December 23, 2019

பரம்பொருள்-பதிவு-104


          பரம்பொருள்-பதிவு-104

(தனி அறைக்குள்
துரியோதனனும்
சகாதேவனும்
இருக்கிறார்கள்.

துரியோதனன்
பேசத் தொடங்கினான்)

துரியோதனன் :
"சகாதேவா நீ
பல சாஸ்திரங்களையும்
கற்றுத் தேர்ந்தவன் ;
உனக்கு தெரியாதது
சாஸ்திரங்களில்
எதுவும் இல்லை ;
என் மனதில்
எழுந்துள்ள சில
கேள்விகளுக்கு
சோதிட
சாஸ்திரத்தின்படி
பதில்
பெறுவதற்காக
இங்கு வந்திருக்கிறேன்
தம்பி ! "

"என்னுடைய மனம்
திருப்தி அடையும்
வகையில்
என்னுடைய
கேள்விகளுக்கு பதில்
சொல்வாயா ? "

சகாதேவன் :
"சோதிட சாஸ்திரம்
என்ன சொல்கிறதோ
அதை அப்படியே
சொல்கிறேன் ;
தெரிந்ததை
மறைக்காமல்
சொல்கிறேன்
அண்ணா ;"

துரியோதனன் :
"நடக்கவிருக்கும்
போரில் நான்
வெற்றி பெற
வேண்டும்
என்பதற்காக
களப்பலி கொடுக்க
தீர்மானம்
செய்திருக்கிறேன் ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
எந்த நாள்
என்று எனக்கு
சொல்ல வேண்டும் ;"

சகாதேவன் :
(சோதிட
நூல்களை
ஆராய்ந்து
பார்க்கிறான்
சகாதேவன்

பிறகு பேச
ஆரம்பிக்கிறான்)

"வருகின்ற
அமாவாசை
தினமே
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
அண்ணா ! "

துரியோதனன் :
"அன்றைய தினத்தில்
களப்பலி கொடுத்தால்
வெற்றி நிச்சயம்
தானே தம்பி ! "

சகாதேவன் :
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பவர்
தான் வெற்றி
பெறுவார் அண்ணா !"

"அன்றைய
தினத்தில் களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும்
வெற்றி கொள்ள
முடியாது அண்ணா ! "

"களப்பலி
கொடுத்தவர்களை
எதிர்த்து நின்று
யார் போரிட்டாலும்
அவர்கள்
தோல்வியைத் தான்
தழுவுவார்கள்
என்பது உறுதி
அண்ணா !"

துரியோதனன் :
"மிக்க மகிழ்ச்சி
தம்பி !
களப்பலியாகக்
கூடியவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டிருக்க
வேண்டும்
என்பதையும் ;

"களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவர்கள்
இந்த உலகத்தில்
எத்தனை பேர்
இருக்கிறார்கள்
என்பதையும்  :

"அவர்களுடைய
பெயர்கள் என்ன
என்பதையும்
எனக்கு சொல்ல
வேண்டும் தம்பி !"

சகாதேவன் :
"ஒருவரை களப்பலி
கொடுக்க வேண்டும்
என்றால்
களப்பலியாகக்
கூடியவர்  
32 லட்சணங்கள்
உள்ளவராக
இருக்க வேண்டும் ;
எதிர்ரோமம்
படைத்தவராக
இருக்க வேண்டும். ;"

"இத்தகைய
இரண்டு  
தன்மைகளையும்
கொண்டவர் யார்
இருக்கிறாரோ
அவரைத் தான்
காளி தேவிக்கு
முன்பு களப்பலி
கொடுக்க வேண்டும் "

"களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
வாய்ந்தவர்கள்
மொத்தமே மூன்று
பேர்கள் தான்
ஈரேழுலோகத்திலும்
உள்ளனர் அண்ணா !"

துரியோதனன் :
" ஈரேழுலோகத்திலும்
மொத்தமே
மூன்று பேர்கள்
மட்டும் தான்
உள்ளனரா ?"

சகாதேவன் :
"ஆமாம் அண்ணா ! "

துரியோதனன் :
"யார் அவர்கள்
அவர்களுடைய
பெயர்கள்
என்ன தம்பி ! "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------  23-12-2019
//////////////////////////////////////////

December 22, 2019

பரம்பொருள்-பதிவு-103


           பரம்பொருள்-பதிவு-103

(பாண்டவர்களின்
மாளிகைக்குள்
நுழைகிறான்
துரியோதனன் ;

மாளிகைக்குள்
பஞ்ச பாண்டவர்கள்
மற்றும்
கிருஷ்ணன்
இருந்தனர் ;

கிருஷ்ணன்
துரியோதனனை
தடுத்தி
நிறுத்தி பேசத்
தொடங்கினான் ; )

கிருஷ்ணன்  :
“வழி தவறி வந்து
விட்டாயா
துரியோதனா ? “

துரியோதனன் :
“கிருஷ்ணா நீ !
இங்கு தான்
இருக்கிறாயா ?”

கிருஷ்ணன் :
“நான் எல்லா
இடத்திலும் இருந்து
கொண்டு தான்
இருக்கிறேன்
துரியோதனா ?
நீ தான் என்னை
கவனிப்பதே
இல்லை ;”

துரியோதனன் :
“தேவையில்லாத
விஷயங்களில்
எல்லாம்
நான் கவனம்
செலுத்துவதில்லை
கிருஷ்ணா “

கிருஷ்ணா :
“எது தேவையுள்ள
விஷயம்   ;
எது
தேவையில்லாத
விஷயம் ; என்பது
உனக்கு
தெரியாத
காரணத்தினால் தான்
தேவையில்லாத
விஷயங்களைச்
செய்து
தேவையற்ற
பிரச்சினைகளில்
மாட்டிக்
கொள்கிறாய்
துரியோதனா “

துரியோதனன் :
“கிருஷ்ணா உன்
அறிவுரைகளை
கேட்பதற்காக
நான் இங்கு
வரவில்லை ;
எனக்கு நிறைய
வேலை இருக்கிறது ;
யாரேனும்
வேலையில்லாமல்
இருந்தால்
அவர்களிடம்
சென்று உன்
அறிவுரைகளை
வழங்கு “

கிருஷ்ணன் :
“நீ பாண்டவர்களைத்
தானே பார்க்க
வந்திருக்கிறாய்
துரியோதனா ?”

துரியோதனன் :
“ஆமாம்”

கிருஷ்ணன் :
“நானும் அவர்களில்
ஒருவன் தான்”

துரியோதனன் :
“பாண்டவர்கள்
ஐவர் தானே”

கிருஷ்ணன் :
“யார் என்னை
கள்ளம் கபடம்
இல்லாமல்
மனதார
நேசிக்கிறார்களோ ?
அவர்களில்
நானும் ஒருவன்  ;
அதனால் தான்
பாண்டவர்களில்
நானும் ஒருவன்
என்று சொன்னேன் ;”

துரியோதனன் :
(துரியோதனனுக்கு
கோபம் வந்தது
கோபத்தை
அடக்கிக் கொண்டு
சாகாதேவனை
நோக்கி பேசத்
தொடங்கினான்)

“சகாதேவா
நான் உன்னிடம்
கொஞ்சம்
தனிமையில் பேச
வேண்டும்
வருகிறாயா?”

சகாதேவன் :
“வாருங்கள்
அண்ணா”

(என்று சொல்லிக்
கொண்டே
துரியோதனனை
தனி அறைக்குள்
அழைத்துக்
கொண்டு
சென்றான்
சகாதேவன்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 22-12-2019
//////////////////////////////////////////

December 20, 2019

பரம்பொருள்-பதிவு-102

                  பரம்பொருள்-பதிவு-102

சகுனி :
"சகாதேவன் "

துரியோதனன் :
"பாண்டவர்களில்
ஒருவனா? "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"நம்முடைய எதிரிகளில்
ஒருவனான சகாதேவனா "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"பாவம்
அமைதியானவன்  ;
ஒன்றும் அறியாதவன் ;
பரிதாபத்திற்குரியவன் ; "

சகுனி :
"எதிரியின் திறமையை
குறைவாக மதிப்பீடு செய்யக்
கூடாது மருமகனே ! "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு
செய்யத் தெரியாதவன்
எதிரியிடம் தோற்கத்
தான் வேண்டும் "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு செய்யத்
தெரிந்தவனால் மட்டுமே
எதிரியை வெல்ல முடியும்
என்பதை நினைவில்
வைத்துக் கொள் மருமகனே ! "

"சகாதேவன்
சாதாரணமான
ஆள் இல்லை  ;
சோதிட சாஸ்திரத்தில்
ஆதி முதல் அந்தம் வரை
அறிந்து வைத்திருப்பவன் ;
சோதிட சாஸ்திரத்தின்
அனைத்து சூட்சும
விஷயங்களையும்
ஐயமின்றி கற்றுத்
தேர்ந்தவன் ;
திரிகால ஞானத்தை
முறைப்படி பயன்படுத்தும்
முறை அறிந்தவன் ;

"உலகிலுள்ள அனைத்து
உயிர்களுக்கும்
இறந்த காலம் எதிர்காலம்
ஆகியவற்றை சோதிடத்தின்
மூலம் துல்லியமாகக்
கணித்து சொல்லக் கூடிய
திறமை இந்த உலகத்தில்
சகாதேவனைத் தவிர
வேறு யாருக்கும் இல்லை"

"களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாள் எந்த
நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதியான
ஆள் யார் என்றும் ;
சகாதேவன் குறித்து
கொடுத்து அதை நாம்
செயல்படுத்தி விட்டோம்
என்றால் மூவுலகமும்
சேர்ந்து வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
மூம்மூர்த்திகளே
ஒன்றாக வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
நம்மை யாராலும்
தோற்கடிக்க முடியாது
மருமகனே !"

"வெற்றி நமக்குத் தான் !"

துரியோதனன் :
"ஆனால் சகாதேவன்
எதிரியாயிற்றே  !"

"அவன் எப்படி நாம்
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
குறித்துக் கொடுப்பான் "

"அப்படியே குறித்து
கொடுத்தாலும்
உண்மையைத் தான்
சொல்வான் என்பதை
நாம் எப்படி நம்புவது : "

சகுனி :
"சோதிட சாஸ்திரத்தில்
முக்கியமான இரண்டு
விதிகள் இருக்கிறது
மருமகனே ! "

" சோதிடம் பார்க்க
வருபவர் எதிரியாக
இருந்தாலும் அவர்
கேட்கும் கேள்விகளுக்கு
உண்மையை மறைக்காமல்
சொல்ல வேண்டும்
என்பது முதல்விதி "

"அதைப்போல சோதிடம்
பார்ப்பவர் சோதிடத்தை
யாருக்கு பார்க்கிறாரோ
அவரைப் பற்றிய
தகவல்களை யார்
கேட்டாலும் சொல்லக்
கூடாது என்பது
இரண்டாவது விதி "

"இந்த இரண்டு
விதிகளையும் உண்மையாக
யார் பின்பற்றுகிறாரோ
அவர் தான் சோதிட
சாஸ்திரம் அறிந்த
உண்மையான சோதிடர்  "

"இந்த இரண்டு
விதிகளையும் உயிரென
கடைபிடிப்பவன் சகாதேவன் "

"சகாதேவன்
எதிரியாயிற்றே என்று
நினைக்காமல் சகாதேவனை
நேரில் போய் சந்தித்து
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
கேட்டு அறிந்து கொண்டு
வா மருமகனே ! "

துரியோதனன் :
"அப்படியே ஆகட்டும்
மாமா "

(துரியோதனன்
சகாதேவனை
சந்திப்பதற்காக
செல்கிறான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 20-12-2019
//////////////////////////////////////////

December 18, 2019

பரம்பொருள்-பதிவு-101


           பரம்பொருள்-பதிவு-101

(அரண்மனைக்குள்
உள்ள ஒரு
அறையில் சகுனி
தீவிரமான சிந்தனையில்
ஆழ்ந்து இருக்கும்
போது துரியோதனன்
உள்ளே நுழைகிறான்)

துரியோதனன்  :
“மாமா ! எதைப் பற்றி
தாங்கள் தீவிரமாக
சிந்தித்துக்
கொண்டிருக்கிறீர்கள் “

சகுனி :
“போரில் எப்படி
வெற்றி பெறுவது
என்பதைப் பற்றி
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்
மருமகனே ! “

துரியோதனன் :
“இதில் யோசிக்க
வேண்டியது என்ன
இருக்கிறது மாமா !
போரில் வெற்றி
பெறப்போவது
நாம் தானே ! “

சகுனி :
“எதையுமே
சாதாரணமாக
எடுத்துக் கொள்ளக்
கூடாது மருமகனே  !

“மாயங்கள் செய்வதில்
வல்லவனும் ;
சூழ்ச்சி வலை
பின்னுவதில் திறமை
படைத்தவனும் ;
கண்கட்டு வித்தை
காட்டுவதில்
கை தேர்ந்தவனும் ;
ஏமாற்றுச் செயல்கள்
புரிவதில்
தன்னிகரற்றவனும் ;
கபட வேடதாரியுமான
கிருஷ்ணன்
பாண்டவர்கள் பக்கம்
இருக்கும் வரை
நாம் எதையுமே
சாதாரணமாக
எடுத்துக்
கொள்ளக்கூடாது
மருமகனே ! “

“பாண்டவர்களை
வெற்றி பெறச்
செய்வதற்கு எத்தகைய
குறுக்கு வழிகளையும்
கையாள்வான் ;
அந்த குறுக்கு
புத்திக்கார
கிருஷ்ணன் ;
நாம் அதற்கு
இடம் கொடுக்கவே
கூடாது மருமகனே ! “.

துரியோதனன் :
“என்ன செய்ய
வேண்டும்
என்று சொல்ல
வருகிறீர்கள் மாமா ! “

சகுனி :
“நாம் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்றால்
கண்டிப்பாக
களப்பலி கொடுக்க
வேண்டும்
என்பதை மறந்து
விட்டாயா மருமகனே ! “

துரியோதனன் :
“மறக்கவில்லை
மாமா !
களப்பலி
கொடுப்பதைப் பற்றி
பேசத் தான்
நான் உங்களிடம்
வந்தேன் “

சகுனி :
“ களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும் வெல்ல
முடியாது என்ற
விவரம்
உனக்கு தெரியுமா ? ”
மருமகனே !”

துரியோதனன் :
“தெரியும் மாமா ! “

சகுனி :
“போரில் நாம்
வெல்வதற்கு
களப்பலி கொடுக்க
வேண்டிய நாள்
எந்த நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்
யார் என்றும் ;
அறிந்து
கொள்ள வேண்டும்
மருமகனே ! “

துரியோதனன் :
“இதனை
துல்லியமாகக்
கணித்து சொல்லக்
கூடிய
சோதிட சாஸ்திரம்
தெரிந்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள்
மாமா ! “

சகுனி :
“ஒருவன்
இருக்கிறான்
மருமகனே ! “

துரியோதனன் :
“யார் மாமா………….?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 18-12-2019
//////////////////////////////////////////