ஜபம்-பதிவு-1033
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-11
(அர்ஜுனன் பாண்டிய நாட்டிற்குள் நடந்து சென்று கொண்டிருக்கிறான். ஒரு புலி அவனைத் தாக்க வருகிறது. வரிசையாக வந்த அம்பு அந்த புலியின் மேல் பாய, புலி பலத்த காயங்களுடன் கீழே விழுகிறது. காயங்களுடன் விழுந்த புலி மீண்டும் அர்ஜுனனைத் தாக்க அவன் மேல் பாய்கிறது. சித்திராங்கதை அந்த புலியுடன் சண்டையிட்டு தன்னுடைய வாளால் அந்த புலியைக் கொன்று விடுகிறாள்.)
சித்திராங்கதை : பாதுகாப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு வர வேண்டாமா ?
அர்ஜுனன் : தெரிந்து கொண்டு தான் வந்தேன்.
நல்லோர்கள் என்று சொல்லப்படக்கூடிய
பாண்டியர்கள் ஆட்சி செய்யும் பாண்டிய நாட்டில்
இரவிலும் பெண்கள் தனியாக, சுதந்திரமாக,
எந்த ஒரு துணையும் இன்றி,
யாருடைய பாதுகாப்பும் இன்றி,
பயமின்றி செல்லலாம் என்று
பாண்டிய நாட்டின் சிறப்பைப் பற்றி
வரலாறு சொல்கிறது
இத்தகைய சிறப்புகளைப் பெற்ற பாண்டிய நாட்டில்
பெண்களுக்கே இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்றால்,
முதியவர்கள், சிறியவர்கள், வணிகர்கள், வழிப்போக்கர்கள்
ஆகிய அனைவருக்கும் பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும் என்ற காரணத்தால் தான்
நான் காலம், நேரம் பார்க்காமல் பாண்டிய நாட்டிற்குள் வந்தேன்.
சித்திராங்கதை : அனைத்தும் சரிதான். ஆனால், அடர்ந்த காட்டிற்குள் பிரவேசிக்கும் போது கொடிய விலங்குகள் தாக்கினால் என்ன செய்வது என்பதை யோசிக்காமல் வந்து விட்டீர்களே?
அர்ஜுனன் : அதனால் தான் பாண்டியர்கள் ஆட்சி செய்யும் பாண்டிய நாட்டில்
புள்ளிமான் கூட புலியை வேட்டையாடும் என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
சித்திராங்கதை : யாரிடம் பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்.
அர்ஜுனன் : தெரிந்து தான் பேசுகிறேன்.
நீங்கள் இளவரசி என்பதைத் தெரிந்து கொண்டு தான் பேசுகிறேன்.
பாண்டிய நாட்டின் மன்னன் சித்திரவாகனன் மகள் சித்திராங்கதை என்பதைத் தெரிந்து கொண்டு தான் பேசுகிறேன்.
சித்திராங்கதை : எப்படி தெரிந்து கொண்டீர்கள்.
அர்ஜுனன் : புலியின் மீது அம்பை செலுத்திய போது
உங்கள் வேகம் தெரிந்தது.
புலியுடன் சண்டையிட்ட போது
உங்கள் வீரம் தெரிந்தது
உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த புலியை தடவிக் கொடுத்த போது
உங்கள் அன்பு தெரிந்தது
இறந்த புலியைக் கண்டு நீங்கள் கண்ணீர் சிந்திய போது
உங்கள் கருணை தெரிந்தது
நீங்கள் நடந்து சென்ற போது
உங்கள் கம்பீரம் தெரிந்தது.
நீங்கள் பேசும் போது தான் உலகத்திலேயே
இனிமையான மொழி தமிழ் மொழி என்று தெரிந்தது
வெண்ணிலவில் ஒளியெடுத்து,
விண்மீனில் துளியெடுத்து,
பொன்குழம்பை வார்த்தெடுத்து,
வைரத்தில் தோய்த்தெடுத்து,
நவரத்தினங்களால் செதுக்கியெடுத்து,
உருவாக்கப்பட்ட சிலையில்
மல்லிகை மணமெடுத்து,
ரோஜா அழகெடுத்து,
மா, பலா, வாழை முக்கனி சுவை சேர்த்தெடுத்து,
சந்தனத்தின் மணத்தைக் குழைத்தெடுத்து
கரும்பின் வாசனையையும்,
ஜவ்வாதின் வாசனையையும் கலந்தெடுத்து,
அகிற்புகையை அதில் செலுத்தி,
உண்டான கலவையை
அதில் இழைத்து
படைக்கப்பட்ட பிரம்மனின் அதிசய படைப்பாக,
அதிசயமே ஆச்சரியப்படும் அதிசயமாக,
வெள்ளை நிறம் கொண்ட சிலையென,
யாராலும் தீட்ட முடியாத ஓவியமென,
காலத்தைக் கடந்து நிற்கும் கவிதையென
தீர்க்கமான பார்வை
தெளிவான சிந்தனை
எதையும் தாங்கும் இதயம்
எது வந்தாலும் சமாளிக்கும் திறமை
யாருக்கும் எதற்கும் அஞ்சாத தைரியம்
கொண்ட தனித்துவம் கொண்ட பெண்ணாக
அழகு மங்கையாக காட்சியளித்துக் கொண்டு இருக்கிறீர்கள்
-----ஜபம் இன்னும் வரும்
----11-03-2025
////////////////////////////////
No comments:
Post a Comment