February 10, 2020

பரம்பொருள்-பதிவு-127


             பரம்பொருள்-பதிவு-127

உலூபி :
“உண்மையாகவே
நீங்கள் நல்லது
செய்வதற்கான
முயற்சியை எடுத்து
இருப்பீர்களேயானால்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்காமல்
இருப்பதற்குரிய
அனைத்து
முயற்சிகளையும்
செய்து இருப்பீர்கள் ;
ஆனால்
நீங்கள் அவ்வாறு
செய்யாமல்
துரியோதனன் அரவானைக்
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய
அனைத்து
முயற்சிகளையும் செய்து
கொண்டிருக்கிறீர்கள் “

“நீங்கள் செய்யும்
செயல்களைப்
பார்த்தால் நல்லது
செய்வதற்கான
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கிறீர்கள்
என்று எப்படி
சொல்ல முடியும் “

கிருஷ்ணன்  :
“துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
அரவான் வாக்கு
கொடுத்து விட்டான் “

“அரவான்
துரியோதனனுக்கு
கொடுத்த வாக்கை
மீற முடியாது “

“அரவான் கண்டிப்பாக
களப்பலியாகத்
தான் வேண்டும் “

“அரவான் களப்பலியாவதை
யாராலும் தடுக்க முடியாது “

“அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியானால்
இந்த உலகத்தில்
நல்ல செயல்கள்
நடைபெறாது  
வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
நல்லவர்கள் வாழ
முடியாத சூழ்நிலை
தான் ஏற்படும்;
தர்மம் அழிந்து அதர்மம்
தலைவிரித்தாடும்
அரவானின் தியாகம்
வீணாகிப் போய் விடும்;
அரவானுக்கு கெட்ட
பெயர் ஏற்படும் “

“ஆனால் அரவான்
பாண்டவர்களுக்காக
களப்பலியானால்
இந்த உலகத்தில்
நல்ல செயல்களே
நடைபெறும்  ;
அரவானின் தியாகம்
வீணாகப் போய் விடாது ;
அரவானுக்கு கெட்ட
பெயர் ஏற்படாது ; “
என்ற காரணத்தினால்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
அரவானை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலி
கொடுப்பதற்கு தேவையான
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கிறேன் “

 “களப்பலி கொடுப்பதை
ஆரம்பித்து வைத்ததே
துரியோதனன் தான் “

“அதை நல்லபடியாக
முடித்து வைக்க
வேண்டும் என்று
முயற்சி செய்து
கொண்டிருப்பவன் நான் “

“நான் செய்யும்
செயல்கள் சரியானவை
என்பது - உனக்கு
புரியாததற்குக் காரணம்
உன்னுடைய தாய்ப்பாசம் “

“தாய்ப்பாசம் என்ற
திரை உன் இதயத்தை
மூடி மறைத்து
இருக்கிறது ; - அந்தத்
திரையை விலக்கி
விட்டு பார் உலூபி
நான் செய்யும்
செயல்கள் அனைத்தும்
சரியானவை என்று
உனக்குப் புரியும் “

உலூபி :
“வாழ்வு அல்லது
சாவு இரண்டில்
ஒன்று கிடைக்கும்  ;
போர் புரிவதற்கு
உன் மகனை
அனுப்புகிறாயா என்று
கேட்டால் ஒப்புதல்
அளிக்க முடியும் ;
ஏனென்றால்
போர்க்களத்திற்கு சென்று
போர் புரிவதற்கு
வீரம் தேவை - அங்கே
வீரத்தை வெளிப்படுத்த
வாய்ப்பிருக்கிறது "

"ஆனால் ,
களப்பலியாகக் கொடுப்பதற்கு
உன் மகனை
அனுப்புகிறாயா என்று
கேட்டால் எப்படி ஒப்புதல்
அளிக்க முடியும் ;”
களப்பலியாவதற்கு வீரம்
தேவை இல்லையே
அங்கே வீரத்தை
வெளிப்படுத்த எங்கே
வாய்ப்பிருக்கிறது "

"என் மகன்
களப்பலியானான்
என்று கேட்பதை விட ;
போர்க்களத்தில்
வீரத்துடன் போரிட்டு
மடிந்தான் என்பதைக்
கேட்பதையே - நான்
பெருமையாகக் கருதுகிறேன் "

"நான் மட்டுமல்ல
இந்த உலகத்தில் உள்ள
எந்தத் தாயும் - தன்
மகன் போர்க்களத்தில்
வீரத்துடன் போரிட்டு
மடிந்தான் என்பதைக்
கேட்கவே விரும்புவார்கள்" "

கிருஷ்ணன்  :
“களப்பலியாவதற்கு
வீரம் தேவையில்லை
என்கிறாயே உலூபி !

விரம் இல்லாமல்
களப்பலியாக முடியாது
என்பது உனக்குத்
தெரியுமா உலூபி ! ””

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 10-02-2020
//////////////////////////////////////////


February 06, 2020

பரம்பொருள்-பதிவு-126


         பரம்பொருள்-பதிவு-126

கிருஷ்ணன் :
“நான் சொல்வதை
பொறுமையாகக்
கேள் உலூபி !”

“போரில் வெற்றி
பெற வேண்டும்
என்பதற்காக
துரியோதனன்
களப்பலி
கொடுப்பதற்காக
தகுந்த நாளையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
சரியான ஆளையும் ;
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
சோதிட மேதை
சகாதேவனை
சந்தித்தான் ; “

“சோதிட மேதையான
சகாதேவனும்
களப்பலி கொடுப்பதற்கு
தகுந்த நாளாக வருகின்ற
அமாவாசை நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
உகந்த ஆட்களில் ஒருவனாக
அரவானையும்; குறித்துக்
கொடுத்து விட்டான் “

“அதனால் துரியோதனன்
அரவானை சந்தித்து
தான் போரில்
வெற்றி பெறுவதற்காக
வருகின்ற அமாவாசை
தினத்தன்று தனக்காக
களப்பலியாக வேண்டும்
என்று அரவானை கேட்க
அரவானும் வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனனுக்காக
களப்பலியாக
சம்மதித்து விட்டான் “

உலூபி :
“அரவான் ஏன்
இவ்வாறு செய்தான் “

கிருஷ்ணன் :
“பொறு உலூபி பொறு “

“முதலில் நான்
சொல்வதை
முழுமையாகக் கேள் “

“துரியோதனனுக்காக
அரவான்
களப்பலியாகி
துரியோதனன்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
வருங்காலத்தில்
உலகம் இருள்
மயமானதாகி விடும் ;
அதற்கு காரணமான
அரவானையும்
வசைபாடக் கூடிய
நிலை ஏற்படும் ; “

“ஆனால்,
பாண்டவர்களுக்காக
அரவான்
களப்பலியாகி
பாண்டவர்கள் போரில்
வெற்றி பெற்று விட்டால்
வருங்கால உலகம்
ஒளிமயமானதாக
இருக்கும் ;
அரவானை தெய்வமாக
வணங்கக் கூடிய
நிலை ஏற்படும் ;
என்ற விஷயங்களை
எடுத்துச் சொல்லி
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் அரவானை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று அரவானை
நான் கேட்டதற்கு
அரவானும் சரி
என்று சம்மதம்
தெரிவித்து விட்டான் “

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
களப்பலியாக
அரவானைக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
உன்னிடம் ஒப்புதல்
பெறவே வந்தேன் “

உலூபி :
“நாட்டை ஆளும்
மன்னனின் மகன்
வந்து கேட்டார்
என்ற காரணத்தினால்
களப்பலியாவதற்கு
அரவான் சரி
என்று சொன்னது
தவறானது தான் “

“நடந்து விட்ட தவறை
நீங்கள் சரி செய்யாமல்
மேலும் ஒரு தவறை
நீங்களும் சேர்ந்து
செய்து இருக்கிறீர்கள் “

“அறியாதவர்கள் செய்த
தவறை அனைத்தும்
அறிந்த நீங்கள்
திருத்தியிருக்க
வேண்டும்  ;
ஆனால் நீங்களும்
அவர்கள் செய்த
தவறை திருத்தாமல்
அவர்களுடன்
சேர்ந்து நீங்களும்
தவறை செய்து
இருக்கிறீர்கள் ;”

“தவறை திருத்த
வேண்டிய - நீங்களே
தவறு செய்தால்
தவறை திருத்துவது யார் “

கிருஷ்ணன்  :
“தவறு செய்யத்
தூண்டியவன்
துரியோதனன் “

“தவறு செய்தவன்
அரவான் “

“தவறு நேர்ந்து
விடக்கூடாது
என்பதற்காக அதை
மாற்றி அமைக்க
முயற்சி செய்தவன் நான் “

“தவறு செய்த
துரியோதனன் , அரவான்
ஆகியோர்களை விட்டு
விட்டு நல்லது
செய்வதற்கு முயற்சி
செய்த என்னை
தவறு செய்தவன்
என்கிறாய் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 06-02-2020
//////////////////////////////////////////


February 05, 2020

பரம்பொருள்-பதிவு-125


           பரம்பொருள்-பதிவு-125

(கிருஷ்ணன் உலூபியை
சந்திக்கச் செல்கிறார்.
கிருஷ்ணனைக் கண்ட
உலூபி கிருஷ்ணனின்
கால்களில் விழுகிறாள்)

உலூபி :
"என்னை ஆசிர்வதியுங்கள்
அண்ணா ! "

கிருஷ்ணன் :
"அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய புகழும்
இந்த உலகத்தில்
இருக்கும் ;
நீடுழி வாழ்க !
என் அன்புத் தங்கை
உலூபி ! "

(கிருஷ்ணன் உலூபியை
ஆசிர்வதிக்கிறார்)

"எழுந்திரு உலூபி "

(உலூபி எழுந்திருக்கிறாள்)

உலூபி :
"நீங்கள் வாழ்த்தியதின்
அர்த்தம் எனக்குப்
புரியவில்லை அண்ணா ! "

கிருஷ்ணன் :
“அரவானுக்குக்
கிடைக்கக்கூடிய புகழ்
இந்த உலகம் என்று
வரை இருக்குமோ
அன்று வரை இருக்கும் ;
அதைப்போல ,
அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரை
உன்னுடைய
புகழும் இருக்கும் ;”

உலூபி :
“இந்த உலகம்
இருக்கும் வரை
அரவானின் புகழ் இருக்க
வேண்டுமென்றால்  
யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலை
அல்லவா அரவான்
செய்ய வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆமாம் “

“யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலைத்
தான் அரவான்
செய்யப் போகிறான் “

“அதனால் தான் நானே
அரவானைப் பார்த்து
விட்டு வந்தேன் “

உலூபி :
“அரவானைப் பார்த்தீர்களா ?”

கிருஷ்ணன்  :
“அரவானை மட்டுமல்ல
அர்ஜுனனையும்
பார்த்து விட்டுத்
தான் வந்திருக்கிறேன் “

உலூபி :
“அனைவரும் நலமாக
இருக்கிறார்களா அண்ணா !”

கிருஷ்ணன் :
“அனைவரும் நலம் “

உலூபி :
“தாங்கள் என்னைக்
காண வந்ததின்
காரணத்தை நான் தெரிந்து
கொள்ளலாமா அண்ணா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏற்கனவே எடுத்த
முடிவு ஒன்றிற்கு ஒப்புதல்
பெறுவதற்காக உன்னைக்
காண வந்தேன் “

உலூபி :
“அண்ணா நீங்கள்
எந்த முடிவு எடுத்தாலும்
அந்த முடிவு சரியான
முடிவாகத் தானே இருக்கும் “

“உங்கள் முடிவு
எப்போதும் தவறான
முடிவாக இருந்ததில்லையே !”

“நீங்கள் எப்போதும்
தவறான முடிவை
எடுத்ததே இல்லையே “

“உங்கள் முடிவை தவறு
என்று சொல்வதற்கு
தகுதி படைத்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள் “

“நீங்கள் எடுத்த முடிவிற்கு
ஒப்புதல் அளிக்கும்
அளவிற்கு நான்
ஒன்றும் பெரிய ஆள்
இல்லையே அண்ணா ! “

கிருஷ்ணன் :
“முடிவு என்னுடையது
என்றாலும் அதை
ஏற்றுக் கொண்டு
ஒப்புதல் அளித்தது
உன் மகன் அரவான் “

“உன்னுடைய ஒப்புதலும்
தேவைப்படுகிறது என்ற
காரணத்தினால் தான்
உன்னுடைய ஒப்புதலைப்
பெறுவதற்காக
உன்னைக் காண வந்தேன் “

உலூபி :
“என்ன ?
என் மகனா ?
என் மகன் அரவானா ? “

“ஒப்புதல் அளித்தானா ?”

“உங்களுடைய முடிவுக்கு
ஒப்புதல் அளித்தானா ?”

“எந்த முடிவுக்கு
ஒப்புதல் அளித்தான் “

“எந்த முடிவைச் சொல்லி
அரவானிடம் ஒப்புதல்
பெற்றீர்கள்“

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 05-02-2020
//////////////////////////////////////////