ஜபம்-பதிவு-1041
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-19
பூமிபாரத்தால் இளைப்புற்ற ஆதிசேஷனுக்கு ஓய்வு அளிக்கும் காரணியாக விளங்கும் பாண்டிய மன்னர்களின் குலம் ஊழிக்காலம் வரை இப்பூவுலகில் நிலைத்திருப்பதாக!
பழைய காலத்தில் மூவுலகமும் அழிந்த போதும் நிகரில்லா பெருமையால் புகழ் பெற்றிருந்த பாண்டியன் அழியாமல் கடலின் வாயிலில் நிலையாக நின்றான் !
வீரக்கழல்களை அணிந்த தனது திருவடிகளின் அசைவுகளால் எழும் ஒலிகளாலேயே தனது வலிமையின் அளவினை வேற்று நாட்டு அரசர்கள் அறியுமாறு உணர்த்தும் மாபெரும் பெருமை உடையவன் பாண்டிய மன்னன்.!
அவன் மீது வடிவேல் எறிந்த பெரும்பகையை பொறுக்காது கொடுங்கடல் ஒரு சமயம் ஓடும் அழகிய பஃறுளியாற்றுடனே பல மலைகளைக் கொண்ட குமரி மலைத் தொடர்களை விழுங்கிக் கொண்டது!
கொடுங்கடலின் ஆக்ரமிப்பால் தனது இடத்தை இழந்ததற்கு ஈடாகப் புதிதாக தோன்றிய வடதிசைக் கங்கையையும், இமயத்தையும் தனது பெரும்படை கொண்டு தென்திசை யாவற்றையும் ஒரே குடையின் கீழ் ஆண்டவன் தென்னவனான பாண்டியன் அவன் புகழ் வாழ்க!
திங்கட் செல்வனின் திருக்குலம் புகழ் விளங்கும் ஆயிரம் சிவந்த கண்களை உடைய இந்திரன் பூட்டிய திறம் விளங்கும் ஆரத்தை தன் புகழ் ஒளி பொங்கும் விரிந்த மார்பிலே அணிந்த பாண்டியன் புகழ் வாழ்க!
தனது பெருமைக்குரிய பெருநாட்டிலே பெய்யாது சென்ற மழை மேகங்களை சிறைப்படுத்தி பெருமழை சுரக்குமாறு செய்து நாட்டு வளத்தை பெருக்கிய மாபெரும் தலைவன் பாண்டியன் வாழ்க!
வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய சிவபெருமானுக்கு பின்னர் வந்து உயர்ந்த குன்றுகளைக் கொண்ட பொதிகை மலையை ஆளும் பாண்டியன்!
பூமி தரும் செல்வ வளத்தின் நிழலில் ஆட்சி செய்வதை கடமையாகக் கொண்டு வருகிறவர் பாண்டியர்!
அவர்களுடைய சிறப்பினை உடைய செங்கோலும், ஆட்சியின் தன்மையும் அவனுடைய வேலினது வெற்றி சிறப்பும் உலகெங்கும் விளக்கம் பெற்ற கொள்கையையுடையன!
மதுரை மாநகரில் வாழ்வோர் அவ்விட்த்தை விட்டு நீங்குதலை விரும்பாதவர்கள் அத்தகைய வளம் கொண்டது மதுரை1
இமயமலையின் நெற்றியில் தனது அரச சின்னமாகிய கயல்மீனை பொறித்தவன் பாண்டியன் இதற்கு எதிராக புலியும், வில்லும் சோழராலும், சேரராலும் பின்னர் பொறிக்கப்பட்டன!
சேரர், சோழர் மற்றும் அனைத்து அரசர்களும் தனது ஏவலை ஏற்று நடக்கும் படியாக உலகாண்டவன் பாண்டியன்!
மணமாலைகள் தொங்குகின்ற வெண்கொற்றக் குடையினை உடையவன் பாண்டியன். அவன் அரண்மனையிலே காலை முரசம் பள்ளியெழுச்சி முரசாக முழங்குகிறது!
கோர்க்கப்படாத பொதிய மலையின் ஆரமும், கோத்த கொற்கை கடலில் கிடைக்கும் முத்தும் தேவர்கோனான இந்திரனை வென்று அவன் அணிந்திருந்த உயர்ந்த நவரத்ன மாலையும் ஆகிய இவை மூன்றுமே தென்னாட்டவருக்கு அரசனான பாண்டியன் மார்பில் அணிந்துள்ளான்!
வெற்றி தரும் இடியை படையாக உடைய இந்திரனது முடியை உடைத்த பாண்டிய மன்னனது குறுந்தடியால் அடிக்கப்படும் வெற்றி முரசமானது பகையரசர்கள் மருளுமாறு நாள்தோறும் பகைவர்களைக் கொன்று வெற்றி விளைவித்து தென்னவனுக்கு அளித்து முழங்குகிறது!
அரசனுக்கு அரசனும் திங்களை ஒத்த வெண்கொற்றக் குடையினையும் வாள் வலிமையையும் உடைய வேந்தன் பாண்டியன்!
கொற்கை நகரின் தலைவனும் குமரி ஆற்றுக்கு உரிமை உடையவனும் பொதியிலாகிய பொருப்பினை உடையவன் பாண்டியன்!
முடிசூடிய மூவேந்தர்களில் பெரும்படை கொண்டு விளங்குபவர்கள் பாண்டியர்கள்!
வடநாட்டார் படைகளை தோற்கடித்து வென்று தென் தமிழ் நாடனைத்தும் ஒன்றே என்று கட்டி ஆண்டவன் பாண்டியன்!
இத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய வம்சத்தில்,
பாண்டியர்களுடைய முன்னோர்கள் பாண்டிய நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார்கள். அதனால் காற்று நன்றாக வீசியது. நட்சத்திரங்கள் காலத்துக்கு ஏற்ற கதியிலேயே நடந்தன. கதிரவனும் திங்களும் தங்களால் ஒரு குறையும் நேராமல் ஒளி வழங்கினர். மேகம் உரிய காலத்தில் மழையை பெய்தது. திசைகளெல்லாம் தழைத்தன. ஒன்று ஆயிரமாக விளை நிலங்கள் விளைந்து மல்கின. மரங்கள் நன்றாக பயன் தந்தன. பசியும் பிணியும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடம் வாழ்ந்தனர். எவ்வளவு பேர் எத்தனை காலம் உண்டாலும் குறையாத வளம் நாட்டில் நிரம்பி இருந்தது. எக்காலத்திலும் மெய்யையே கூறும் அமைச்சர்கள் அரசர்களுக்கு துணையாக இருந்து வந்துள்ளனர்.
சாதி, மதம், ஆன்மீகம் மூன்றையும் யார் சூதாட்டப் பொருட்களாக பயன்டுத்துகிறார்களோ? அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகின்றனர். பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களாக உயர்கின்றனர். இந்த மூன்றையும் சூதாட்டப் பொருட்களாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் வாழ்க்கையில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அடிமைகளாக ஆக்கப்பட்டு ஏவல் செய்யும் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். சமுதாயத்தில் இத்தகைய இழிவு நிலை உண்டாகக் காரணம் இழிந்த மனம் கொண்டவர்கள் சமுதாயத்தில் வாழ்கின்ற காரணத்தினால் தான்.
ஆனால், பாண்டிய நாட்டில் யாரும் இந்த மூன்றையும் சூதாட்டப் பொருட்களாக பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், பாண்டியர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். உலகத்திற்கே ஒழுக்கத்தை போதித்தவர்கள். ஒழுக்கத்திற்கே உதாரணமாகத் திகழ்பவர்கள் பாண்டியர்கள்.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment