April 09, 2025

ஜபம்-பதிவு-1042 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-20

 ஜபம்-பதிவு-1042

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-20
அத்தகைய சிறப்பு வாய்ந்த
உலகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களின் வழி வந்தவனே
போர்க்களத்தில் இறந்தவர்களின் உடம்புகளைப் பேய்கள் விருந்தாக உண்ணும்படி களவேள்வி செய்த பாண்டியர்களின் வழி வந்தவனே,
பொதிய மலையை உடைய பாண்டியர்களின் வழி வந்தவனே ,
சேரனும், சோழனையும் வென்ற பாண்டியர்களின் வழி வந்தவனே,
பல நாடுகளின் மேல் படையெடுத்து வேற்றரசர்களுடைய மதிலை முற்றுகையிட்டு உட்சென்று அம்மன்னர்களைப் பொருது வென்று, அவர்களைத் தன் ஏவல் கேட்கும்படி செய்து கொற்றவர் தம் கோனாக விளங்கிய பாண்டியர்களின் வழி வந்தவனே.
நண்பர்களின் குடியை உயரச் செய்து, பகைத்தவர் அரசைக் கைக்கொண்ட பாண்டியர்களின் வழி வந்தவனே!
புகழையும் முத்தையும் முத்துக் குளிப்பவரையும் அருகில் சிறிய ஊர்களையும் உடைய ஊருக்குத் தலைவனாக விளங்கிய பாண்டியர்களின் வழி வந்தவனே!
பிறருக்குக் கிடைப்பதற்கரிய பொருள்களை எளிதிலே கைக்கொண்டு அவற்றை தனக்கென்று பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்த பாண்டியர்களின் வழி வந்தவனே!
நகரத்திலே சுகமாக இருக்கலாம் என்று எண்ணாமல் பகைவரைப் பொரும் பொருட்டு மலைகளையும், காடுகளையும் கடந்து அவர்களுடைய உள்நாட்டிலே புகுந்து அரண்களைக் கைப்பற்றிப் பல காலம் அங்கங்கே தங்கிச் சிறப்புடன் போரில் வெற்றி கொள்ளும் பாண்டியர்களின் வழி வந்தவனே!
பகைவற் நாட்டிற் சென்று அவர்களுடைய காவற் காடுகளை அழித்து, வயல்களை எரியூட்டி, நாடென்னும் பெயர் மாறிக் காடு என்னும் பெயர் உண்டாகவும், பசுமாடுகள் தங்கின இடங்களில் காட்டு விலங்குகள் உறையவும், ஊராக இருந்த இடங்கள் பாழாகவும், மங்கையர் கூத்தாடி மகிழ்ந்த இடங்கள் பேயாடும் இடங்களாகவும், அங்குள்ள குடி மக்கள் பசியால் வருந்தி உறவினர்களைச் சென்றடையவும் , பெரிய மாளிகைகளில் இருந்த குதிர்கள் இப்போது சரிந்து போக அதில் கோட்டான் இருந்து கதறவும், செங்கழுநீர் பூத்துப் பொலிந்த பொய்கைகளில் கோரை வளர்ந்து மண்டவும், எருதுகள் உழுத வயல்களில் காட்டுப் பன்றிகள் ஓடித் திரியவும், அந்நாடுகள் பாழாகி விட்டன. யானைகளுடனும், படைகளுடனும் முருகன் போருக்குப் புறப்பட்டது போல் பகைவரிடம் சென்று வானத்தில் ஆரவாரம் எழ மழை போல் அம்புகளைத் தூவி குதிரைகள் புழுதி எழுப்பச் சங்கு முழங்கக் கொம்பு ஒலிக்க, அப்பகைவரை வென்று கொன்று அவர் நாடுகளை அழித்து மதில்களைக் கைக்கொண்டு அவருக்குத் துணையாக வந்தவரையும் வலியழித்து வீரம் காட்டிய பாண்டியர்களின் வழி வந்தவனே!
பகைவர்களை பாண்டியர்களின் ஏவலைக் கேட்டு நடக்கச் செய்த பாண்டியர்களின் வழி வந்தவனே!
நாடுகள் பலவற்றையும் வெற்றி கொண்டு அரசியல் பிழையாமல் அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழியே தவறாமல் ஒழுகிய பாண்டியர்களின் வழி வந்தவனே !
தேவலோகத்தையும், அமுதபானத்தையும் பெறுவதாக இருப்பினும் பொய்யை மேற்கொள்ளாமல் மெய்யையே கடைப்பிடித்த பாண்டியர்களின் வழி வந்தவனே!
உலகத்தில் யார் எதிர்த்தாலும், தேவரே எதிரிகளாக வந்தாலும் பகைவர்களுக்கு அஞ்சாமல், புதையலாக உள்ள பெருநிதி கிடைத்தாலும் பழியை விரும்பாமல், பிறருக்கு நிதிகளைக் கொடுக்கும் நெஞ்சம் உடையவர்களாக விளங்கிய பாண்டியர்களின் வழி வந்தவனே!
தம்முடைய நகரங்களிலே இருந்து கூத்தாடும் மகளிருக்கு வளைகளையும், பாணர்களுக்கு யானைகளையும் வழங்கி தம்முடைய நண்பர்களுக்கு பல பொருள்களைக் கொடுத்து, காலையிலே எழுப்பும் சூதர்களுக்குத் தேரையும் குதிரைகளையும் வழங்கி, படைத் தலைவர்களுடன் இனிய குடிவகையை உண்டு, தம்மைப் பணிந்தோர் தேசங்கள் தம் ஏவலைக் கேட்டு நடக்க, பணியாதார் தேசங்களைப் பணியச் செய்து திறை கொள்வதற்காக அவர் நாட்டுக்குச் சென்று வென்ற பாண்டியர்களின் வழி வந்தவனே!
இத்தகைய சிறப்பு பாண்டிய வம்சத்தில் வழி வந்த பாண்டிய நாட்டின் மன்னன் சித்திரவாகனன் அவர்கள் புகழ் வாழ்க!
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment