May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-3


               ஜபம்-பதிவு-495
           (அறிய வேண்டியவை-3)

“விட்ட குறை
தொட்ட குறை என்று
ஒரு வார்த்தை உண்டு
அந்த வார்த்தையைக்
கேள்வி பட்டிருக்கிறீர்களா”

“போன ஜென்மத்தில்
ஒரு செயலைச்
செய்ய வேண்டும்
என்று ஆரம்பித்து
அந்த செயலைச் செய்து
கொண்டிருக்கும் போது
அந்த செயல்
முடிவடைதற்குள்ளாகவே
மரணம் என்பது
ஏற்பட்டு விட்டால்
அந்த செயலை
முடிப்பதற்காக
அடுத்தாற்போல் மீண்டும்
ஒரு ஜென்மம் எடுத்து
சென்ற ஜென்மத்தில்
தொட்டு பிறகு
விட்டு விட்டு வந்த
அந்த செயலை இந்த
ஜென்மத்தில் தொடர
வேண்டும் என்பதே
அதற்கு அர்த்தம் “

“திரௌபதியின்
வாழ்க்கையிலும்
இத்தகைய ஒரு
நிகழ்வு தான்
நடந்து இருக்கிறது”

“திரௌபதி சென்ற
ஜென்மத்தில் கடலை
சங்குக்குள் அடைக்க
முற்பட்டாள் ;
காற்றை குடுவைக்குள்
அடைக்க முற்பட்டாள் ;
இந்த உலகத்தில்
யாரும் செய்ய
முடியாத செயலை
செய்ய முற்பட்டாள் ;
ஆம் திரௌபதி
சென்ற ஜென்மத்தில்
யாரும் நினைத்து
பார்க்க முடியாத
யாரும் இது வரை
கேட்காத வரத்தைப்
பெற வேண்டும்
என்று சிவபெருமானை
நோக்கி கடும்
தவம் புரிந்தாள் “

“அவளுடைய கடுமையான
தவத்தை மெச்சிய
சிவபெருமான் நேரில்
தோன்றி திரௌபதிக்கு
வரத்தை தர
முயற்சித்த போது
தனக்கு இந்த வரங்களை
இந்த ஜென்மத்தில்
அளித்து அதை
அடுத்த ஜென்மத்தில்
அனுபவிக்கும் படி
செய்தால் போதும்
என்று சொல்லி விட்டாள் “

“ஒரு வரத்திற்குள்
ஐந்து வரங்களை
சிவபெருமானிடம்
கேட்டாள் திரௌபதி
அனைத்தையும்
அளிக்கவல்ல
சிவபெருமான் அவள்
கேட்டதையும்
அளித்து விட்டார் “

குந்தி :
“அப்படி என்ன வரம்
கேட்டாள் திரௌபதி”

கிருஷ்ணன் :
“சிவபெருமானிடம்
அவள் என்ன
வரங்களைக் கேட்டாள்
என்று தெரியுமா
அவளுக்கு
வாய்க்கும் கணவன்

இந்த உலகத்திலேயே
சிறந்த தர்மவானாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்தில்
யாராலும்
வெல்ல முடியாத
ஆஞ்சநேயரைப்
போன்று சிறந்த
பலசாலியாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்தில்
யாராலும் வீழ்த்த
முடியாத
பரசுராமனைப்
போன்ற சிறந்த
வில் வித்தை
வீரனாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகமே
நின்று வேடிக்கை
பார்க்கும் அளவுக்கு
அழகு நிறைந்தவராய்
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்திற்கே
பொறுமைக்கு ஒரு
எடுத்துக் காட்டாய்
இருப்பவராய்
இருக்க வேண்டும் ;

என்ற வரங்களைக்
கேட்டாள் திரௌபதி “

அதற்கு சிவபெருமான்
”கடவுளை வணங்கி
தனக்கு என்ன
தேவையோ அதை
கேட்கும் போது
வார்த்தைகளைச்
சரியாக பயன்படுத்தி
கவனமாக
கேட்க வேண்டும் ;
ஏற்படப் போகும்
விளைவுகளை
உணர்ந்து
கேட்க வேண்டும் ;
வார்த்தைகள் என்பது
மிக முக்கியம்
என்பதை உணர்ந்து
கேட்க வேண்டும் ;
வார்த்தைகளில் உள்ள
முக்கியத்துவத்தை
அறிந்து
கேட்க வேண்டும் ;
தான் கேட்பவை
தனக்கு பாதிப்பை
உண்டாக்குமா
என்பதை அறிந்து
கேட்க வேண்டும் ;
அப்படி உணர்ந்து
கேட்கவில்லை எனில்
தான் கேட்டவைக்குரிய
விளைவுளைகளை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் ;
கடவுளிடம்
வரங்களைக் கேட்கும்
போது வார்த்தைகளைப்
பார்த்து அதில்
உள்ள அர்த்தங்களை
அறிந்து தான் கேட்க
வேண்டும் “ என்றார்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-2


             ஜபம்-பதிவு-494
         (அறிய வேண்டியவை-2)

தர்மர் :   
“நாங்கள் சொல்லித்
தான் நீங்கள்
தெரிந்து கொள்ள
வேண்டிய அவசியம்
என்பது இல்லை
பரந்தாமா இருந்தாலும்
சொல்கிறேன் “

“நாங்கள் ஐவரும்
தினமும் பிஷை
எடுத்து வருவோம்  ;
அதை எங்களின்
தாயிடம்
சொல்லுவோம் ;
தாய் அதை
நீங்கள் ஐவரும்
சமமாக பகிர்ந்து
கொள்ளுங்கள் என்பார்
நாங்கள் அனைவரும்
அதை சமமாக
பகிர்ந்து கொள்வோம்”

“ஆனால் இன்று
சுயம்வரத்தில்
நடைபெற்ற போட்டியில்
திரௌபதியை
அர்ஜுனன் வென்றான்”

“பீமனும், அர்ஜுனனும்,
தாயிடம் வந்து
இன்று நாங்கள்
நல்ல ஒரு
பிஷை கொண்டு
வந்திருக்கிறோம்
என்றார்கள் ;
எங்களுடைய தாயாரும்
பிஷை எது
என்று பார்க்காமல்
கிடைத்த பிஷையை
நீங்கள் ஐவரும்
சமமாக பகிர்ந்து
கொள்ளுங்கள் என்று
சொல்லி விட்டார்”

“திரௌபதி பகிர்ந்து
கொள்ளக்கூடிய
பொருள் கிடையாதே ;
எங்களால் எப்படி
திரௌபதியை
பகிர்ந்து கொள்ள
முடியும் இது
தர்மம் கிடையாதே;”

கிருஷ்ணன் :
“இந்த பிரச்சினையை
தீர்ப்பதற்குரிய வழியை
நீங்கள் திரௌபதியிடமே
கேட்டிருக்கலாமே “

அர்ஜுனன் :
“திரௌபதிக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பில்லையே
பரந்தாமா”

கிருஷ்ணன் :
“மற்றவருக்கு என்ன
தெரிந்திருக்கிறது
என்ன தெரியவில்லை
என்பதை உன்னால்
எப்படி சொல்ல
முடியும் அர்ஜுனா “

“எதையும் தெரிந்த
பிறகே சொல்ல வேண்டும்
தெரியாமல் எந்த
ஒரு விஷயத்தையும்
சொல்லக் கூடாது”

“உனக்கு திரௌபதியைப்
பற்றித் தெரியவில்லை
அதனால் தான்
இவ்வாறு பேசுகிறாய்”

“திரௌபதி பற்றி
எறிந்த நெருப்பில்
பூத்து வந்தவள் ;
தர்மத்தை
காப்பாற்றுவதற்கு
உதித்து வந்தவள் ;
கற்பிற்கு
இலக்கணமாகத்
திகழ்ந்து
கொண்டிருப்பவள் ;
வீரத்தின்
வடிவமாக வாழ்ந்து
கொண்டிருப்பவள் ;
சரித்திரத்தை
உருவாக்கக் காத்துக்
கொண்டிருப்பவள் ; 
என்பதை முதலில்
நீங்கள் அனைவரும்
தெரிந்து கொள்ள
வேண்டும் “

“ஆதலால்
பிரச்சினையைத்
தீர்ப்பதற்கு என்ன வழி
என்று அவளிடமே
கேட்டிருக்கலாமே “

குந்தி :
“பிரச்சினைக்குள்
நாங்கள் அனைவரும்
மூழ்கி இருக்கும்
போது எப்படி
எங்களால் தெளிவாக
சிந்திக்க முடியும் “

“பிரச்சினையை விட்டு
வெளியே இருப்பவன் நீ
அதனால் நீ தான்
இதற்கு ஒரு நல்ல
தீர்வு சொல்ல
வேண்டும் கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“பிரச்சினையை ஏன்
என் தலை மேல்
சுமத்துகிறீர்கள் அத்தை”

குந்தி :
“மனிதர்களுக்கு
பிரச்சினை என்ற
ஒன்று ஏற்பட்டால்
கடவுளிடம் தானே
முறையிட வேண்டும்  ;
கடவுள் தானே
அந்த பிரச்சினையைத்
தீர்த்து வைக்க
வேண்டும் - அதனால்
தான் உன்னிடம்
கேட்கிறேன் கிருஷ்ணா”

“எங்களுக்கு நீ
தான் உதவ வேண்டும்”

கிருஷ்ணன் :
“உங்களுடைய வார்த்தையை
மறுக்க முடியுமா அத்தை”

“பிரச்சினை எங்கே
ஆரம்பித்தது என்பதை
முதலில் சொல்கிறேன் “

“நடந்த விஷயத்தைத்
தெரிந்து கொண்டு ;
நடந்து
கொண்டிருப்பவைகளை
மனதில் கொண்டு ;
நடக்க
வேண்டியவைகளை
எப்படி நடத்துவது
என்று யோசியுங்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-1


                ஜபம்-பதிவு-493
           (அறிய வேண்டியவை-1)

(பாண்டவர்கள்,
குந்தி, திரெளபதி,
ஆகியோர் பேசிக்
கொண்டிருக்கும்
போது உள்ளே
நுழைந்தார் கிருஷ்ணன்)

குந்தி :
“வா! கிருஷ்ணா வா!
நலமாக இருக்கிறாயா? ”

கிருஷ்ணன் :
“உங்களுடைய ஆசி
எனக்கு இருக்கும்
போது என்னுடைய
நலத்திற்கு என்ன
குறை ஏற்படப்
போகிறது அத்தை”

“ஆனால் நீங்கள்
அனைவரும்
நலமாக இல்லை
போல் தெரிகிறதே ;
நலத்தில் ஏதோ
குறை ஏற்பட்டது
போல் தெரிகிறதே ;
பிரச்சினையில்
மாட்டிக் கொண்டு
விடை தெரியாமல்
அல்லல் படுவது
போல் தெரிகிறதே ;
பிரச்சினையை
தீர்ப்பதற்குரிய வழி
தெரியாமல் விழி
பிதுங்கிக் கொண்டு
இருப்பது போல்
தெரிகிறதே ;

குந்தி :
“ஆமாம்! கிருஷ்ணா
நீ சொல்வது சரி தான்
எங்களுக்கு ஒரு
பிரச்சினை
ஏற்பட்டிருக்கிறது ;
பிரச்சினையை
தீர்ப்பதற்குரிய வழி
எது என்று
தெரியாமல்
கலங்கிக் கொண்டு
இருக்கிறோம் ;”
நீ தான் எங்கள்
பிரச்சினையை
தீர்ப்பதற்கு ஒரு
நல்ல வழியைச்
சொல்ல வேண்டும்”

கிருஷ்ணன் :
“என்னை
நம்பியவர்களுக்கு
ஒரு பிரச்சினை
என்றால் நான்
ஓடி வந்து
உதவி
செய்ய மாட்டேனா?”

குந்தி :
“ஆனால், கிருஷ்ணா
எங்களுக்கு பல்வேறு
பிரச்சினைகள்
ஏற்பட்ட போது
உதவி செய்வதற்கு
நீ வரவே
இல்லையே”

கிருஷ்ணன் :
“நன்றாக யோசித்துப்
பாருங்கள் அத்தை !
உங்களுக்கு பிரச்சினை
ஏற்பட்ட போது
நான் எப்போது
வந்திருக்கிறேன் ;
எப்போது
வரவில்லை ;
என்பதை நன்றாக
யோசித்துப் பாருங்கள் ;
நீங்கள் யோசித்துப்
பார்த்தீர்கள் என்றால்
மனிதர்களுக்கு
பிரச்சினை ஏற்படும்
போது கடவுள்
எப்போது வருவார்
எப்போது வரமாட்டார்
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம் அத்தை”

குந்தி :
“அதைத் தெரிந்து
கொள்ளும் அளவிற்கு
எனக்கு ஞானம்
இல்லையே
கிருஷ்ணா !
நீ சொன்னால்
அதைத் தெரிந்து
கொள்கிறேன் “

கிருஷ்ணன் :
“சில விஷயங்களை
சொல்லி தெரிந்து
கொள்ள முடியாது
வாழ்க்கையில் அனுபவம்
என்பது பாடத்தை
கற்பிக்கும் போது
தான் அதைத்
தெரிந்து கொள்ள
முடியும் அத்தை “

குந்தி :
“அனுபவம் என்பது
எப்போது ஏற்படும்
அது எப்போது
பாடத்தைக் கற்பிக்கும்”

கிருஷ்ணன் :
“பிரச்சினை என்னும்
சூறாவளிக் காற்றில்
சிக்கி சின்னா
பின்னமாகும் போது
ஏற்படும் அனுபவம்
நல்ல பாடத்தைக்
கற்பிக்கும் “

குந்தி :
“பிரச்சினை என்று
எதைக் குறிப்பிடுகிறாய்
கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“இப்போது உங்களுக்குள்
ஏற்பட்டிருக்கிறதே
அந்த பிரச்சினையைத்
தான் குறிப்பிடுகிறேன்
அத்தை ! “

குந்தி :
“அந்த பிரச்சினையைத்
தீர்ப்பதற்குத் தான்
நீ வழி காட்ட
வேண்டும் என்று
கேட்கிறேன் கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“முதலில் பிரச்சினை
என்ன என்று கூறுங்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////