி
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும்
முழுஈடுபாட்டுன்
செயல்களைச் செய்து
அதை நீக்குவதற்கு
தேவையானநடவடிக்கைகளை
மேற்கொண்டு அதை
நீக்கினோமோ
அதைப்போல
நண்பன் கஷ்டத்தில்
இருக்கிறான்
துன்பப்படுகிறான்
என்பதை கேள்விப்
படும்போது
விரைவாகவும்
சுறுசுறுப்பாகவும்
கவனமாகவும் இருந்து
முழு ஈடுபாட்டுடன்
செயல்களைச் செய்து
துன்பத்தை நீக்குவதற்கான
நடவடிக்கைகளை
மேற்கொண்டு அதை
நீக்க வேண்டும்
என்பதைத் தான்

“”””உடுக்கை இழந்தவன்
கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம்
நட்பு”””””

என்ற திருக்குறள்
மூலம் திருவள்ளுவர்
விளக்குகிறார்.
  
----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்
-----------04-08-2019
///////////////////////////////////////////////////////////





August 03, 2019

பரம்பொருள்-பதிவு-50


            பரம்பொருள்-பதிவு-50

 “இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்புவதற்காக
திருஞான சம்பந்தர்
பதிகம் பாடத் தொடங்கினார் “

பதிகம் – 1
“மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“ மயிலாகித் தவம்
செய்த உமாதேவியாரை
ஆட்கொண்டு
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து
அருள் புரிந்து
கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
புரட்டாசி மாதத்தில்
கொண்டாடப்படும்
திருநாளான
சிவபெருமானுடைய
அடியவர்களுக்கு
அமுதூட்டும் திருநாளைக்
காணாமல் போனாயோ ?
பூம்பாவை என்று
திருஞான சம்பந்தர்
முதல் பதிகத்தை பாடி
முடித்த பின் பூம்பாவை
உருவம் பெற்றாள் “

பதிகம் – 2
“மைப்பயந்த ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண
விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே
போதியோ பூம்பாவாய் “

பொருள் விளக்கம் :
“மைப்பூசிய அழகிய
கண்களை உடைய
மகளிர் வாழும்
மாமயிலையில்
கேட்டவர்களுக்கு எல்லாம்
கைமேல் பலன் தந்து
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் திருநீற்றை
அணிந்தவனாய்
அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
ஐப்பசி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஓண விழாவினையும்
சிவபெருமானால்
வழங்கப்படும்
அருளாசியினையும்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார்”

பதிகம் – 3
“வளைக்கை மடநல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான்
தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“அழகிய வளையல்களை
அணிந்து கொண்டு
காண்போரை
கவர்ந்திழுத்துக் கொண்டு
அழகிய மகளிர் வாழ்ந்து
கொண்டு இருக்கும்
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
கார்த்திகை மாதத்தில்
கொண்டாடப்படும்
கார்த்திகைத் திருநாளில்
பெண்கள் விளக்குகளை
ஏற்றி வைத்து
ஏற்றி வைத்த விளக்குகளை
வரிசையாக அடுக்கி
வைத்து கொண்டாடும்
அழகான காட்சியைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 4
“ஊர்திரை வேலை
யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார்
கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக்
கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“அழகிய அலைகள்
கொஞ்சி விளையாடும்
மாமயிலையில்
கூர்மையான வேலைக்
கொண்டு மீன்களைக்
கொன்று வெற்றிகாணும்
நெய்தற்சேரியில்
மழைவளம் மிகுந்ததால்
வளர்ந்த சோலைகள்
நிறைந்த கபாலீச்சரம்
என்னும் கோயிலில்
அமர்ந்து அருள் செய்து
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
மார்கழி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஆதிரை நாளைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார்”

பதிகம் – 5
“மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய்”

பொருள் விளக்கம் :
“மைப்பூசிய அழகிய
கண்களை உடைய
அழகிய மகளிர்
வாழும் மாமயிலையில்
திருநீறை அணிந்து
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து
அருள் செய்து
கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
தை மாதத்தில்
கொண்டாடப்படும்
தைப்பூச திருநாளைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  03-08-2019
//////////////////////////////////////////////////////////