April 09, 2025

ஜபம்-பதிவு-1040 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-18

 ஜபம்-பதிவு-1040

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-18
(அர்ஜுனன் பாண்டிய அவையில் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறான். அரியணையில் பாண்டிய நாட்டின் மன்னன் சித்திரவாகனன் அமர்ந்திருக்கிறான். இளவரசி சித்திராங்கதை ஆசனத்தில் அமர்ந்து அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறாள். அமைச்சர் பேச ஆரம்பிக்கிறார்.)
அமைச்சர் : ஓங்கி எழுகின்ற அலைகளையுடையதும், மிக்க பரப்பினையுடையதுமான கடலை ஆலயமாகக் கொண்டவன், இனிய மணங்கமழும் மலர்களையொத்த நீண்ட கண்களையுடைய திசைப் பெயர்கள் திருமேனிகாவல் செய்யப்பெற்றவன், விண்ணென்னும் பெயர் கொண்ட மேக தோரணங்களையுடைய மேற் கட்டியின் குளிர் நிழலின் கீழே ஆயிரம் படங்களிலுள்ள இரத்தினங்களின் ஒளி விளக்குப்போல் பிரகாசிக்க, ஆதிசேடனாகிய சிறந்த அமளியின் மீது அமர்ந்தவன், தும்புரு நாரதர்களுடைய இன்பந்தரும் பாடல்களையும், வீணாகானத்தையும், திருச்செவி மடுப்பவன், நிலமகளோடும், மலர்மகளும் அடிவருடத் துயிலமர்ந்தவன், நீலமேக வண்ணன், வலிமை மிக்க ஆயுதங்களைத் தரித்த மஹாவிஷ்னுவினுடைய உந்திக் கமலத்திலிருந்து,
ஒளி பொருந்திய மரகதத்தை யொத்த பசுமை நிறமும், துளைகளும் கொண்ட தண்டினையுடைய பொற்றாமரை மலர்ந்து சுடர் வீசுகின்றது. அதன் மீது, விளையும் வளம் மிக்க நற்கதிரென மிக்கு விளங்குகின்ற சடைமுடிகளுடனும், தக்க அளவு பொருந்திய கமண்டலத்துடனும், ஜபமாலையுடனும் நன்மை தீமைகளுக்குத் தாய் தந்தையரின் பேச்சுக்கள் போல் பிரமாணங்களாக உள்ளவைகளும், பாவத்தைப் போக்குபவைகளுமான வேதங்களை நான்கு முகங்களாலும் உச்சரித்தவாறே பிரமதேவன் தோன்றினான். இவன் நான்கு கைகள், நான்கு முகங்கள், நான்கு வேதங்கள், இரு நான்கு கண்கள் இவைகளையுடையவன், தேன் கமழும் தாமரை மலரைப் பிறப்பிடமாகக் கொண்டவன்.
அசையும் பொருட்கள், அசையா பொருட்கள் ஆகிய எல்லாவற்றையும் வாழவைப்பதற்கும், அழிப்பதற்கும் வல்லமை கொண்டவரும், தவம் செய்வதையே குறிக்கோளாக்க் கொண்டவருமான அத்திரியைப் பிரமதேவன் படைத்தான்.
இம்முனிவர் பலகாலம் தவம் செய்து இவருடைய கண்களிலிருந்து இருளை நீக்கும் பெருஞ்சோதியான சந்திரன் தோன்றினான்.
அமிர்த கிரணங்களையுடைய அந்தச் சந்திரனிடமிருந்து, பெரியோர்களால் கௌரவிக்கப்பட்டதும் மநுவால் வகுக்கப்பட்டதுமான ஆசாரங்களை நிரம்ப அநுஷ்டிப்பதும், ஒளியின் வளர்ச்சியால் சூரியனையும், தெளிவினால் சந்திரனையும், ஞானத்தின் ஏற்றத்தால் பிருகஸ்பதியையும் தாழ்த்திக் கொண்டதுமான பாண்டிய மன்னர்களின் குலம் தோன்றியது.
தம் உடலால் மூவுலகின் வாயிலை அடைக்கின்ற விந்தியமலையைத் தன் முன் பாதங்களை வைத்து ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் மலையாகச் செய்தவரும், தேவேந்திரனை ஊர்ந்து செல்லும் பிராணியாகச் செய்தவரும், கடலை நீர்த்துளியாச் செய்தவரும், முனிவர் கூட்டத்தின் தலைவருமான குடமுனியாகிய அகத்தியர் பாண்டியருக்கு புரோகிராக இருந்தார்.
அத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய வம்சத்தில்,
கடலைக் கடைந்து அமிர்தம் கொண்டவன் பாண்டியன்,
பொன்மயமான இமயமலையில் இரு இளங்கயல் மீன்களைப் பொறித்தவன் பாண்டியன்,
தன்னுடைய குருவைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டவன் பாண்டியன்,
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காகப் பாற்கடல் கடைந்த பொழுது அவர்களுக்கு உதவியாகத் தன் சேனையுடன் சென்று பணிபுரிந்தவன் பாண்டியன்,
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரிலே பெரிய அசுரர்களைக் கொன்று வெற்றி பெற்று, தேவர் கூட்டம் கீழே அமர்ந்திருக்க தேவேந்திரன் சிங்காதனத்தில் அமர்ந்தவன் ஒருவன் மட்டுமே அவன் பாண்டியன்,
இந்திரனுடைய முடியின்மேல் வளை என்னும் ஆயுதத்தை எறிந்து முடியை வீழ்த்தியவன் பாண்டியன்,
இந்திரன் மாலையை அணிந்தவன் பாண்டியன்,
இந்திரனுடன் சமமாக அமர்ந்தவன் பாண்டியன்,
நாட்டில் பசிநோய் நீங்க இந்திரனுக்குத் திருவிழாச் செய்தவன் பாண்டியன்,
பூதங்களை ஏவல் கொண்டு அவற்றால் ஏரிகளையும், குளங்களையும் திருத்தியமைத்தவன் பாண்டியன்,
கடலைக் கடைந்து அமுதம் கொண்டவன் பாண்டியன்,
அளவுக்கு மீறிப் பெருகி மதுரையை அழிக்க வந்த கடலை வற்றச் செய்தவன் பாண்டியன்,
விரிந்த கடலை வேல் எறிந்து மீளச் செய்தவன் பாண்டியன்,
அகத்திய முனிவருடன் தமிழ் ஆய்ந்தவன் பாண்டியன்,
நாற்கடலின் நீரினை ஒரே பகலில் கொண்டு வரச் செய்து அபிஷேகம் செய்து கொண்டவன் பாண்டியன்,
நாற்கோடி பொன்னை நியதியாகக் கொடுத்து நூற்கடலைக் கரை கண்டவன் பாண்டியன்,
வலிமை மிக்க யானைகள் ஆயிரம் வழங்கியவன் பாண்டியன்,
கழிமுகம் உள்ள கடலைப்போல் தோற்றம் அளிக்கும் குளங்கள் பலவற்றுக்குக் கரையை உயர்த்தியவன் பாண்டியன்,
சேரன் முடி கொண்டவன் பாண்டியன்,
சோழன் தலை கொண்டவன் பாண்டியன்,
பெருவலி கொண்ட மன்னர் பலரை அழித்தவன் பாண்டியன்,
வலிமிக்க தோள்களையுடைய அரசர்கள் பலரை சிதறியோடிக் கானகம் புகுந்து வானகம் அடையச் செய்தவன் பாண்டியன்,
அரசர்கள் தம்மை எதிர்க்கா வகையில் அவர்களை வென்று தென் மதுராபுரியை நிர்மாணித்தவன் பாண்டியன்,
அந்த இடத்தில் அரிய நல்ல தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்தவன் பாண்டியன்,
எண்ணற்ற கோயில்கள், நீர்நிலைகள் என்னும் புண்ணியச் செயல்களின் மூலம் புண்ணிய கீர்த்தியானாக விளங்கியவன் பாண்டியன்,
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment