October 16, 2019

பரம்பொருள்-பதிவு-72


            பரம்பொருள்-பதிவு-72

நாரதர் :
"திருமணமான பெண்
எவ்வாறு நடந்து
கொள்ள வேண்டும்
என்பதற்கான விதிகள்
வரையறுக்கப்பட்டுள்ளன"

"திருமணம் முடித்து
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு
வரும் பெண் ;
புகுந்த வீட்டின்
பழக்க வழக்கங்களுடன்
தன்னை ஒன்றிணைத்து ;
புகுந்த வீட்டின்
பழக்க வழக்கங்களுடன்
தன்னை ஐக்கியப்படுத்திக்
கொள்ள வேண்டும் ;
பிறந்த வீட்டின் பெருமைகளை
பிறருடைய முகம்
சுளிக்கும்படி
பேசித் திரியக்கூடாது ;"

"திருமணம் முடித்து
வரும் பெண்
கணவனுடைய மனதை
அறிந்து அவன் எண்ணும்
எண்ணத்தின்படி
நடக்க வேண்டும் ;
கணவனுடைய மனதில்
உள்ள எண்ணத்திற்கு
மாறாக நடக்கக்கூடாது;"

"அதிகாலை கணவன் விழித்து
எழுவதற்கு முன் எழுந்து  ;
கணவன் அடிதொழுது ;
பின்பு இறைவன்
மலரடி தொழுது ;
அன்றாடக் கடமைகளை
முடித்து கணவன் வேலைக்கு
செல்லும் முன்னர்
அவன் விருப்பப்படும் உணவை
அவனுக்கு பரிமாறி ;
அவன் சாப்பிடும் வரை
அருகில் இருந்து கவனித்துக்
கொள்ள வேண்டும் ;"

"கணவன் வேலைக்கு
சென்றவுடன் வீட்டில் செய்ய
வேண்டிய வேலையையும்;
குடும்பத்தை வழி நடத்துவதற்கு
செய்ய வேண்டிய வேலையையும்
செய்ய வேண்டும்;"

"மாலை கணவன் வரும்
நேரம் அறிந்து ;
வாசலில் அமர்ந்து
வழிமேல் விழி வைத்து
கணவன் வருகைக்காக
காத்திருக்க வேண்டும் ;

"வேலை முடித்து வரும்
கணவன் மனம் வருத்தப்படாமல்
நடந்து கொள்ள வேண்டும் ;
கணவனை உறங்க வைத்த
பிறகே உறங்க வேண்டும் ;"

"புகுந்த வீட்டில் கணவனுக்கோ?
கணவனுடைய
உறவினர்களுக்கோ ?
கணவனைச்
சார்ந்தவர்களுக்கோ ?
பிறந்த வீட்டினிலோ
பிறந்த வீட்டின்
உறவினர்களாலோ ?
பிறந்த வீட்டைச்
சார்ந்தவர்களாலோ ?
ஏதேனும் அவமானமோ?
அல்லது
பிரச்சினையோ ஏற்பட்டால்
திருமணம் செய்து
முடித்து வந்த பெண் ;
பிறந்த வீட்டை எதிர்க்க
தயங்கக்கூடாது;
அவர்கள் உறவை
அறுக்கக்கூடிய சூழ்நிலை
வந்தாலும் புகுந்த
வீட்டின் மானம் காக்க
உறவை அறுக்க
தயங்கக்கூடாது ;"

"கணவனுடைய
அனுமதி இல்லாமல் ;
கணவனுக்கு தெரியாமல் ;
பிறந்த வீட்டிற்கு
சென்று வருவதோ?
பிறந்த வீட்டில்
உள்ளவர்களுடன் உறவுமுறை
கொண்டாடுவதோ?
பேச்சு வார்த்தையோ?
கொடுக்கல் வாங்கலோ?
வைத்துக் கொளளக் கூடாது"

"எந்த விஷயத்தை
பின்பற்ற வேண்டும் என்று
கணவன் சொல்கிறானோ?
அந்த விஷயத்தைத் தான்
பின்பற்ற வேண்டும்;
அவ்வாறு பின்பற்றாமல்
கணவனுக்கு தெரியாமல்
கணவன் வணங்கும்
தெய்வத்தை வணங்காமல்
மறைமுகமாக வேறு
கடவுளை வணங்குவது ;
மறைமுகமாக
வேண்டாத நண்பர்களுடன்
தொடர்பு கொள்வது ;
மறைமுகமாக பணத்தை
சேமித்து வைத்து
தேவைப்படுபவர்களுக்கு
கொடுப்பது; போன்ற
மறைமுகமான செயல்களைச்
செய்யக் கூடாது;"

"எளிமையாக சொல்ல
வேண்டுமானால்
திருமணம் முடித்து
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு
வரும் பெண்
கணவனுடைய மனதை
அறிந்து அவன் எண்ணும்
எண்ணத்தின்படி
நடக்க வேண்டும் ;
கணவனுடைய மனதில்
உள்ள எண்ணத்திற்கு
மாறாக நடக்கக்கூடாது;"

"ஒரு கணவனை மட்டுமே
திருமணம் செய்து
கொண்டு வரும் பெண்களே
தன்னுடைய
கணவனின் தேவையை
பூர்த்தி செய்ய முடியாமல்
அவதிப் படும்போது……………?
ஐவரை மணந்த திரௌபதியே
எப்படி பஞ்ச பாண்டவர்களின்
தேவையை அறிந்து
அவர்கள் மனம் அறிந்து
அவர்களுடைய மனம்
வருத்தப்படாமல் உன்னால்
எப்படி நடந்து
கொள்ள முடியும் "

"ஐவருக்கும் மனவருத்தமோ
கோபமோ இல்லாமல்
எந்தவிதமான பிரச்சினையும்
இல்லாமல் ஐவருடைய
தேவையையும்
பூர்த்தி செய்வது என்பது
ஒரு மனைவியால்
இயலாத காரியம் ;
ஐவருக்கும் உனக்கும்
சண்டையும் குழப்பமும்
அமைதியின்மையும் ஏற்படத்
தான் வாய்ப்பு இருக்கிறது"

"பிரச்சினைக்குரிய இந்த
விஷயத்தைப் பற்றி
பஞ்ச பாண்டவர்களாகிய
நீங்களும் திரௌபதியும்
சிந்தித்து பார்த்தீர்களா
என்று பேச்சை
நிறுத்தினார் நாரதர்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------16-10-2019
//////////////////////////////////////////

October 15, 2019

பரம்பொருள்-பதிவு-71


            பரம்பொருள்-பதிவு-71

“தங்களை நோக்கி
வந்து கொண்டிருந்த
நாரதரை நேர் எதிர் சென்று
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் வரவேற்றனர் “

தர்மர் :
"தேவ ரிஷியே தங்கள்
வரவு நல்வரவாகுக !

தங்கள் வரவால் எங்கள்
நகரம் பெருமையடைந்தது !

எங்கள் மாளிகை
புனிதமடைந்தது !

எங்களை
ஆசிர்வதியுங்கள் !

(என்று பஞ்ச
பாண்டவர்களும், திரௌபதியும்
நாரதர் காலில் விழுந்து
நாரதரை வணங்கினர்)

"எல்லா நலமும் பெற்று
வளமுடன் வாழ்க !
என்று பஞ்ச
பாண்டவர்களையும்
திரௌபதியையும்
நாரதர் வாழ்த்தினார் "

"பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும்
ஒன்றாக இணைந்து
நாரதரை ரத்தின
சிம்மாசனத்தில்
அமர வைத்து
நாரதருக்கு
ராஜ உபசாரம் அளித்து ;
நாரதருக்கு செய்ய
வேண்டிய அனைத்து
பணிவிடைகளையும்
குறைவில்லாமல் செய்து ;
தங்களுக்கு அருளுரை
வழங்குமாறு கேட்டுக்
கொண்டதற்கிணங்க
நாரதர் பேசத்
தொடங்கினார் ”

நாரதர் ;
" ஒரு குடும்பத்தின்
தலைமகன் நல்ல
குணநலன்களைக்
கொண்டவனாக ;
அனைவரையும் அனுசரித்துச்
செல்லக் கூடியவனாக ;
குடும்பத்தின் கஷ்டம்
நஷ்டம் உணர்ந்து
செயல்படுபவனாக ;
எந்தவிதமான பிரச்சினை
வந்தாலும் சமாளித்து
குடும்பத்தை வழிநடத்திச்
செல்லக் கூடியவனாக ;
பெரியோர்களை மதித்து
பெரியோர் சொல் கேட்டு
பெரியோர்கள் காட்டும்
நல்வழி நடந்து செல்பவனாக ;
இருந்தால் மட்டுமே
அக்குடும்பமும்
அக்குடும்பத்தில் உள்ள
அனைவரும் எந்தவிதமான
குறைவும், மனவருத்தமும்
இல்லாமல் மகிழ்ச்சியாக
இருக்க முடியும் "

"குடும்பத்தில் உள்ள
தலைமகன் நல்ல குணம்
இல்லாதவனாக இருந்தாலோ ?
தனக்கு தோன்றியதை
செய்து கொண்டு சுற்றித்
திரிந்து கொண்டு இருந்தாலோ ?
குடும்பக் கஷ்டம் தெரியாமல்
கவலைப்படாமல் அலைந்து
திரிந்து கொண்டிருந்தாலோ ?
ஊதாரித் தனமாக சுற்றிக்
கொண்டிருந்தாலோ ?
சம்பாதிக்காமல் வீண்
விரயம் செய்து
கொண்டிருந்தாலோ ?
பெரியோர்கள் சொல்
கேட்காமல் இருந்தாலோ?
பெரியோர்கள் வார்த்தைகளை
மதிக்காமல் இருந்தாலோ ?
பெரியோர் காட்டும் நல்வழியில்
நடக்காமல் இருந்தாலோ ?
அத்தலைமகன்
மட்டுமல்ல அக்குடும்பமும்
கஷ்டப்படத் தான் நேரும்"

"பஞ்சபாண்டவர்களின்
தலைமகன் தர்மர்
நல்ல குணநலன்களைக்
கொண்டவனாக
இருக்கின்ற காரணத்தினால்,
பாண்டவர்களாகிய
நீங்களும் உங்களைச்
சார்ந்தவர்களும் பல்வேறு
துன்பங்களை அனுபவித்தாலும் ;
கஷ்டத்தில் கவலையுற்றாலும் ;
மன அமைதியுடன்
இருக்கிறீர்கள் ;"

"கௌரவர்களின்
தலைவமகன்
துரியோதனன்
நல்ல குணநலன்கள்
இல்லாமல் இருக்கின்ற
காரணத்தினால் கௌரவர்களும்
அவரைச் சார்ந்தவர்களும்
அனைத்து செல்வங்களை
வைத்திருந்தும் மன அமைதி
இல்லாமல் தவிக்கிறார்கள்"

"ஒரு குடும்பத்தின்
தலைமகன் நல்ல
குணநலன்களைக்
கொண்டவனாக இருப்பது
எவ்வளவு முக்கியம் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்"

"அதைப் போல ஒரு
நாட்டின் தலைமகனான
அரசனும் நல்லவனாக ;
மக்கள் மனம்
அறிந்து நடப்பவனாக ;
மக்கள் குறைகளை கேட்டு
அதை நிவர்த்தி
செய்பவனாக ;
இருந்தால் மட்டுமே
ஒரு நாட்டையும் ;
நாட்டிலுள்ள மக்களையும்
எந்தவிதமான மன
குறையும் இல்லாமல்
மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள முடியும் ;"

"அந்த விதத்தில்
குடும்பத்தின் தலைமகனாக ;
நாட்டின் தலைவனாக ;
தர்மத்தின் காவலனான
தர்மரே இருக்கும் போது
பாண்டவர்களுக்கும்
இந்திரபிரஸ்தத்திற்கும்
என்ன குறை
ஏற்படப்போகிறது
என்று சொல்லிக் கொண்டே
திரௌபதியை நோக்கி
பேசத் தொடங்கினார்
நாரதர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------15-10-2019
//////////////////////////////////////////


October 13, 2019

பரம்பொருள்-பதிவு-70


             பரம்பொருள்-பதிவு-70

“செயலுக்குரிய
விளைவானது
என்னவாக இருக்கும்
என்று அனைவரும்
யோசித்துக்
கொண்டிருக்கும்
சூழ்நிலையில் அந்த
செயலைச் செய்வதற்குரிய
சரியான நபர்களைத்
தேர்ந்தெடுத்து
அந்த நபர்களை வைத்து
அந்த செயலைச்
செய்ய வைத்து
செயலுக்குரிய முடிவை
செயலைச் செய்த
நபர்களுக்கு
மட்டுமில்லாமல்
உலகில் உள்ள
அனைவருக்கும்
தெரியப்படுத்தும் வகையில்
மிகப் பெரிய வேலையை
செய்பவர் தான் நாரதர்”

“ஞானப் பழத்தை
வெட்டி பகிர்ந்து
சாப்பிடக்கூடாது
என்று நாரதர் நிபந்தனை
விதித்திருந்த காரணத்தினால்
சிவபெருமான்
விநாயகருக்கும் முருகருக்கும்
ஒரு போட்டி
வைத்து உலகத்தை
யார் முதலில்
சுற்றி வருகிறாரோ
அவருக்கே ஞானப்பழம்
வழங்கப்படும் என்று
அறிவித்ததால்
சிவனும் பார்வதியும்
சேர்ந்ததே உலகம்
அவர்களை சுற்றினாலே
உலகத்தை சுற்றிய
மாதிரி என்று
சிவனையும் பார்வதியையும்
சுற்றி வந்து
ஞானப்பழத்தை
பெற்றார் விநாயகர்”

“உலகம் முழுவதும்
சற்றி வந்தும் முருகரால்
ஞானப்பழத்தைப்
பெற முடியவில்லை”

“விநாயகர் படைத்தவனுக்குள்
படைப்புகளைப் பார்த்தார்”

“முருகர் படைப்புகளுக்குள்
படைத்தவனைப் பார்த்தார்”

“படைத்தவனுக்குள்
படைப்புகள்
அனைத்தும் இருக்கிறது
என்று உணர்ந்தவர்
விநாயகர் ;
படைத்தவனை வணங்கினால்
படைப்புகள் அனைத்தையும்
வணங்கியதற்குச் சமம் ;
படைத்தவனை சுற்றினால்
படைப்புகள் அனைத்தையும்
சுற்றியதற்குச் சமம் ;
என்று உணர்ந்து
படைப்புகளுக்குக் காரணமான
படைத்தவர்களான
சிவனையும் பார்வதியையும்
சுற்றி வந்து
ஞானப்பழத்தைப்
பெற்றார் விநாயகர்”

“படைப்புகளுக்குள்
படைத்தவனைப் பார்த்தார்
முருகர் ;
படைப்புகளை வணங்கினால்
படைத்தவனை
வணங்கியதற்குச் சமம் ;
படைப்புகளைச் சுற்றினால்
படைத்தவனைச்
சுற்றியதற்குச் சமம் ;
என்ற காரணத்தினால்
இந்த உலகம் முழுவதும்
சுற்றி வந்தார் முருகர்”

“படைத்தவனிலிருந்து தான்
அனைத்து படைப்புகளும்
தோன்றி இருக்கின்றன ;
படைத்தவனுக்குள் தான்
அனைத்து படைப்புகளும்
இருக்கின்றன ;
படைத்தவன் தான்
அனைத்து
படைப்புகளையும் தாங்கி
படைப்புகளை
வழி நடத்துகிறான் ;
என்று உணர்வது
உயர்ந்த நிலையான
முக்தி நிலை ;
இந்த நிலையில்
இருந்தவர் தான்
விநாயகர்”

“அனைத்து
படைப்புகளுக்குள்ளும்
படைத்தவன் இருக்கிறான் ;
படைப்புகளுக்குள்
படைத்தவன் இல்லை
என்றால் படைப்புகளால்
இயங்க முடியாது ;
படைப்புகள் தோன்ற
படைத்தவன் தேவை ;
என்று உணர்வது
ஞான நிலை இதனால்
தான் முருகர்
ஞானக் கடவுள்”

“படைத்தவனுக்குள்
படைப்புகளைப் பார்த்து
முக்தி நிலையில்
இருந்ததால் விநாயகர்
வெற்றி பெற்றார்”

“படைப்புகளுக்குள்
படைத்தவனைப் பார்த்து
ஞானநிலையில் இருந்ததால்
முருகரால் வெற்றி
பெற முடியவில்லை”

“நாரதர்
சிவன் பார்வதி விநாயகர்,
முருகர் ஔவையார்
ஆகியோரை ஒரு செயலில்
ஈடுபடவைத்து
ஞான நிலையை விட
முக்தி நிலையே
உயர்ந்த நிலை என்பதை
இந்த உலகத்திற்கு
எடுத்துக் காட்ட வேண்டும்
என்ற காரணத்திற்காக
நாரதர் நடத்திய
செயல் தான்
ஞானப்பழக்கதை”

“இவ்வாறாகத்தான்
உயர்ந்த உண்மைகளை
உலகத்திற்கு
உணர்த்துவதற்காக
செயலுக்குரிய
நபர்களைத் தேர்ந்தெடுத்து
செயல்களைச் செய்ய
வைப்பவர் தான் நாரதர்”

“இத்தகைய சிறப்பு
மிக்க நாரதர் தான்
பஞ்ச பாண்டவர்களை
நோக்கி நடந்து
சென்று கொண்டிருந்தார்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------13-10-2019
//////////////////////////////////////////